குற்றாலத்தில் பதுங்கியிருந்த பிரபல சென்னை ரெளடி - துப்பாக்கி முனையில் சுற்றி வளை...
நெல்லை: செல்போனில் பேச்சு… கேட்காத அக்கா.. ஓட ஓட விரட்டிக் கொன்ற தம்பி; நடந்தது என்ன?
நெல்லை மாவட்டம், தேவர்குளத்தைச் சேர்ந்தவர் ராமராஜ். விவசாயியான இவரது மனைவி சவுந்தரி. இவர்களுக்கு ராதிகா என்ற மகளும், கண்ணன் என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில், சவுந்தரியும், கண்ணனும் வேலூரில் உள்ள ஒரு கம்பெனியில் தங்கியிருந்து அப்பளம், கடலை மிட்டாய் மற்றும் திண் பண்டங்களைத் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். இதனால், தேவர்குளத்தில் தந்தை ராமராஜும், மகள் ராதிகாவும் தங்கியிருந்துள்ளனர்.

இதனிடையே பொங்கல் பண்டிகைக்காக கடந்த 20 நாள்களுக்கு முன்பு சவுந்தரியும், கண்ணனும் தேவர்குளத்திற்கு வந்துள்ளனர். ராதிகாவின் உறவினர் ஒருவர் அதே ஊரில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
ராதிகாவும், அவரது உறவினரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்த விவகாரம் ஊருக்கு வந்த தாய் சவுந்தரி மற்றும் தம்பி கண்ணனுக்குத் தெரியவர இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால், இதனைப் பொருட்படுத்தாத ராதிகா தொடர்ந்து பேசி வந்துள்ளார்.
இதனால், கண்ணனுக்கும் ராதிகாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்றிரவு சவுந்தரி மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் அருகில் உள்ள மற்றொரு உறவினர் வீட்டிற்குச் சென்றனர். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், ராதிகா மீண்டும் அந்த உறவினரிடம் செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது வீட்டிற்குள் நுழைந்த கண்ணன், ராதிகாவிடமிருந்து செல்போனைப் பிடுங்கியதுடன் கண்டித்தாராம். மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட, ராதிகாவை ஓட ஓட விரட்டிச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் முகம், கழுத்து, கை, கால்களில் பலத்த காயமடைந்த அவர் கீழே சரிந்து விழுந்தார். ராதிகாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட தெரு மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.
இதற்கிடையில் கண்ணன், தேவர்குளம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


















