ஈரான் போர்: `100 நாட்கள், 7000 உயிர்கள், முடிவற்ற அவலம்' - ட்ரம்ப் சொன்ன ‘விரைவா...
பார்சல் மூலம் போதைப்பொருள் வாங்கிய விஞ்ஞானி - கூரியர் ஊழியர்கள் தகவலால் போலீசில் சிக்கியது எப்படி?
மகாராஷ்டிரா மாநிலம், புனே ஹவேலி பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் சர்காலே (39). விஞ்ஞானியான இவர் கேரள மாநிலம் ஆலப்புழா தேசிய வைராலஜி நிறுவனத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக 'டெக்னிக்கல் ஆபீசர்' ஆகப் பணியாற்றி வருகிறார். இவர் வெளிநாட்டிலிருந்து கூரியர் மூலம் தனக்குத் தேவையான ரசாயனப் போதைப்பொருளை ஆர்டர் செய்வது வழக்கம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே அவர் ஆர்டர் செய்த பார்சல் ஒன்று கொச்சி சேரானல்லூரில் உள்ள சர்வதேச கூரியர் நிறுவனத்தின் முதன்மை மையத்திற்கு கடந்த சனிக்கிழமை வந்து சேர்ந்தது. பார்சலில் ஆலப்புழா முகவரி குறிப்பிடப்பட்டிருந்ததால், அது அங்கு வந்து சேர மேலும் இரண்டு நாள்கள் தாமதமாகும் என்பதை ஆன்லைன் டிராக்கிங் மூலம் பிரசாத் சர்காலே அறிந்துகொண்டார். இரண்டு நாள்கள் தாமதத்தை தவிர்க்க விரும்பிய அவர் கடந்த சனிக்கிழமை மாலை கொச்சியில் உள்ள கூரியர் அலுவலகத்திற்கு நேரடியாகவே சென்று பார்சலை பெற்றுக்கொண்டார். ஆலப்புழா முகவரியில் உள்ள ஒருவர், கொச்சி அலுவலகத்திற்கு நேரில் வந்து அவசரமாக பார்சலை வாங்கியதும், அவரது பதற்றமான நடத்தையும் கூரியர் ஊழியர்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. கூரியர் அலுவலக ஊழியர்கள் உடனடியாக இது குறித்து சேரானல்லூர் போலீஸாருக்கு தெரிவித்தனர். பிரசாத் சர்காலே பார்சலை வாங்கிக்கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியேறிய உடனே, அங்கு மறைந்திருந்த கொச்சி போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் படையினரும், போலீஸாரும் சேர்ந்து மடக்கிப் பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவரது பார்சலுக்குள் 3.630 கிராம் எடையுள்ள எம்.டி.எம்.ஏ போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து விஞ்ஞானி பிரசாத் சர்காலே கைது செய்யப்பட்டார். பிரசாத் சர்காலே மருத்துவ ஆராய்ச்சித் துறையில் மிகச் சிறந்த பின்னணி கொண்டவர். மருத்துவத் தொழில்நுட்பப் பிரிவில் இவரது சிறந்த செயல்பாட்டிற்காக தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனமும் இணைந்து 'கோவாக்சின்' தடுப்பூசியை உருவாக்கியபோது, அந்த முதன்மை நிபுணர்கள் குழுவில் பிரசாத் சர்காலேவும் முக்கிய உறுப்பினராகப் பணியாற்றிப் பாராட்டுகளைப் பெற்றவர் ஆவார். அவரிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இவ்வளவு உயரிய பதவியில் இருக்கும் பிரசாத் சர்காலே கடந்த சில வருடங்களாகவே இந்த வீரியமிக்க ரசாயனப் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள், அவர் தனது சொந்தப் பயன்பாட்டிற்காகவே கூரியர் மூலம் வரவழைத்துள்ளதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "கைது செய்யப்பட்ட பிரசாத் சர்காலே மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் கைதுசெய்யப்பட்டுள்ள விவரம் ஆலப்புழாவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றனர். நெதர்லாந்து நாட்டில் இருந்து அவருக்கு இந்த பார்சல் வந்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது. அவருக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.



















