BB Tamil 9 Day 52: பாருவின் கிச்சன் ஏரியா அலப்பறைகள்; எஃப்ஜே - வியானா லவ் டிராக்...
`நீங்கதான் அடுத்த செங்கோட்டையன்னு சொன்னாங்க..!’ டு டென்ஷனான கனிமொழி! - கழுகார் அப்டேட்ஸ்
தென்மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக, தூத்துக்குடி மாவட்டமும் பாதிப்படைந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, தூத்துக்குடி எம்.பி-யான கனிமொழி பல்வேறு பகுதிகளில் நேரடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி, திருவைகுண்டம் தொகுதிக்குள் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, அந்தத் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் மட்டும் மிஸ்ஸாகிவிட்டாராம். இது குறித்து தி.மு.க நிர்வாகிகளிடம் கனிமொழி விசாரித்தபோது, 'அவர் ஊரிலேயே பாதி நேரம் இருக்கமாட்டார். மழை பாதிப்பு ஏற்பட்ட இந்தச் சூழலில்கூட களத்துக்கு வராம இருக்கார்...' என்று தூபம் போட்டிருக்கிறார்கள்.
இதனால், டென்ஷனான கனிமொழி, 'தென்மண்டலப் பொறுப்பாளர் என்ற முறையில், நான்கு மாவட்டங்களிலுள்ள அனைத்து தொகுதிகளுக்கும் நான்தான் பொறுப்பு. ஒரு தொகுதி தோற்றாலும் எனக்குத்தான் அவமானம். இனி எம்.எல்.ஏ-வை நம்பிட்டு இருக்காம, நீங்க களத்தில இறங்கி வேலையைப் பாருங்க. இந்தத் தொகுதியில, நாமளே நிற்கும்படி தலைமையிடம் நான் பேசுறேன்...' என்றியிருக்கிறாராம். கனிமொழியிடமிருந்தே இப்படி உத்தரவாதம் கிடைத்திருப்பதால், குஷியாகியிருக்கிறார்கள் திருவைகுண்டம் தொகுதி தி.மு.க-வினர்!
அல்வா மாவட்டத்தில், ஒன்றிய அளவில் போஸ்டிங் போடுவதற்கு, ஏகப்பட்ட ஆட்களிடம் ஸ்விட் பாக்ஸ்களை வசூலித்திருக்கிறாராம் மாவட்டச் செயலாளரான முன்னாள் சட்டசபைப் புள்ளி. ஆனால், அவரின் போதாத காலம், அவர் கைவசமிருந்த இரண்டு தொகுதிகள் பிரிக்கப்பட்டு, வேறு ஒருவருக்குப் போய்விட்டது. இதனால், ஸ்விட் பாக்ஸ்களைக் கொடுத்தவர்களுக்கு போஸ்டிங் போட முடியாத சூழ்நிலை உருவாகிவிட்டது. தற்போது, கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்களைத் திருப்பிக் கேட்டிருக்கிறார்கள் நிர்வாகிகள். ஆனால், அதை வைத்துதான் தனது ஊரில் பிரமாண்ட மாளிகை ஒன்றைக் கட்டிவருகிறாராம் அந்த மா.செ. அத்துடன் தனது பதவியைக் காப்பாற்ற, சீனியர் அமைச்சர் ஒருவருக்கும் படியளந்திருக்கிறாராம். இதனால், வாங்கிய ஸ்விட் பாக்ஸுகளைத் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறாராம் அந்த மா.செ. இதில் டென்ஷனாகும் நிர்வாகிகள், 'கொடுக்குறீங்களா... இல்ல தலைமையிடம் புகார் கொடுக்கவா..?' என்று மா.செ-வை நச்சரித்து வருகிறார்களாம்!
