செய்திகள் :

நாடாளுமன்றம்: `இடைநீக்கங்கள், பதில் இல்லா கேள்விகள்' - முடங்குகிறதா ஜனநாயகத்தின் இதயம்?

post image

இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, உலகிலேயே மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட நாடாகவும் திகழ்கிறது. நமது ஜனநாயகத்தின் இதயமாகத் திகழும் நாடாளுமன்றம், மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளைக் கொண்டு இயங்குகிறது. ஆண்டுதோறும் பட்ஜெட், மழைக்காலம், குளிர்காலம் என மூன்று கூட்டத்தொடர்களும், சில நேரங்களில் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வும் நடைபெறும். இந்த கூட்டத் தொடர்களில் நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் தேவையான சட்டங்களை இயற்றுவது இதன் முக்கியப் பணியாகும்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

இருப்பினும், சமீபகாலமாக நாடாளுமன்றம் ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுப்பதைவிட, அரசியல் மோதல்களால் முடங்குவதையே அதிகம் காணமுடிகிறது. நாடாளுமன்றம் முடங்குவதால் நாட்டின் பொன்னான நேரமும், கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணமும் வீணாகிறது.

2012-ல் முன்னாள் நாடாளுமன்ற விவகார அமைச்சர் பவன் பன்சால் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துப்படி, நாடாளுமன்றத்தை ஒரு நிமிடம் நடத்துவதற்கு ரூ.2.5 லட்சம், மாநிலங்களவைக்கு தலா ரூ.1.25 லட்சம் செலவாகும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனை 2023-ம் ஆண்டில் மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர் பி.டி.டி ஆச்சார்யாவும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தக் கணக்கீட்டின்படியே நாடாளுமன்றம் ஒரு முழு வேலை நாள் இயங்குவதற்கு ஏறத்தாழ ரூ.9 கோடி வரை செலவாகிறது.

மக்கள் வரிப்பணத்தில் இவ்வளவு பெரிய தொகை செலவிடப்படும் நிலையில், நாடாளுமன்ற சபையில் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெறுவது குறைந்து வருவது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் விவாதங்களில் பங்கேற்பதற்குப் பதிலாக வெளிநடப்பு செய்வதும், ஆளுங்கட்சி விவாதங்களைத் தவிர்ப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

ஓம் பிர்லா
ஓம் பிர்லா

ஒரு நாளில் ஒரு மணிநேரம் சபை முடங்கினால்கூட சுமார் 1.5 கோடி ரூபாய் வீணாகிறது. ஒரு சாமானிய மனிதனின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றப் பயன்பட வேண்டிய இந்தப் பெரும் தொகை, வெறும் கூச்சல் குழப்பங்களால் வீணடிக்கப்படுவது ஜனநாயகத்தின் மாண்பைக் குறைப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இப்படி தொடர்ந்து நாடாளுமன்றம் முடங்குவதற்கு யார் காரணம்? அதனால் யாருக்கு லாபம் என்றக் கோணத்தில் ஊடகவியலாளர் நாதனை தொடர்புகொண்டோம். ``நாடாளுமன்றத்தின் தொடர்ச்சியான முடக்கங்கள் நாட்டின் ஜனநாயகத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது" என இந்த விவகாரம் குறித்து நம்மிடம் விரிவாகப் பேசத் தொடங்கினார்...

``பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, நாடாளுமன்றத்தில் சட்டங்கள் நிறைவேற்றப்படுவது அதிகரித்திருக்கிறது. ஆனால், வாக்கெடுப்புகள் நடத்துவது குறைந்துவிட்டது. பல முக்கியப் பிரச்னைகளுக்கு நாடாளுமன்ற கமிட்டிகள் கோரப்பட்டபோதும், அவை மறுக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக, இந்தியா-அமெரிக்கா வணிக ஒப்பந்தம் போன்றவை நாடாளுமன்றத்துக்கு சம்பந்தமில்லாமல் தனியாக செய்யப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களை திறந்தவெளியில் விவாதிக்காமல், விவரங்கள் இல்லாமல் ஒரு சட்டகமாக (framework) மட்டும் வழங்கப்படுகின்றன. இதனால், எதிர்க்கட்சிகளுக்கு நாடாளுமன்ற உரிமைகளை வழங்காத நிலை உருவாகியிருக்கிறது.

ஊடகவியலாளர் நாதன்
ஊடகவியலாளர் நாதன்

முன்பெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் அரிதான ஒன்று. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் (suspension) செய்வது அதிகரித்துள்ளது. ராணுவ தளபதி நரவானேயின் புத்தகம், எப்ஸ்டீன் பைல்களில் மோடி, அமைச்சர்கள், அனில் அம்பானி போன்றோரின் பெயர்கள் வந்தது போன்றவை விவாதிக்கப்பட வேண்டியவை. ஆனால், அது எதுவும் நடக்கவில்லை. இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், பிரதமர் உரை இல்லாமலே நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா, "எதிர்க்கட்சிகள் பிரதமரை தாக்கத் திட்டம் வைத்துள்ளதாக தகவல் வந்தது" என்று கூறியுள்ளார். சபாநாயகர் எப்போது உளவுத்துறை தலைவராக ஆனார்? நாடாளுமன்றம் ஜனநாயகத்தைக் கைவிட்டு சர்வாதிகாரத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்றே கருதுகிறேன்.

