செய்திகள் :

BB Tamil 9 Day 52: பாருவின் கிச்சன் ஏரியா அலப்பறைகள்; எஃப்ஜே - வியானா லவ் டிராக்; என்ன நடந்தது?

post image

இரண்டாம் நாள் ஸ்கூல் டாஸ்க்கிலும் சுவாரசியம் இல்லை. நன்றாகப் படித்து ‘குட்’ வாங்க வேண்டிய மாணவர்கள், கொட்டு வாங்கி திருட்டுக் கொட்டுக்களாக சேட்டை செய்தார்கள். அரோரா, சுபிக்ஷா, வியானா என்று எங்கு பார்த்தாலும் அழுகை மயம். 
படிப்பதற்கான சவால்கள் இருந்தாலும், ஒவ்வொருவரின் வாழ்விலும் மாணவப்பருவம் என்பது மகிழ்ச்சிகரமான நினைவுகள் நிறைந்தது. அந்த நாஸ்டால்ஜியா அனுபவத்தை மீட்டுக்கொண்டு வர இவர்களால் முடியவில்லை. 


பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 52

“சுபிக்ஷா.. உன் முடியை கொஞ்சம் கட் பண்ணித் தாயேன்” என்று அதை வைத்து பிராங்க் செய்ய முடிவு செய்தார் விக்ரம். பாருவிடம் ஒரண்டை இழுத்தால்தான் வீடே அதிரும் என்பதால் அவரின் பின்னால் சென்று முடியைக் கத்தரித்ததுபோல் நடிக்க ‘குய்யோ.. முய்யோ’ வென்று கதறி ஊரையே கூட்டினார் பாரு. 

கொஞ்ச நேரம் இந்த ‘ரோம பஞ்சாயத்து’  ஓடியது. “டிஎன்ஏ டெஸ்ட் பண்ணி பார்த்தா இது யாரு முடின்னு தெரிஞ்சிடும்” என்று அசந்தர்ப்பமாக ஜோக் அடித்தார் வினோத். இறுதியில் இது பிராங்க் என்பது தெரிவிக்கப்பட்டதும் “எனக்கு தெரியும். இருந்தாலும் முடியை கட் பண்றதெல்லாம் ரொம்ப தப்பு” என்று கோபம் அடங்காமல் பேசிக் கொண்டிருந்தார் பாரு.

BB TAMIL 9: DAY 52
BB TAMIL 9: DAY 52

பள்ளிப்பிள்ளைகளாக சுவாரசியமாக ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால் ஆளாளுக்கு திருட்டுக் கொட்டுகளாக இருந்தார்கள். வியானா சில பொருட்களை ஒளித்து வைக்க, ஸ்கூல் பெல்லை எடுத்து ஒளித்துவைத்தார் சுபிக்ஷா. 

நாள் 52

‘தாத்தா.. தாத்தா தண்ணிக்குள்ள.. ’ என்கிற குழந்தைப் பாடலுடன் பொழுது விடிந்தது. காலையிலேயே ஒரு வில்லங்கமான புகார். வார்டன் பாருவிற்கு மாணவர் கம்ருதீன் இரவில் கால் அமுக்கி விட்டாராம். (கம்மு.. இது தேவையா?!) இதைப் பற்றி ஆசிரியர்கள் விசாரிக்க “அஸிஸ்டென்ட் வார்டன் எஃப்ஜே கூட வியானா கூட நைட்டல ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தாரு” என்று போட்டுக் கொடுத்தார் கம்ருதீன். (அடேய்களா.. ரெசிடென்ஸியல் ஸ்கூல்ன்னு நான் போர்டு மாட்டி வெச்சா.. என் தொழிலையே மாத்திடுவீங்க போல - பிக் பாஸ் மைண்ட் வாய்ஸ்!)

கம்ருதீன் சொன்ன பொய்யை உண்மையாக்குவதற்காகவோ, என்னவோ கிச்சன் டீமில் இருந்த பாரு “என்னால முடியல. காலெல்லாம் வலிக்குது. நீ தூங்கிட்டு இருந்தபோது அந்த வேலையெல்லாம் நான்தான் செஞ்சேன்” என்று புலம்பிய படி வேலை செய்யாமல் அமர்ந்திருக்க, அதை ஏற்க மறுக்காமல் சண்டை போட்டுக் கொண்டிருந்தார் எஃப்ஜே. 

ராஜமாதாவின் பதவியை எப்படியாவது பறிக்க வேண்டும் என்று சபதம் போட்டு கிச்சனிற்குள் புகுந்த பாரு சமைக்கவும் தெரியாமல், அதற்கான உழைப்பும் தராமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய மோசமான சமையல் காரணமாக மற்றவர்களுக்கும் அவஸ்தை. 

