`பேரிடரை ஏற்படுத்தி விடாதீர்கள்' - சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கையை குறைத்த கேர...
‘‘பங்கைப் பிரி... பங்கைப் பிரி...’’ - கூட்டணிப் பேச்சுவார்த்தை பஞ்சாயத்து!
‘50 தொகுதி லட்சியம்... 40 தொகுதி நிச்சயம்’ - கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது நம் அரசியல்வாதிகள் சொல்லும் `பங்கைப் பிரி’ தொகுதிப் பங்கீட்டுக் கோரிக்கை இது! சிறிய, பெரிய கட்சிகள் பிரச்னையில்லாமல் பங்கு பிரித்துக்கொள்ள சில `அகாதுகா’ சினிமா ஐடியாக்கள் இதோ...
அந்நியன் ஸ்டைல்
பிரஸ் மீட்டில் கட்சியின் செய்தித் தொடர்பாளர், ``கூட்டணி தர்மத்துக்காக எதையும் தியாகம் செய்வோம். எதற்காகவும் கூட்டணியைத் தியாகம் செய்ய மாட்டோம்!’’ என்று `அம்பி'யாகப் பேசலாம். ஆனால், அன்று இரவு நடக்கும் ரகசியப் பேச்சுவார்த்தையில், தலைவர் `அந்நியன்' மோடுக்கு மாறி, ``லிஸ்ட்ல இருக்குற 20 சீட்டும் எனக்கு வேணும். ஒண்ணு கொறஞ்சாலும் கூட்டணி கலைஞ்சிடும்!” என கருட புராண கும்பி பாக ஸ்டைலில் மிரட்டலாம்.
பாட்ஷா ஸ்டைல்
பல வருஷமா கூட்டணிக்குள்ள குத்தவெச்சு `மாணிக்கம்' மோடில் இருக்கும் சிறிய கட்சி, பங்கீடுனு பேச்சை ஆரம்பிச்ச உடனே `பாட்ஷா' மோடுக்கு மாறி, ``நாங்க இல்லாம நீங்க ஜெயிச்சிருக்க முடியாதுப்பே... எங்களுக்கு 25 சீட் வேணும். போன எலெக்ஷன்ல நாங்க வாங்குன 2% ஓட்டையும், உள்ளாட்சி தேர்தல்ல வாங்குன 0.06%-ஐ ஓட்டையும் கூட்டி நான்கால பெருக்கி மூன்றால வகுத்தா ஒவ்வொரு ஓட்டும் நூறு ஓட்டுக்கு சமம்!’’னு கணக்கு சொல்லி, பெரிய கட்சியையே அதிர்ச்சிக்குள்ளாக்கலாம்.

நாட்டாமை ஸ்டைல்
பெரிய கட்சி, எல்லாக் கூட்டணிக் கட்சிகளையும் ஒரு பஞ்சாயத்து செட்-அப்பில் அமர வைக்கலாம். ``இந்தாடா கண்ணு, உனக்கு 3 சீட்டு. நீ போன தடவை தோத்த, அதனால உனக்கு ஒரு சீட்டு. உனக்கு இதயத்துல ஒரு இடம்!’’னு தீர்ப்பு போல நேக்கா பிரிக்கலாம். நடுவுல யாராவது எதிர்த்துப் பேசி, ``தீர்ப்பை மாத்திச் சொல்லு நாட்டாமை’’ன்னு கூவுனா, ``யார்றா இவன் ஆமை புகுந்த கணக்கா... இந்தக் கூட்டணியில இனி உனக்கு இடமில்லை கண்ணு!’’ன்னு சொல்லிக் கழற்றிவிடலாம்.