எதிர்க்கட்சிகள் சரியான விவாதங்களை முன்னெடுப்பதில்லை என்று ஆளுங்கட்சி கூறுகிறது. ராகுல் காந்தி 'மோடி நாடாளுமன்றத்துக்கு வந்தால், நரவானேயின் புத்தகத்தை கொடுக்கிறேன். அதைப் படித்து உண்மையைத் தெரிந்துகொள்ளட்டும்." என்றார். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு ஆளும் அரசு பதில் சொல்ல வேண்டும். அந்த உரையாடல்தான் நாட்டுக்கும், மக்களுக்கும் ஆரோக்கியமான ஆட்சியைத் தரும். ஆனால் இங்கு, கேள்வி கேட்கக்கூடாது என்ற நிலைக்கு பா.ஜ.க சென்றுகொண்டிருக்கிறது.

ராகுல் காந்தி, அமித் ஷா
ராகுல் காந்தி, அமித் ஷா

அதன் வெளிப்பாடுதான் 'சபாநாயகர் பாரபட்சமாக செயல்படுகிறார்' என எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. நரவானே எழுதிய புத்தகம் இன்னும் வெளியிடப்படவில்லைதான். ஆனால், புத்தகத்தில் சொல்லப்பட்டது உண்மையா இல்லையா? அதுதான் வாதத்துக்கு உரியது. அதற்கு பதில்சொல்ல வேண்டுமல்லவா?

காங்கிரஸ் ஆட்சியின்போது, போபார்ஸ் பீரங்கி ஊழல் விவகாரத்தில் ஆவணங்கள் கசிந்தது. அப்போது பா.ஜ.க விசாரணை கோரியது. "இந்த ரகசிய ஆவணங்கள் உங்களுக்கு எப்படி கிடைத்தது?" என்று யாரும் கேட்கவில்லை. ஏனென்றால் அது கருத்து சுதந்திரம், பேச்சுரிமை சம்பந்தப்பட்டது. ஆனால் இங்கு புத்தகத்தையே முடக்கி வைத்திருக்கிறார்கள். இப்படி இருந்தால் எப்படி நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்படும்?

தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ.3,500 கோடி கல்வி நிதி முடக்கப்பட்டிருக்கிறது. `இந்தி மொழியை ஏற்காவிட்டால் விடுவிக்க முடியாது' என்று சொல்கின்றனர். 100 நாள் வேலைத்திட்டத்துக்கு தமிழகத்துக்கு தொகை விடுவிக்கவில்லை. ஜல்ஜீவன் திட்டத்துக்கான நிதி முடக்கி வைத்துள்ளனர். இவை குறித்து எம்.பி-க்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் உரிய பதில் இல்லை.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

'காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்பதுதான் பா.ஜ.க-வின் லட்சியம். காங்கிரஸுக்கே இந்த கதி என்றால், மாநில எதிர்க்கட்சிகள் நிலை என்ன என்பது கவலைக்குரிய விஷயம். இது ஜனநாயகத்துக்கு பெரிய ஆபத்து. எனவே, எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி போதுமான பலத்தைப் பெறாமல், கூட்டணி மனக்கசப்பால் உள்ளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து, நாடாளுமன்றத்துக்கு வெளியே, மக்கள் மன்றத்தில், நாடாளுமன்றத்தில் மறுக்கப்பட்ட கேள்விகளை முன்வைக்க வேண்டும். அப்போதுதான் அது மக்களிடம் சென்றடையும். அதை எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ், செய்யத் தவறிவிட்டதுதான் துரதிஷ்டம்." என்றார்.

சேலம்: `10 வருஷமாகியும் குழந்தைக்கு பிறப்பு சான்று கிடைக்கல'- அலட்சிய அதிகாரிகள்; அல்லாடும் பெற்றோர்

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், தாத்தியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் - வினோதா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்து, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகியும் பிறப்புச் சான்றிதழ் பெறமுடியாமல் போராடி வருக... மேலும் பார்க்க

`டெல்லி ஆட்சியாக இருந்தால் இருந்துட்டுப் போகட்டுமே' - சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்லில் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தும் 4வது நாள் உள்ளிருப்பு போராட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெர... மேலும் பார்க்க

'காங்கிரஸின் தவறு தான் அது'; சுட்டிக்காட்டிய மாணிக்கம் தாகூர் - 2006 தேர்தலில் நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது.தொகுதிப் பங்கீடு பேசக் குழு அமைக்காததால் வருத்தம் என டெல்லியிலிருந்து காங்கிரஸ் ஒரு பந்தை வ... மேலும் பார்க்க

ஐஜேகே 4-வது மாநில மாநாடு! - வேப்பூரில் திரண்ட தொண்டர்கள்!

இந்திய ஜனநாயக கட்சியின் (IJK) நான்காவது மாநில மாநாடு, கடலூர் மாவட்டம் வேப்பூரில் பிப்ரவரி 8 அன்று கட்சியின் நிறுவனர் Dr. T.R. பாரிவேந்தர் தலைமையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. செங்கோட்டை மற்றும் தலைமை... மேலும் பார்க்க

நாளை நடக்கவிருந்த செவிலியர் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ரத்தா? - கடைசி நேரத்தில் நடந்தது என்ன?

கோவிட் காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு சென்னையில் நாளை பணி நியமன ஆணை வழங்க இருந்த நிகழ்ச்சி, ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது`தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் செவி... மேலும் பார்க்க

`ராகுல் காந்தியின் எம்.பி பதவியைப் பறிக்க வேண்டும்!' - நிஷிகாந்த் துபே தீர்மானம் தாக்கல்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்துவதாகக் குற்றம்சாட்டி, பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே மக்களவையில் வியாழக்கிழமை 'தனி நபர் தீர்மானம்' (Substantive Motion) ஒன்றை தாக்கல் ச... மேலும் பார்க்க