Roja: "பவன் கல்யாண் பண்ற தப்பை விஜய் சார் பண்ணக்கூடாது" - ரோஜா பேட்டி
பீகார்: ``எனக்கு பெரிய அதிர்ச்சி" - தேர்தல் சவால் குறித்துப் பேசிய பிரசாந்த் கிஷோர்!
பீகாரின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் கட்சியாக தன்னை முன்னிறுத்திக்கொண்டது, அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தொடங்கிய ஜன் சுராஜ் கட்சி. அந்த நம்பிக்கையில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் போட்டியிட்டது ஜன் சுராஜ் கட்சி.
தேர்தலுக்கு முன்னதாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், ``தேர்தல் முடிவுகளில் ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வென்றிருந்தால் என்னிடம் வந்து கூறுங்கள். அதேபோல், ஜன் சுராஜ் வெற்றி பெற்றிருந்தாலும் என்னிடம் கூறுங்கள். இது நடக்கவில்லையென்றால் அரசியலை விட்டே நான் விலகுவேன்.
இது எப்படி நடக்கும் என்று நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால், நான் உறுதியாகச் சொல்கிறேன் 25 இடங்களுக்கு மேல் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெறாது.
இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இதில் விளக்குவதற்கு ஒன்றுமில்லை. இதுவொரு சவல், இந்தத் தேர்தலோடு ஐக்கிய ஜனதா தளம் முடிந்துவிட்டது என்றுதான் பார்க்கிறேன்" என்று கூறியிருந்தார்.
ஆனால், தேர்தல் முடிவுகள் பிரசாந்த் கிஷோருக்கு சாதகமாக இல்லை. 238 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட பிரசாந்த் கிஷோரின் கட்சி வெற்றிபெறவில்லை. பெரும்பாலான வேட்பாளர்கள் அந்தந்த தொகுதிகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றனர். ஆனால், ஐக்கிய ஜனதா தளம் 75-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது
இந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார். அதில், அவரின் சவால் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது, ``பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் படுதோல்வி மிகப்பெரிய அதிர்ச்சி. கடந்த வாரம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து நான் சரியாகத் தூங்கவில்லை. பீகாரின் அரசியல் களத்தில் எனது முயற்சிகளைத் தொடருவேன்.
எனது கட்சியின் முயற்சிகள் தேர்தல் வெற்றியைத் தரவில்லை என்றாலும், பீகாரின் அரசியல் விவாதத்தை சாதி, மதத்திலிருந்து விலக்கி, வேலைவாய்ப்பு, இடம்பெயர்வு போன்ற பிரச்சினைகளை நோக்கி நகர்த்தி கொண்டு செல்ல முடிந்தது.
பீகாரில் உள்ள நான்கு முக்கிய வாக்காளர் குழுக்களில் சாதியின் பெயரால் வாக்களிப்பவர்கள், மதத்தின் பெயரால் வாக்களிப்பவர்கள், லாலு யாதவ் மீண்டும் வரக்கூடாது என தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிப்பவர்கள், பா.ஜ.கவுக்கு பயந்து எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பவர்கள் ஆகியோர் அடங்குவர்.
நாங்கள் சாதி மற்றும் மதத்தின் விஷத்தை கையில் எடுக்கவில்லை. அதனால், 12-15 சதவீத வாக்குகளைப் பெறுவோம் என்பது எனது கணிப்பு. ஆனால் அது 3.5 சதவீத வாக்குகளே எங்களுக்கு கிடைத்திருக்கிறது. பீகாரில் இதற்காக 10 ஆண்டுகள் அர்ப்பணித்திருக்கிறேன்.

10-வது ஆண்டில் வெற்றிபெற்றுவிடுவேன் என நான் திட்டமிடவில்லை. ஆனால், எங்களின் உழைப்பின் காரணமாக மூன்று ஆண்டுகளில் நாங்கள் வெற்றி பெறுவோம் என நம்பினோம். அது நடக்கவில்லை.
நாங்கள் மீண்டும் முயற்சிப்போம். ஜேடியு 25 இடங்களுக்கு மேல் வென்றிருக்கக்கூடாது. ஆனால் இப்போது அவர்கள் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், என் கணிப்பு தவறு என்று மக்கள் கூறுகிறார்கள்.
மேலோட்டமாகப் பார்த்தால் அது தவறாகத் தெரிகிறது... ஆனால், நீங்கள் கூர்ந்து கவனித்தால், அரசு ரூ.100 கோடி முதல் ரூ.125 கோடி வரை மக்களுக்கு (வாக்களிப்பதற்கு முன்பு) வழங்கியது, இந்தத் தொகையில், 60,000 முதல் 62,000 பேருக்கு தலா ரூ.10,000 வழங்கப்பட்டது. இந்த வெற்றிக்கு இந்தப் பணம் தான் காரணம்." என்றார்.