BB TAMIL 9: DAY 52
BB TAMIL 9: DAY 52

இந்த எபிசோட் முழுக்க திருடிய பொருட்களினால் ஏற்படும் கோபமாகவே அமைந்து விட்டது. சபரி எடுத்து வைத்திருந்த மாதுளம் பழங்களை அரோரா ஒளித்து வைத்திருந்தார். “நான் மாத்திரை போடணும்... பசிக்குது.. சீரியஸா கேட்கறேன். யாராவது ஒளிச்சு வெச்சிருந்தா கொடுத்துடுங்க” என்று சபரி உருக்கமாக கேட்க “நான் கண்டுபிடிச்சு தரேன். நீ போ” என்று துரத்தி விட்டார் அரோரா. 

ஆனால் பசி தாங்காமல் “சாப்பாடு விஷயத்துல கூட விளையாடுவீங்களா..?” என்று சபரி கத்த, ஒளித்து வைத்திருந்த பழங்களை எடுத்துத் தந்த அரோரா பிறகு கண்ணீர் விட்டார். கேட்கும் போதே தந்திருக்கலாம். கண்கலங்கிய அரோராவை பிறகு சமாதானம் செய்தார் சபரி. (சபரிக்கு மட்டும் ஏன் லவ் டிராக் இல்லை. ஏண்டா சாமியார் மாதிரி இருக்கே..? என்று வீடியோ காலில் வந்த தோழிகூட கிண்டலடித்தார்). 

சபரி கத்திய காட்சியை புரொமோவில் போடுமளவிற்கு இந்த எபிசோடில் ஒன்றுமே சுவாரசியமாக நடக்கவில்லை. கிச்சன் ஏரியாவில் பாரு செய்யும் குளறுபடியால் மாணவர்களுக்கு சரியான நேரத்தில் சாப்பாடு கிடைக்கவில்லைபோல. இதனால் தமிழ் டீச்சர் கனி, கிச்சன் டீமிடம் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். 

அமித்தின் ஷூக்களை ஒளித்துவைத்த வியானாவின் அநியாயக் குறும்பு

அமித் ஆங்கிலப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். மனிதருக்கு பாட வரும் என்பதால் வாக்கியங்களைக்கூட பாடலாகவே மாற்றியது அழகு. “சார்.. யூ.. ஸ்டாண்டிங் ஃபிபோர்.. போர்டை மறைச்சிட்டு இருக்கீங்கன்றதை எப்படி சொல்றது?” என்று தத்தக்கா பித்தக்கா ஆங்கிலத்தில் வினோத் பேசியது காமெடி.

அமித்தின் ஷூக்களை வியானா எடுத்து ஒளித்து வைத்திருந்தார். எனவே அதை மறைமுகமாக சுட்டிக் காட்ட “சார்.. நீங்க வேற. வேற ஷூவை மாத்தி போட்டிருக்கீங்க” என்று நைசாக சொல்லிப் பார்த்தார். “வியானா நீ பண்றது நல்லா இல்ல, அமித் சார் பாவம்” என்று எச்சரித்தார் விக்ரம். 

BB TAMIL 9: DAY 52
BB TAMIL 9: DAY 52

வியானாதான் ஷூக்களை ஒளித்து வைத்திருக்கிறார் என்பது அமித்திற்கு புரிந்தது. “எனக்கு கால் வலிக்குது வியானா. கொடுத்துடு” என்றாலும் வியானா கல்லுளி மங்கினியாக இருந்து விட்டு, அமித்தின் அனத்தல் தாங்காமல் “நான் ஸ்கூல்ல இதை விட சேஷ்டையெல்லாம் செஞ்சிருக்கேன். டீச்சர் தலைல சிக்கன் துண்டு போட்டிருக்கேன்” என்று பழைய சம்பவங்களை பெருமிதத்துடன் கூறி, அந்தச் சம்பவங்களுக்கு முன்னால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று உணர்த்த முயன்றார். 

பாவம் அமித். பிறந்த நாள் அதுவுமாக கால் வலியின் கோபத்தில் கத்த பிறகு வியானா கட்டிலின் அடியில் இருந்து எடுத்து தந்ததைப் பார்த்தால் ஒரு ஷூ கடையே வைக்கலாம் போல. ஒவ்வொரு ஜோடியில் இருந்தும் ஒன்றை ஒளித்து வைத்திருந்ததால் அமித்திற்கு எதையுமே உபயோகிக்க முடியாத நிலைமை. Mismatched shoe-க்களை போட்டுக் கொண்டு உயரமான அவரால் சரியாக நடக்க முடியாமல் முதுகு வலியில் அவஸ்தைப் பட்டார் போலிருக்கிறது. 

