ரூ.1,414 கோடி சொத்து; திகார் சிறை; ட்ரபிள்ஷூட்டர்; இனி முதல்வர்? - யார் இந்த டி....
பணம், நேரம் - எது முக்கியம் என்பதை எடுத்துச் சொல்லும் காலக் கணக்கீடு உங்களுக்குத் தெரியுமா?
''நான் பெரும் பணக்காரன் ஆகவேண்டும்'' - இப்படி ஆசைப்படாதவர்கள் இருக்கவே முடியாது. ஆனால், இந்த ஆசை எத்தனை பேருக்கு நிறைவேறுகிறது. நூற்றில் ஒன்று, இரண்டு பேர் பெரும் பணக்காரர் ஆகிறார்கள். இன்னுமொரு 18 பேர் சுமாரான பணக்காரர் ஆகிறார்கள். மீதமுள்ள 80% பேரில் 40% பேர் நடுத்தர வர்க்கத்தினராகவும், மீதமுள்ள 40% பேர் ஏழைகளாகவும் இருக்கிறார்கள்.
நூறு பேரில் 80% ஓரளவுக்குக்கூட பணம் சம்பாதிக்க முடியாமல் போவதற்கு என்னதான் காரணம்? கடின உழைப்பு இல்லை என்பது ஒரு காரணமாக இருக்க முடியாது. காரணம், எல்லோரும் கடினமாக உழைக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், சிலரது கடின உழைப்பு மட்டுமே பெரிய வெற்றியைத் தருகிறது.
அதிர்ஷ்டம் இல்லை என்று சொல்ல முடியுமா? முடியாது. பெரும் பணம் சம்பாதிக்க அதிர்ஷ்டம் வேண்டுமெனில், அது யாரோ ஒருவருக்குத்தான் கிடைக்கும். அந்த ஒருவனாக நான் இருக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படலாம். ஆனால், அந்த அதிர்ஷ்டம் நமக்குக் கிடைத்தால்தான் உண்டு.

அப்படியானால், பலரும் பணம் சம்பாதிக்காமல் போக என்னதான் காரணம்? இந்த ஒரு முக்கியமான கேள்விக்கான பதில், நேரம் என்பதுதான். யார் ஒருவர் நேரத்தின் மதிப்பை அறிந்து அதை சரியாகப் பயன்படுத்துகிறாரோ, அவர் பெரும் பணக்காரர் ஆகிறார். யார் ஒருவர் நேரத்தின் மதிப்பை அறியாமல், அதை வீணடிக்கிறாரோ, அவர் ஏழை ஆகிறார்!
பிசினஸ் செய்து பெரும் பணத்தை சம்பாதிப்பதாக இருந்தாலும் சரி, முதலீடு செய்து பெரும் பணத்தை ஈட்ட நினைப்பவராக இருந்தாலும் சரி, நேரத்தின் மதிப்பை உணர்ந்து செயல்பட்டால், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு நிறைய, நிறைய பணத்தை நம்மால் நிச்சயம் சேர்க்க முடியும்!
இதை நமக்கு மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது காலக் கணக்கீடு... இது என்ன காலக் கணக்கீடு?

ஒரு மனிதன் பிறந்தது முதல் இறக்கிற வரை அவன் வாழும் காலத்தை எல்லாம் கணக்கில் கொண்டு, ஒருவர் எந்த வயதில் ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கிறார், அதற்காக எவ்வளவு காலத்தையும் உழைப்பையும் செலவு செய்கிறார் என்பதைக் கணக்கிட்டுப் பார்ப்பதுதான் காலக் கணக்கீடு.
உதாரணமாக, ஒரு மனிதனின் ஆயுள் காலம் 80 ஆண்டுகள் என்று வைத்துக்கொள்வோம். காரணம், இன்றைக்கு நம்மில் 80% பேர் 80 வயதுக்கு மேல் வாழக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இந்த 80 ஆண்டுகளை 8 பத்து ஆண்டுகளாகப் பிரித்துக்கொள்வோம்.
இந்த 8 பத்து ஆண்டுகளில் முதல் 20 ஆண்டுகள் ஒரு மனிதன் குழந்தையில் இருந்து பெரியவனாக வளர்வதற்கும், பள்ளி, கல்லூரியில் படிப்பதற்கும் செலவு செய்கிறான். ஓர் ஆண்டுக்கு 365 நாள்கள் எனில், முதல் 20 ஆண்டுகளில் அதாவது, முதல் 7300 நாள்களைத் தன்னை வளர்த்துக்கொள்ளவே காலம் போய்விடுகிறது. ஒரு மனிதன் பெரும் பணக்காரர் ஆக இந்தக் காலத்தில் முக்கியமான எந்த விஷயத்தையும் நம்மில் பலர் செய்வதில்லை.
இதே போல, 61 வயது முதல் 80 வயது வரையிலான காலம் ஓய்வுக் காலம். ஒரு மனிதன் சேர்த்துவைத்த பணத்தைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து, சிறப்பாக செயல்பட்டு, அதைப் பெருக்கிக் கொள்வதற்கான காலம் இது. இந்தக் காலத்தில் புதிதாக பணத்தை சேர்ப்பதைவிட, சேர்த்த பணத்தை சரியாக நிர்வாகம் செய்து, அதன் மதிப்பைத் தொடர்ந்து அதிகரிப்பதன் மூலமே ஒருவர் பெரும் பணக்காரர் ஆகமுடியும். இந்தக் காலத்திலும் ஒருவர் சிறு தவறு செய்தாலும், பெரிய அளவில் பணத்தின் மதிப்பை இழக்க வேண்டியிருக்கும். எனவே, 7300 நாள்களையும் ஒருவர் பெரிய அளவில் கணக்கில் கொள்ள முடியாது.

