"45 நாட்கள் தினசரி 2.5 லட்சம் பயணிகளை தவிக்கவிட்டுள்ளது தெற்கு இரயில்வே" - சு.வெ...
நீதித்துறையில் ஊழல்... NCERT பாடத்தில் சர்ச்சை : `திட்டமிட்ட தாக்குதல்' என சாடும் தலைமை நீதிபதி
8-ஆம் வகுப்பு NCERT பாடப்புத்தகத்தில், "நீதித்துறை ஊழல்" என்ற பெயரில் புதிய பாடம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இது நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து இன்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர்கள், நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இது குறித்து பேசுகையில்,''நீதித்துறைல் ஊழல் என்று பாடப்புத்தகத்தில் சேர்த்து இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. நீதித்துறையின் மூத்த உறுப்பினர்களாகிய நாங்கள் 'நீதித்துறை ஊழல்' 8 ஆம் வகுப்பு புத்தகங்களில் ஒரு பகுதியாக இருப்பதைப் பற்றி மிகவும் கவலையடைந்துள்ளோம்," என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், ``இது எனக்கும் தெரியும். நீதிபதிகளிடமிருந்து இது தொடர்பாக தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

நீதித்துறையின் நேர்மையை அவதூறு செய்யவும், கேள்வி கேட்கவும் யாரையும் நான் அனுமதிக்க மாட்டேன். இப்பிரச்னை எந்த அளவுக்கு சென்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும். நீதித்துறை மீது எந்த தாக்குதலையும் நீதிமன்றம் அனுமதிக்காது.
இந்த நடவடிக்கை நீதித்துறையின் மீதான திட்டமிடப்பட்ட மற்றும் ஆழமான தாக்குதல் ஆகும். உச்ச நீதிமன்றம் யாரையும் நீதித்துறையின் நேர்மையை அவதூறு செய்யவோ அல்லது கேள்வி கேட்கவோ அனுமதிக்காது. இந்த பிரச்சினை பற்றி உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட ஏராளமானோரிடருந்து தொடர்ந்து அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் எனக்கு வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் நீதித்துறையில் ஊழல் என்ற தலைப்பில் பாடப்புத்தகத்தில் வந்திருப்பது குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்''என்று தெரிவித்தார்.
மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, இது குறித்து பேசுகையில்,'' நீதித்துறை தனிமைப்படுத்தப்படுவது போல் தெரிகிறது. நீதித்துறையில் மட்டுமே ஊழல் இருப்பது போல் உள்ளது. அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் அல்லது வேறு யாரைப் பற்றியும் எந்த தகவலும் இல்லை. இது மற்ற பகுதியிலும் உள்ளது. ஆனால் நீதித்துறை மட்டும் குறிவைக்கப்பட்டுள்ளது" என்று சிங்வி தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் இது குறித்து தங்களது கவலையை வெளிப்படுத்தி இருந்தனர். ஏற்கனவே பா.ஜ.க தலைவர்கள் பலர் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து பல முறை விமர்சனம் செய்துள்ளனர்.















