மருத்துவர் டு மந்திரியான ராஜீவ் - மீண்டும் முக்கியத்துவம் பெறும் திருவாடானை தொகு...
``நான் ஆசிரமத்துக்குப் போகிறேன்... இனி அங்குதான் இருப்பேன்!" - பிரசாந்த் கிஷோரின் அதிரடி முடிவு
தேர்தல் வியூகவகுப்பாளரும், ஜன சுராஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர், பாட்னாவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஓர் ஆசிரமத்திற்கு குடிபெயர்ந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக பீகாரில் தர்பங்கா பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``நேற்றிரவு, பாட்னாவில் நான் வசித்து வந்த இல்லத்தைவிட்டு வெளியேறி IIT-பாட்னாவுக்கு அருகில் அமைந்துள்ள பீகார் நவ்நிர்மாண் ஆசிரமத்தில் தங்கிவிட்டேன். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ஜன சுராஜ் கட்சி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். அதுவரை நான் ஆசிரமத்தில்தான் இருப்பேன். தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரால், பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் இடம்பெயர்வதைத் தடுக்க முடியவில்லை.
அதனால் அவரே சட்டமன்றத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு சென்றுவிட்டார். அவர் அங்கு செல்வதற்கு முன்பு தன் மகன் அரசியலில் நிலையான இடத்தை பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, அதற்கு அஸ்திவாரமிட்டிருக்கிறார்." என நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அவரின் மகன் நிஷாந்த் குமாரை அமைச்சரவையில் இடம்பெறச் செய்ததை குறிப்பிட்டு பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், ``பீகார் வாக்காளர்கள் சாதி, மதம் அல்லது பணப் பரிசுகளின் அடிப்படையில் வாக்களிப்பதற்குப் பதிலாக, தங்கள் சொந்த நலன்களுக்கே முன்னுரிமை அளித்து வாக்களிக்க வேண்டும். பீகார் மக்கள் வாக்களிக்கும்போது தங்கள் சொந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். பிரதமர் மோடி, நிதிஷ் குமார், லாலு பிரசாத் போன்ற தலைவர்களின் பேச்சால் அவர்கள் பயங்காமல் அந்தப் பேச்சில் இருக்கும் உண்மைகளை ஆராய வேண்டும். மேலும், 10,000 ரூபாய்க்காகத் தங்கள் வாக்குகளை விற்கக் கூடாது. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு 10 ரூபாய் வரை உயரக்கூடும். நாம் ஒரு பெரும் உர நெருக்கடியையும் சந்திக்க நேரிடலாம்.
இதுவரை விவசாயிகள் உரங்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகப் புகார் கூறி வந்தனர். ஆனால் இனிமேல், உரங்கள் அறவே கிடைக்காத ஒரு சூழலை அவர்கள் சந்திக்க நேரிடலாம். பீகார் நாட்டின் மிக ஏழ்மையான மாநிலமாகத் திகழ்கிறது. ஆனால் அதன் முதலமைச்சர் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு இல்லத்தில் வசிக்கிறார். அந்த இல்லத்தின் தோட்டங்களைப் பராமரிப்பதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். இப்போது, துணை முதலமைச்சராக இருந்தபோது அவர் வசித்த பங்களாவையும் முதலமைச்சரின் இல்லத்துடன் இணைத்து, அந்த வளாகத்தை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக நாங்கள் கேள்விப்படுகிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.











