'கோயம்பேடு டு கமலாலயம்... இல்லையா அறிவாலயம்?' - பிரேமலதாவின் 'சஸ்பென்ஸ்' பாலிடிக...
"நினைத்ததையெல்லாம் எழுதி விட்டேன்; இப்போது காலன் வந்தாலும் தயார்"- தெ.ஞானசுந்தரத்திற்கு அரசு மரியாதை
கடந்த ஞாயிற்றுக்கிழமை மறைந்த தமிழறிஞர் தெ.ஞானசுந்தரத்தின் உடல் இன்று சென்னையில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
பேச்சாளர், எழுத்தாளர், பேராசிரியர், ஆய்வாளர் எனப் பன்முக ஆளுமையாகத் திகழ்ந்த முனைவர் தெ.ஞானசுந்தரத்தின் இழப்பு தமிழ் இலக்கிய உலகத்துக்குப் பேரிழப்பு என்றால் மிகையில்லை.
கம்ப ராமாயணத்தைக் கரைத்துக் குடித்தவர். கம்பர் தாண்டி வால்மிகி ராமாயணத்தையும் கற்றறிந்து வைத்திருந்தார். 'கூடுதலாக ஒரு மொழி கற்றுக் கொண்டால் நல்லதுதானே' என மலையாளமும் கற்றிருந்தார். வைணவ இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம் என எதையும் விட்டு வைக்காதவர்.
இவரது உரை கேட்டோர், அந்த அனுபவங்களை விவரிப்பதே அவ்வளவு அழகாக இருக்கும். 'மேடையில் அவர் பேசினால், அது பொது நிகழ்ச்சி என்றாலும் எதிரே அமர்ந்திருப்பவர்கள் வகுப்பில் அமர்ந்திருக்கும் மாணவர்கள் போல அத்தனை அமைதியாக உட்கார்ந்து கவனிப்பார்கள்' என்கிறார், கவிஞர் பிருந்தா சாரதி.

"கம்பனைப் பாடியவர், வைணவத்தைக் குறைவில்லாது ஊட்டியவர். அவருக்கு ஈடு இணை இல்லை ஒருவரே உலகில்" என்கிற பத்திரிகையாளர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம் அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட வேண்டுமெனக் கோரிக்கையையும் வைத்திருந்தார்.
இரு வாரங்களுக்கு முன் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் அவருடன் பொங்கல் கொண்டாடியதை நினைவுகூர்ந்த முன்னாள் துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷைய்யன், அந்தக் கொண்டாட்டங்களின் ஊடே, தெ.ஞா பேசிய சில வார்த்தைகளைக் குறிப்பிட்டுள்ளார்.

‘தற்போது என்ன நூல் எழுதுகிறீர்கள் அல்லது திட்டமிட்டிருக்கிறீர்கள்?’ என்று அங்கு அப்போது கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில்..
"நான் எழுத நினைத்ததையெல்லாம் எழுதிவிட்டேன். நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்; இப்போது காலன் வந்தால்கூட வரவேற்பேன்", என்பதுதானாம்.



















