ஜம்மு-காஷ்மீர்: விபத்துக்குள்ளான ராணுவ வாகனம்... 10 வீரர்கள் பலி, பலர் படுகாயம்!...
நெல்லை: சாலையில் தூக்கி வீசப்பட்ட ஆண் சிசுவின் சடலம்; நாய் கவ்விச் சென்ற அவலம்; பின்னணி என்ன?
நெல்லை, மேலப்பாளையம் அருகில் உள்ளது மேலநத்தம். இங்கு பழைய அரிசி ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலைக்குச் செல்லும் சாலையின் ஓரத்தில் தெருநாய் ஒன்று சிவப்பு நிறத் துணி சுற்றப்பட்ட ஒரு பார்சலை கவ்விச் சென்று வாயால் துணியை அகற்றி எதையோ கடித்துக் கொண்டிருந்தது. அப்பகுதி வழியே சென்ற முதியவர் ஒருவர் இதைப் பார்த்துள்ளார்.

நாயின் அருகில் சென்று பார்த்ததும், அந்தத் துணிக்குள் இறந்த ஆண் சிசுவின் உடல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நாயை அவர் விரட்ட முயலவே குரைத்துக்கொண்டே அவரைக் கடிக்கப் பாய்ந்துள்ளது.
கம்பால் அடித்து நாயை விரட்டிவிட்டுள்ளார். பின்னர், மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கு போனில் தகவல் கூறியுள்ளார். விரைந்து வந்த போலீஸார், உயிரிழந்த சிசுவின் உடலை மீட்டனர். அந்தச் சிசு நஞ்சுக் கொடியுடன் காணப்பட்டது.
சிசுவின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஆண் குழந்தை பிறந்து 3 மணி நேரம் மட்டுமே இருக்கும் எனக் கூறியுள்ளனர். பிரேதப் பரிசோதனைக்காக சிசுவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தெருநாய் சிசுவின் உடலை எங்கிருந்து கவ்விக்கொண்டு வந்தது என்பது குறித்து அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகள் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில் இந்தக் குழந்தை எந்த மருத்துவமனையில் பிறந்தது, மேலப்பாளையம் சுற்று வட்டாரப் பகுதியிலுள்ள மருத்துவமனைகளில் ஒரே நாளில் குறிப்பிட்ட நேரத்தில் ஆண் குழந்தை பிறந்து இறந்த விவரங்களையும் சேகரித்து வருகின்றனர். வீட்டில் பிரசவம் ஏற்பட்டு உயிரிழந்ததா என்ற தகவலையும் விசாரித்து வருகின்றனர்.



















