குபுகுபுவென எரிந்த மஹிந்திரா கார் - என்னது, பேட்டரி காரணம் இல்லையா? டிரைவிங் ஸ்ட...
பனிப்பொழிவில் சிக்கி இறந்த எஜமானர்; 4 நாள்களாக உடலைப் பாதுகாத்த வளர்ப்பு நாய்; இமாச்சலில் நெகிழ்ச்சி
இமாச்சலப் பிரதேசத்தில் தற்போது கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. பனிப்பொழிவு நடைபெறும் இடத்தில் யாராவது தனியாகச் சென்று சிக்கிக்கொண்டால் பனிக்கட்டியில் சிக்கி உயிர் பிழைப்பது கஷ்டம்.
அங்குள்ள சம்பா மாவட்டத்தில் பார்மவுர் என்ற இடத்தைச் சேர்ந்த விகாஷ் ரானா, பியூஸ் ஆகியோர் கடந்த சில நாள்களுக்கு அங்குள்ள பர்மனி கோயிலுக்குச் சென்றனர். இதில் விகாஷ் ரானாவிற்கு 13 வயதுதான் ஆகிறது. அவர்கள் தங்களுடன் வளர்ப்பு நாயையும் அழைத்துச் சென்று இருந்தனர். ஆனால் திடீரென அவர்கள் காணாமல் போய்விட்டனர்.

அவர்களைக் காணாமல் அவர்களின் உறவினர்கள் பல இடங்களில் தேடி இறுதியில் போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து பனிப்பொழிவான பகுதியில் தேட ஆரம்பித்தனர்.
4 நாள் சாப்பிடாமல் எஜமானரைப் பாதுகாத்த நாய்
ஒரு இடத்தில் நாய் ஒன்று அமர்ந்திருந்தது. அங்குதான் அவர்கள் இரண்டு பேரும் பனிப்பொழிவில் சிக்கி இறந்து கிடந்தனர். அவர்களுடன் வந்த வளர்ப்பு நாய் அவர்கள் இறந்து கிடந்த இடத்தில் கடந்த நான்கு நாட்களாக எங்கேயும் செல்லாமல், சாப்பிடாமல் கடுமையான பனிப்புயல், காற்றையும் பொறுத்துக்கொண்டு தனது எஜமானர்களின் உடலைப் பாதுகாத்துக்கொண்டு நின்றது.
மீட்புக்குழுவினர் வந்தபோது அவர்களை அங்கு நின்ற நாய் இருவர் உடல் அருகில் நெருங்க விடாமல் ஆக்ரோஷமாக இருந்தது. அதன் பிறகு அந்த நாயைச் சமாதானப்படுத்தினர். பிறகு அந்த நாயும், வந்தவர்கள் உதவி செய்யத்தான் வந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து ஒதுங்கி வழிவிட்டது. இரண்டு பேரின் உடல்களை மீட்டு எடுத்துச்செல்லும் வரை அந்த நாய் அருகில் நின்று கொண்டிருந்தது அனைவரது கண்களில் கண்ணீரை வரவழைக்கும் விதமாக இருந்தது.
இருவரது உடலை நாய் பாதுகாத்து நின்ற வீடியோ சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாகி இருக்கிறது. நாய் தங்களது எஜமானர்கள் மீது எந்த அளவுக்குப் பாசம் வைத்திருக்கிறது என்பது இதைப் பார்க்கும்போது தெரிய வருகிறது. இருவரும் கோயில் உச்சியைத் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுக்க முயன்றபோது 5 அடி பனிப்பொழிவு பகுதியில் தவறி விழுந்ததாகத் தெரிய வந்துள்ளது.




