பெரும்பாலும் ஜென் மனநிலையில் இருக்கும் அமித்தே கோபப்பட்டு கத்தியதைப் பார்த்து கட்டிலின் அடியிலேயே படுத்து கண்ணீர்விட்டார் வியானா. அடுத்த அழுகை சுபிக்ஷாவுடையது. மற்ற மாணவர்களின் ஐடிக்கள் எல்லாம் தரப்பட்ட நிலையில் குறும்பு செய்த சுபிக்ஷா மற்றும் வியானாவின் ஐடி கார்டுகள் மட்டும் தரப்படவில்லை. 

அடுத்தக் கட்டத்திற்கு நகரும் எஃப்ஜே - வியானா லவ் டிராக்

“பிக் பாஸ் உள்ளே வந்து மத்தவங்க போட்டோ எல்லாம் வந்திருக்கு. என் போட்டோ மட்டும் வரவேயில்ல. அட்லீஸ்ட் ஐடி கார்டுலயாவது பார்க்கலாம்ன்னு இருந்தேன்” என்று கண்கலங்கிய சுபிக்ஷாவை சபரி சமாதானப்படுத்தினார். யாரோ ஒளித்து வைத்திருந்த கார்டை, எஃப்ஜே காட்டிக் கொடுக்க, சபரி எடுத்து வந்து தந்து சுபிக்ஷாவின் கண்ணீர் காணாமல் போக உதவி செய்தார். 

பசியாக இருந்த ரம்யாவிற்கு உடனே தராமல் ‘வரிசையில் வா.. எல்லோரும் வந்தபிறகுதான் உணவு தர முடியும்’ என்று எஃப்ஜே சொன்னதால் இருவருக்கும் சண்டை. ‘ரம்யாவிடம் மன்னிப்பு கேட்டால்தான் பள்ளிக்கு வருவோம்’ என்று விக்ரம் தலைமையில் ஒரு போராட்டம். பிறகு எஃப்ஜே சர்காஸ்டிக்காக மன்னிப்பு கேட்க உப்புக்கு உதவாத இந்தப் போராட்டம் முடிவிற்கு வந்தது. 

BB TAMIL 9: DAY 52
BB TAMIL 9: DAY 52

எஃப்ஜே - வியானா ரொமான்ஸ் டிராக் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. ஆதிரையுடன் எஃப்ஜே நடத்திய சேஷ்டைகளை அதே வீட்டில் இருந்த வியானா நிச்சயம் பார்த்திருப்பார். என்றாலும் அதே வலையில இவரும் விழுவதற்குக் காரணம், ஒன்று ‘லவ் டிராக்’ இருந்தால்தான் பிக் பாஸ் வீட்டில் சர்வைவ் ஆக முடியும் என்கிற தவறான நம்பிக்கை அல்லது ‘இது வாலிப வயசு’ என்கிற காரணத்தால் உண்மையாக ஈர்ப்பு ஏற்பட்டிருக்கலாம்.

“உன்னைப் பார்த்தா ‘பாணா காத்தாடி சமந்தா’ மாதிரி இருக்கிற” என்று வியானாவிடம் அள்ளி விட்டுக் கொண்டிருந்தார் எஃப்ஜே. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ சமந்தா என்பதற்குப் பதில் தப்பாக சொல்லி விட்டார் போலிருக்கிறது. 

“நான் கேரக்டர் ரோல் மட்டும்தான் பண்றேன். உன்னை எனக்குப் பிடிக்காது” என்று வியானா ஜாடையாக தன்னை சேஃப் செய்து கொள்ள “அப்படின்னா.. நைட்டு பேசினது கேரக்டர் கிட்டயா.. எஃப்ஜே கிட்டயா?” என்று லாஜிக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார் எஃப்ஜே. 

சாம்பார் + கோதுமை மாவு - செஃப் பாருவின் புதுமையான மெனு

தமிழ் டீச்சர் கனியம்மாவிற்கு திருக்குறளை விட்டால் வேறு தெரியாது போலிருக்கிறது. அதை வைத்து இன்றும் வகுப்பை ஓட்ட, ரஜினி மற்றும் எம்.ஜி.ஆர் ஸ்டைலில் திருக்குறள்களை கம்ருதீன் சொன்னது ரசிக்க்கத்தக்கதாக இருந்தது. அவர் வீட்டுக்குள் இருந்த இத்தனை நாட்களில், ரசிக்கத்தக்க அளவில் செய்த ஒரே விஷயம் இதுதான். 

வியானாவின் உடையை நீச்சல் குளத்தில் போடுவது போல விளையாடிக் கொண்டிருந்தார் விக்ரம். பதிலுக்கு விக்ரமின் பேன்ட்டை நீரில் போட்டு ஆட்டினார் வியானா. மைக் நனைந்து விடக்கூடாது என்று பிக் பாஸிற்கு கூட அத்தனை அக்கறை இருக்காது போல. வியானாவின் மைக் நனையாமல் இருக்க மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டார் வினோத். 