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட பிறகு, அவரின் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு, மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ ஏ.கே.செல்வராஜை நியமித்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தன்னை மா.செ-வாக சுதந்திரமாகச் செயல்படவே விடுவதில்லை எனக் கடுப்பாகிறாராம் செல்வராஜ். இது குறித்து தனது நெருக்கமானவர்களிடம், “மா.செ பொறுப்பு கொடுக்கும்போது, நீங்கதான் அடுத்த செங்கோட்டையன்னு சொன்னாங்க... ஆனா, ஒரு கிளைச்செயலாளர் போஸ்டிங்கூட என்னால போட முடியல. எல்லாமே தலைமையின் உறவினர்கள் கன்ட்ரோலில்தான் இருக்குது... ரொம்ப வெறுப்பா இருக்கு... என்னிடம் சொல்லாமலேயே என் மாவட்டத்துல கூட்டம் நடத்த பிளான் போடுறாங்க... இது குறித்தெல்லாம் சீக்கிரமே தலைமையிடம் பேசணும்...' என்றிருக்கிறார். இந்த விவகாரம் எடப்பாடியின் உறவினர்கள் காதுகளுக்குச் செல்லவே, 'அவ்வளவு பெரிய பொறுப்பில் அவரை ஏன் நியமிச்சோம்ன்னு, இன்னும் அவருக்கே தெரியல பாருங்களேன்...' எனச் சிரித்திருக்கிறார்கள்!
சட்டமன்றத் தேர்தல் வருவதையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னையில் பொதுக்கூட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாள் பொதுக்கூட்டம், தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம், எஸ்.ஐ.ஆர் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் என, சமீபத்தில் சென்னையில் நடத்தப்பட்ட எந்தக் கூட்டத்துக்கும் 500 பேர்கூட கூடவில்லையாம். நா.த.க-வில் மாநிலப் பொறுப்பாளர்கள் தொடங்கி பூத் கமிட்டி நிர்வாகிகள் வரை, எல்லா மட்டத்திலும் நியமனங்கள் முடிந்தவிட்டன.

ஆனாலும், ‘நிர்வாகிகள்கூட வராத காரணத்தால்தான் கூட்டமில்லாமல் நிகழ்ச்சிகள் காத்து வாங்குகின்றன...’ என்ற தகவல் காதுகளுக்கு எட்டவே, டென்ஷாகிவிட்டாராம் சீமான். 'ஏன் நிர்வாகிகள்கூட கூட்டத்துக்கு வருவதில்லை. வராதவங்களுக்கு எதுக்கு பொறுப்பு... ட்வீட் மட்டும் போட்டு ஏமாத்துறாங்களா... உங்களையெல்லாம் நம்பி பிப்ரவரி 7-ம் தேதி திருச்சி மாநாடு வேற அறிவிச்சிருக்கேன்... என்ன செய்ய காத்திருக்கீங்களோ தெரியல...' என்று சீனியர் நிர்வாகிகளிடம் கொத்தளித்திருக்கிறார் சீமான்!
தி.மு.க கூட்டணியில் கைவசமுள்ள தொகுதிகளில், நெகட்டிவ் தொகுதிகளைக் கொடுத்துவிட்டு, பாசிட்டிவாக இருக்கும் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவது குறித்து தனிக் கணக்கு போட்டுவருகிறார்கள் வி.சி.க சீனியர்கள். அதன்படி, காட்டுமன்னார் கோவில், செய்யூர், நாகை ஆகிய தொகுதிகளைத் தக்கவைக்க முடிவு செய்திருக்கிறார்களாம். அதேநேரத்தில் திருப்போரூர் தொகுதி தனக்கு நெகட்டிவாக இருப்பதால், மயிலம் தொகுதியைக் குறிவைக்கிறார் எஸ்.எஸ் பாலாஜி. 'கடந்த முறை தோல்வியைத் தழுவிய வானூர், அரக்கோணம் தொகுதிக்குப் பதிலாக, திண்டிவனம் அல்லது மதுராந்தகம் தொகுதியைக் கேட்கவும், கூடுதலாக சீட் கிடைத்தால் கள்ளக்குறிச்சி, அரூரை கேட்க வேண்டும்' எனவும் ஏகப்பட்ட கணக்குகளைப் போடுகின்றனர் சீனியர்கள். ஆனால், 'எவ்வளவு சீட் வாங்க வேண்டும்... எந்தெந்த தொகுதிகளை வாங்க வேண்டும்... யார் யாரெல்லாம் வேட்பாளர்கள்...' என்ற டாப்பிக்கை ஓப்பனே செய்யாமல் சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறார் திருமா. இது சீட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் பலரின் வயிற்றிலும் புளியைக் கரைத்திருக்கிறது...' என்கிறார்கள் அம்பேத்கர் திடல் வாசிகள்!