அப்படியானால், 21 வயது 60 வயது வரையிலான 40 ஆண்டுகள் மட்டுமே ஒரு மனிதன் சிறப்பாக செயல்பட்டு உழைத்து சம்பாதித்து, அதை சரியாக முதலீடு செய்வதன் மூலம் பெரும் பணக்காரர் ஆகமுடியும். அதாவது, 14,600 நாள்களில் ஒரு மனிதன் எப்படிப் பணத்தை ஈட்டுகிறான், அதை எந்த வகையில் முதலீடு செய்கிறான், அவன் எதிர்பார்த்த லாபம் கிடைக்கிறதா என்பதை எல்லாம் வைத்துத்தான் ஒரு மனிதன் பெரும் பணக்காரன் ஆகிறானா, இல்லையா என்பது முடிவாகிறது.
14,600 நாள்கள் அல்லது 40 ஆண்டுகள் என்பது நமக்கு மிக மிக நீண்ட காலமாகத் தோன்றுகிறது. இந்த 14,600 நாள்களில் சில நாள்களையோ, சில வாரங்களையோ, சில மாதங்களையோ, சில ஆண்டுகளையோ ஒத்திப் போட்டால், என்ன குறைந்துவிடப் போகிறது என்கிற கேள்விதான், ஒவ்வொரு செயலையும் நாளைக்கு செய்யலாம், அடுத்த வாரம் அல்லது அடுத்த மாதம் செய்யலாம் என்று தள்ளிப்போட வைக்கிறது. பல சமயம் இது ஆண்டுகள் வரைகூட தள்ளிப்போய்விடுகிறது. ஒரு மனிதன் பெரும் பணக்காரன் ஆகமுடியாமல் போவதற்கு மிக முக்கியமான காரணம், நேரத்தின் மதிப்பை உணராமல், முதலீட்டையும் உழைப்பையும் தள்ளிப்போடுவதுதான்!
21 வயதில் ஒரு மனிதன் மிகக் குறைந்த தொகையை சேர்த்தாலே போதும் மிகப் பெரிய அளவில் பணம் சேர்க்க முடியும் என்பதற்கான கணக்கைப் பார்ப்போமா?

ஒருவர் 21 வயது முதல் 60 வயது வரையிலான 40 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.5000 வீதம் மியூச்சுவல் ஃபண்டில் சேர்த்தால், 12% லாபத்தில் அவருக்குத் திரும்பக் கிடைப்பது, ரூ.4.85 கோடி. ஆனால், அவர் கட்டிய தொகை ரூ.24 லட்சம் மட்டுமே! அதே நபர் 31 வயதுல் 60 வயது வரையில் ரூ.5000 வீதம் 30 ஆண்டுகள் சேர்த்தால், அவருக்குத் திரும்பக் கிடைக்கும் பணம் ரூ.1.54 கோடி. அவர் கட்டிய தொகை ரூ.18 லட்சம். அதே நபர் 41 வயது முதல் 60 வரை ரூ.5,000 வீதம் 20 ஆண்டுகள் சேர்த்தால், அவருக்குத் திரும்பக் கிடைக்கும் பணம் ரூ.45.99 லட்சம் மட்டுமே. அவர் கட்டிய தொகை ரூ.12 லட்சம். அவரே 51 வயது முதல் 60 வயது வரையிலான 10 ஆண்டுகள் மட்டும் பணம் சேர்த்தால், அவருக்குத் திரும்பக் கிடைப்பது ரூ.11.20 லட்சம் மட்டுமே! அவர் கட்டிய தொகை ரூ.6 லட்சம்.
ஆக, ஒரே தொகையை நீண்ட காலம் முதலீடு செய்ததன் மூலம் ஒரு மனிதன் அடையும் லாபம், 20 மடங்கு அதிகம். அதே அளவு பணத்தை 10 ஆண்டுகள் மட்டுமே கட்டும்போது கிடைக்கும் லாபம் ஒரு மடங்கு மட்டுமே!
நேரத்தின் மதிப்பை அறிந்து செயல்பட்டதால் கிடைத்த லாபத்தைப் பார்த்தீர்களா? பெரும் பணத்தை சம்பாதிக்க பணத்தைவிட நேரம்தான் முக்கியம் என்பதைக் காலக் கணக்கீடு சரியாக எடுத்துச் சொல்கிறதா? இனிமேலும் நேரத்தை வீணக்காமல் நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கினால், நீங்களும் பெரும் பணம் சேர்த்து, பெரும் பணக்காரர் ஆவது உறுதி.
என்.ஆர்.ஐ.களுக்கான சிறப்புக் கூட்டம்!
UAE NRI-களுக்கான சிறப்பு நிதி வழிகாட்டல் நிகழ்ச்சி மே 30, 2026 சனி அன்று மதியம் 12:30 மணிக்கு நடைபெறுகிறது. கலந்துகொண்டு உங்களின் முதலீடு குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் பெறுங்கள். முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-may30-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_may30_2026
(குறிப்பு: UAE NRI அல்லாதோர் இந்நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்).
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் முதலீட்டை சரியானபடி அமைத்துக்கொள்ள 'லாபம்' மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம் முதலீட்டு ஆலோசனை தருகிறது. உங்களுக்கும் முதலீட்டு ஆலோசனை வேண்டும் எனில், பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...
NRI Calendly - https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri
Labham Youtube Video: www.youtube.com/@labham_money
Labham Website: https://labham.money/tamil



