BB TAMIL 9: DAY 52
BB TAMIL 9: DAY 52

ஒரு கட்டத்தில் வியானாவை நீச்சல் குளத்தில் விக்ரம் தள்ளி விட, உள்ளே இருந்த எஃப்ஜேவிற்கு ஆட்டோமேட்டிக் ரொமான்ஸ் அலாரம் அடித்தது. “ஏம்ப்பா.. போட்டுக்க வேற நைட் டிரஸ் கூட இருக்காது. ஏன் தண்ணில தள்ளினே?” என்று விக்ரமிடம் ஹீரோ போல பாய்ந்து வந்து எஃப்ஜே கேட்க “எல்லாம் ஒரு கன்டென்ட்தான். போய்யா” என்பது மாதிரி சென்றார் விக்ரம். “நீ எனக்காக பேசியது கேரக்டருக்காகவா, இல்ல உண்மையாவா? என்று பிறகு எஃப்ஜேவிடம் விசாரித்துக் கொண்டிருந்தார் வியானா. (பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி விடுவதில் பெண்கள் கில்லாடிகள்!)

கிச்சன் ஏரியாவில் பாருவின் அலப்பறை கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தது. சாம்பாரில் தண்ணீர் அதிகமாகிவிட்டதால் அமித்தின் யோசனைப்படி கோதுமை மாவை எடுத்து கொட்டிக்கொண்டிருந்தார். அவர் கொட்டிய மாவில் இருந்து ஒரு ஊருக்கே சப்பாத்தி செய்திருக்கலாம். சாம்பாரும் கோதுமை மாவும் கலந்த வஸ்துவைப் பார்க்க நமக்கே குமட்டிக்கொண்டு வந்தது. இந்த லட்சணத்தில் “கிண்டறதுல நாம எக்ஸ்பர்ட் ஆச்சே?” என்று தனக்குத் தானே சான்றிதழ் தந்து கொண்டார் பாரு. 

‘சாம்பார்ல கோதுமை மாவா, இல்ல கோதுமை மாவுல சாம்பார் இருக்கா?” என்று திவ்யாவும் சாண்ட்ராவும் பிறகு கிண்டலடித்துக் கொண்டே சாப்பிட்டார்கள். 

பாருவை கிச்சன் ஏரியாவில் தவிக்கவிட்டதில் நடந்த ஒரே நல்ல விஷயம், வீடு அதிகம் சண்டை இல்லாமல் அமைதியாக இருந்தது மட்டும்தான். 

BB Tamil 9: ``இந்த லெட்டர் மூலமா பர்சனல் அட்டாக் பண்ணிருக்காங்க'' - காட்டமான பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. முதலில் 20 பேருடன் தொடங்கிய நிலையில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர்.இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பி... மேலும் பார்க்க

BB Tamil 9: `அவர் அப்படித்தான் பேசுவார்' பிரஜின் விவகாரத்தில் முன்கூட்டியே கணித்த விஜய் சேதுபதி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வார எவிக்ஷனுக்கான ஷூட்டிங்கில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, வைல்டு கார்டு என்ட்ரி மூலம் உள்ளே போன திவ்யா, பிரஜின், சாண்ட்ரா ஆகிய மூவருடனும் கார சாரமாக விவாதித்தது நினைவிரு... மேலும் பார்க்க

BB Tamil 9: "சாப்பிடுற விஷயத்துல விளையாடாதீங்க"- கோபப்பட்ட சபரி; அழுத அரோரா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. முதலில் 20 பேருடன் தொடங்கிய நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பி... மேலும் பார்க்க

BB Tamil 9: `அவருக்கு பதில் இவர்' கமிட்மென்ட்டுக்காக அவசரமாக வெளியேறினாரா கெமி?

விஜய் டிவியில் கிட்டத்தட்ட பாதி நாட்களைக் கடந்து விட்டது பிக் பாஸ் சீசன் 9. சமூக ஊடக பிரலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் கலந்துகொள்ள 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பிறகு நான்கு சின்னத்திர... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 51: டிரையாங்கிள் லவ் ஸ்டோரி; ‘என்னை ஆன்ட்டின்னு கூப்பிடாத’ - பாரு கோபம்

இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க். 10, +2 மாணவர்களைப்போல் நடந்துகொள்ளச் சொன்னால் எல்கேஜி மாணவர்களைப்போல் இம்சை செய்தார்கள். அதிலாவது என்டர்டெயின்மென்ட் வருமா என்று பார்த்தால் இல்லை.பிக் பாஸ் வீட்டில் நடந்தது எ... மேலும் பார்க்க