கில்லி ஸ்டைல்
``மதுரைல இந்த ஏரியா, சென்னைல அந்த ஏரியா... தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி ஆல் ஏரியாலயும் நம்ம கொடிதான் பறக்குது!’’ன்னு சொல்லி, ``எங்க தலைவர் போன மாசம் அந்தத் தொகுதில டீ குடிச்சாரு, அதனால அது எங்களுக்கு வேணும்,’’ ``எங்க கட்சி ஆபீஸுக்கு அந்தத் தொகுதிலதான் செங்கல் வாங்கினோம், அது எங்களுக்கு வேணும்!’’ என்று சம்பந்தமே இல்லாமல் சிறிய கட்சிகளிடம் பிம்பிலிக்கி பிலாக்கி சொல்லி ஆட்டையப் போடலாம்.
திருவிளையாடல் ஸ்டைல்
பெரிய கட்சித் தலைவரிடம் சென்று, ``தலைவரே... கட்சி நடத்தவே கஷ்டமா இருக்கு. ஒரே ஒரு சீட்டு மட்டும் குடுங்க. என் கட்சித் தொண்டர்களை நான் காப்பாத்தணும். இல்லன்னா, நாங்க தனித்துப் போட்டி..!’’ என்று தருமி போல அழுது புலம்பி சீட் வாங்கலாம். அவரும், ``சரி.. சரி... இந்தா புடி! ஆனா டெபாசிட் போகக்கூடாது!’’ என்று கருணை அடிப்படையில் ஒதுக்கலாம்.
பஞ்ச தந்திரம் ஸ்டைல்
கூட்டணியில் இருக்கும் இரண்டு சிறிய கட்சிகளும் பேசி ஆளுக்கு 5 சீட் வாங்கலாம். பின்பு அவர்களே ரகசியமாகப் பேசி, ``உனக்கு ஒதுக்குன சீட்ல மட்டும் ஒழுங்கா வேலை செய். நான் எனக்கு ஒதுக்குன சீட்ல மட்டும் வேலை செய்றேன். மீதி இடங்கள்ல குழப்பி குத்த வச்சு எதிரணியை ஜெயிக்க வச்சிரலாம். அப்போதான் இந்தப் பெரிய கட்சிக்கு நம்ம அருமை புரியும்!’’ என்று ‘பிளான் பி’-ஐ தந்திரமாகப் போடலாம்.
படையப்பா ஸ்டைல்
அந்தச் சிறிய கட்சிக்கு 1% ஓட்டு வங்கிகூட இருக்காது. ஆனால் பேச்சுவார்த்தையில், ``எங்களுக்கு 15 சீட் வேணும், 5 ராஜ்ய சபா சீட் வேணும், 3 மந்திரி பதவி வேணும்’’ என்று நீலாம்பரி மாதிரி டிமாண்டுகளை அடுக்கினால், பெரிய கட்சித் தலைவர், படையப்பா மாதிரி சிரித்துக்கொண்டே, ``அதிகமா ஆசைப்படற கட்சிக்கு சீட்டே கிடைக்காது. உனக்குக் கூட்டணியில் இடமே இல்லை!’’ என்று துண்டை உதறிவிட்டுக் கதவைச் சாத்தலாம்.
கரகாட்டக்காரன் ஸ்டைல்
சிறிய கட்சித் தலைவர்களைக் குழப்பிவிட்டு பங்குகளை ஆட்டையைப் போடலாம். அதாவது, “தலைவரே, நாங்க ரெண்டு சீட்டு கேட்டோம்”னு அவர்கள் இழுத்தால், “ஆமா... ரெண்டு சீட்டு கேட்டீங்க. ஒண்ணு இந்தா தந்துட்டேன்... மீதி எத்தனைன்னு சொல்லுங்க பார்ப்போம்?’’னு கேட்கலாம். ``ஒண்ணு தலைவரே!”னு அவங்க சொல்லும்போது, ‘‘அதான் ஒண்ணு ஏற்கெனவே கொடுத்தாச்சே..?’’ன்னு சொல்லிக் குழப்பிவிட்டு குரூப் டான்ஸ் ஆடலாம்.


















