அறம்... நேர்மை.. நம்பிக்கை! எளிய மக்களின் `தோழர்' நல்லகண்ணு | வாழ்க்கை பயணம்
சல்லடை, கூடைகளுடன் அஸ்தியில் தங்கத்தை தேடும் பொதுமக்கள் - கோதாவரி ஆற்றில் நடக்கும் தங்க வேட்டை
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும் கோதாவரி ஆறு, பைதன் என்ற இடம் வழியாக செல்கிறது. இந்த பைதன் என்ற இடத்தில் பிரபல ஏகநாத் மகாராஜாவின் சமாதி இருக்கிறது. இந்த கோதாவரி ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் தங்க வேட்டையில் ஈடுபடுவதுண்டு.
கோதாவரி ஆற்றில் ஆண்டு முழுவதும் பொதுமக்கள் இறந்து போன தங்களது உறவினர்களின் அஸ்தியை கரைக்க வருவதுண்டு. அவ்வாறு அஸ்தியை கரைக்கும்போது பொதுமக்கள் இறந்தவர்களுக்கு மிகவும் விருப்பமான தங்கம், வெள்ளி, நாணயங்களை ஆற்றில் போடுவதுண்டு. அவ்வாறு போடப்படும் பொருட்கள் ஆற்றங்கரையில் சகதியில் கிடக்கும்.
அந்த தங்கத்தை எடுக்கத்தான் பொதுமக்கள் ஒவ்வொரு ஆண்டும் போட்டிபோடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் ஏக்நாத் மகாராஜா கோயில் திருவிழா நடப்பது வழக்கம். இத்திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் மாநிலம் முழுவதும் இருந்து பைதன் வருவதுண்டு.

எனவே பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜெயக்வாடி அணையில் இருந்து கோதாவரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கோதாவரி ஆற்றில் தண்ணீர் மட்டம் குறைந்து கரைகள் தெரிய ஆரம்பித்துள்ளது.
உடனே நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கையில் சல்லடை மற்றும் கூடையுடன் ஆற்றில் இறங்கி தங்கம் தேட ஆரம்பித்துள்ளனர். சிறுவர் முதல் பெரியவர் என வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் தங்களுக்கு எதாவது கோதாவரி ஆற்றில் இருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆற்றில் இருந்து மண்ணை எடுத்து சலித்து வருகின்றனர்.
இதில் அவர்களுக்கு அதிக அளவில் நாணயங்கள் கிடைத்து வருகிறது. அப்படி இருந்தும் எப்படியும் தங்களுக்கு தங்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆற்றில் இறங்கி சகதிக்குள் எதாவது கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருக்கின்றனர். சிலர் குடும்பத்தோடு வந்து தேடிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் தங்கம் தேடும் காட்சிகள் வைரலாகி இருக்கிறது.














