AI மீது 'மாயக் காதல்': அமெரிக்கத் தொழிலதிபர் தற்கொலை - கூகுள் மீது வழக்கு
`பிரேக்-அப்பை விடவும் அதிக வலி...'- 60 நிமிடங்களில் கைநழுவிய வாடகை வீடு; இளம்பெண்ணின் வைரல் பதிவு!
இது பெங்களூரு பாஸ்... இங்கே ஆள விடுறதை விட வீடு போனா வலி அதிகம்! - வாடகை வீட்டின் மறுபக்கத்தை பகிர்ந்த பெண்ணின் குமுறல்!
இந்தியாவின் சிலிக்கான் வேலி, கனவுகளின் தலைநகரம் என பல பெயர்களில் அழைக்கப்படும் பெங்களூரு, பல இளைஞர்களின் தொழில் வாழ்க்கைக்கு அடித்தளமிடுகிறது. ஆனால், இங்கு ஒரு நல்ல வேலையைத் தேடுவதை விட, நிம்மதியாகத் தங்குவதற்கு ஒரு வாடகை வீட்டைக் கண்டுபிடிப்பதுதான் மாபெரும் யுத்தமாக இருக்கிறது என்பதை சமீபத்திய சம்பவம் ஒன்று அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
பெங்களூருவில் வசிக்கும் பெண் ஒருவர், தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். அந்த பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோ, இப்போது இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து, பெங்களூரு வாடகை சந்தையின் கோர முகத்தை மீண்டும் விவாதப் பொருளாக்கியுள்ளது. “ஒரு உறவை முறித்துக் கொள்வதை விட, கஷ்டப்பட்டுப் பார்த்த ஒரு வீடு கைநழுவிப் போவதுதான் அதிக வலியைத் தருகிறது” என்று அந்தப் பெண் தனது வீடியோவில் குமுறியிருப்பது, பலரையும் கலங்க வைத்துள்ளது.

அந்த வீடியோவில் அவர் தனது கதையை விவரிக்கிறார். சமீபத்தில் பெங்களூருவுக்கு குடிபெயர்ந்த அவர், கடந்த ஒரு மாதமாக முழு வசதிகளுடன் கூடிய ஒரு படுக்கையறை கொண்ட (ஃபர்னிஷ்டு 1BHK) வீட்டைத் தேடி அலைந்துள்ளார். பல தேடல்களுக்குப் பிறகு, ஒரு வீடு அவருக்குப் பிடித்துப் போயிருக்கிறது. பல விஷயங்களில் சமரசம் செய்து கொண்டாலும், வாடகை மட்டும் குறையவில்லை. இருந்தும், வீட்டு உரிமையாளர் விதித்த அத்தனை நிபந்தனைகளுக்கும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு முன்பு, ஒரு மணி நேரம் மட்டும் அவகாசம் கேட்டுள்ளார். சரியாக ஒரு மணி நேரம் கழித்து, ‘டெபாசிட்’ தொகையைச் செலுத்தத் தயாராக இருப்பதாக உரிமையாளரை அழைத்தபோது, அவருக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீடு வேறு ஒருவருக்கு வாடகைக்கு விடப்பட்டுவிட்டது என்ற செய்தி அவரை நிலைகுலையச் செய்தது. “கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் நான் வீட்டைப் பார்த்தேன், அதற்குள் எப்படி?” என்று அவர் கேட்டதற்கு, “வேறு ஒருவர் அதற்குள் டெபாசிட் செலுத்தி வீட்டை எடுத்துக்கொண்டார்” என வீட்டு உரிமையாளர் சாதாரணமாகப் பதிலளித்துள்ளார்.
இந்த சம்பவம் தன்னை மனதளவில் கடுமையாகப் பாதித்ததாகக் கூறும் அந்தப் பெண், “காலையில் இருந்து நான் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன். என் உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. நாளை மீண்டும் நான் முதல் இருந்து வீட்டைத் தேட வேண்டும்” என்று வேதனையுடன் குறிப்பிடுகிறார். தனது வீடியோவின் கேப்ஷனில், கருடாச்சார் பாளையம் அருகே தனக்கு ஒரு ஃபர்னிஷ்டு 1BHK வீடு கிடைத்தால் உதவுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பலரும் தங்களுக்கு நேர்ந்த இதே போன்ற அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். ஒரு பயனர், “சரியாக இதேபோல்தான் எனக்கும் சில வாரங்களுக்கு முன்பு நடந்தது. நான் வெறும் 30 நிமிடங்கள் அவகாசம் கேட்டதற்குள் வீடு கைமாறிப் போனது” என்று கமென்ட் செய்துள்ளார். மற்றொருவரோ, “வருத்தப்படாதீர்கள், இதைவிடச் சிறந்த ஒன்று உங்களுக்காகக் காத்திருக்கலாம்” என ஆறுதல் கூறியுள்ளார். இந்த சம்பவம், பெங்களூரு போன்ற பெருநகரங்களில் ஒரு நல்ல வசிப்பிடத்தைப் பெறுவது என்பது எவ்வளவு பெரிய சவாலாக மாறியிருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்கிறது.

















