`நீங்கதான் அடுத்த செங்கோட்டையன்னு சொன்னாங்க..!’ டு டென்ஷனான கனிமொழி! - கழுகார் அ...
Hong Kong: 32 மாடிகள் கொண்ட 8 கட்டிடங்கள்: ஒரே நேரத்தில் தீ பற்றிய சோகம்; 44 பேர் பலி!
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு நாடான ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் 44 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹாங்காங்கில் உள்ள தை போவில் அமைந்துள்ளது வாங் ஃபுக் நீதிமன்றம் (Wang Fuk Court) என்ற உயரமான குடியிருப்பு வளாகம். இந்த வளாகத்தில் 32 மாடிகள் கொண்ட 8 கட்டிடங்கள் இருக்கின்றன. அதனால் மிகுந்த அடர்த்தியான குடியிருப்பு வளாகம் எனக் கூறப்படுகிறது.
இந்தக் கட்டிடம் பழுதுபார்க்கப்பட்டு வந்தது. அதற்காக மூங்கில் சாரக்கட்டுகளால் கட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில், சீன நேரத்தின்படி நேற்று பிற்பகல் 2:50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.

பலத்த காற்று, எளிதில் தீபற்றும் மூங்கில் சாரக்கட்டுகள் போன்றவற்றால், தீ மளமளவென அடுத்தடுத்த கட்டிடங்களுக்கும் பரவியிருக்கிறது. இந்த தீ விபத்தில், தீயணைப்பு வீரர் ஒருவர் உட்பட 44 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 279 பேர் காயமடைந்ததாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.
இந்த விபத்தைத் தொடர்ந்து 900-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
மேலும், தீயைக் கட்டுக்குள் கொண்டுவரவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கவும் உத்தரவிட்டிருக்கிறார். மீட்புப் பணியைத் துரிதப்படுத்தி, இன்னும் கட்டிடத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

















