தோழர் நல்லகண்ணு : ``அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்புவோம்" - முத...
நாகை: கொலை மிரட்டல் விடுத்த தவெக மாவட்டச் செயலாளர்! - தந்தை மகன் மீது வழக்கு பதிவு
தமிழக வெற்றிக் கழகத்தின் நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் சுகுமாரன். இவரது மகன் ரொனால்டோ. தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் நாகை வந்து பரப்புரை செய்தார். அதற்கான வரவு செலவு கணக்கை திருமருகல் கிழக்கு ஒன்றிய செயலாளராக இருந்த நாகேந்திரன் கேட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இது குறித்து பொதுச்செயலாளர் என்.ஆனந்திடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சுகுமாரனுக்கும், நாகேந்திரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் நாகேந்திரன் கட்சியில் ஓரம்கட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் என்.ஆனந்தை சந்தித்து முறையிட்டு நீதிகேட்டுள்ளார் நாகேந்திரன். அப்போது சுகுமாரனிடம் போனில் பேசிய ஆனந்த், `நாகேந்திரன் பிர்சனையை விட்டு விடு, அவனுக்கு வேண்டியதை செய்து கொடு உன்னை வந்து பார்க்க சொல்கிறேன்' என சொல்லியிருக்கிறார்.
இதையடுத்து கடந்த மாதம் நாகேந்திரன் தன் ஆதரவாளர்களுடன் சென்று சுகுமாரனை சந்தித்துள்ளார். என்னை பற்றி பொதுச்செயலாளர்கிட்ட புகார் சொல்லுவியானு கேட்டு தகாத வார்த்தைகளில் ஏகத்தும் பேசியிருக்கிறாராம் சுகுமாரன்.
மேலும், `தலையை வெட்டி ரோட்டில் வீசுவேன், உன்னை பொதுச்செயலாளர்கிட்ட அழைத்து சென்ற அலெக்ஸை கால்களை தேர்தல் முடிஞ்சதும் வெட்டுவேன்' என பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அப்போது உடன் இருந்த சுகுமாரன் மகன் ரொனால்டோ, `என் அப்பாவை பற்றி பேசினால் எதை பற்றியும் யோசிக்க மாட்டேன். கல்லை கட்டி கடலில் போட்டு விடுவேனு' மிரட்டியுள்ளாராம். இது குறித்து வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இது குறித்து நாகேந்திரன், நேற்று நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, `ஒரு மாதத்திற்கு முன்பு என்னை சந்திக்க வந்த போது இந்த வீடியோவை எடுத்துள்ளனர். அதில் உள்ளது என் குரல் இல்லை, நான் பேசியது போல் எடிட்டிங் செய்து வெளியிட்டுள்ளனர். தேர்தல் வருகிறது என்பதால் காழ்ப்புணர்சியில் ஒரு மாதத்திற்கு பிறகு இதை செய்திருப்பதாக' சுகுமாரன் வீடியோ குறித்து மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், வெளிப்பாளையம் காவல் நிலைய போலீஸார் சுகுமாரன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது மகன் ரொனால்டோ மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


















