Dhoni: "இதுவரை இருந்ததிலேயே மிகவும் ஆபத்தான அணிகளுள் ஒன்று" - டி20 உலகக்கோப்பை க...
புதுச்சேரி மணக்குள விநாயகர் திருக்கோயில்: பயமில்லாத வாழ்வு அருளும் வெள்ளைக்காரப் பிள்ளையார்!
அறம், பொருள், இன்பம், வீடெனு முறையே,
தன்னை யாளுஞ் சமர்த்தெனக் கருள்வாய்,
மணக்குள விநாயகா! வான்மறைத் தலைவா!
தனைத்தான் ஆளுந் தன்மைநான் பெற்றிடில்
எல்லாப் பயன்களும் தாமே எய்தும்,
அசையா நெஞ்சம் அருள்வாய்; உயிரெலாம்
இன்புற் றிருக்க வேண்டிநின் இருதாள்
பணிவதே தொழிலெனக் கொண்டு
கணபதி தேவா! வாழ்வேன் களித்தே.
மேற்கண்ட பாடலைப் பாடியவர் பாரதியார்.
பாரதி புதுச்சேரியில் வாழும் காலத்தில் தினமும் சென்று வழிபடும் ஆலயம் மணக்குள விநாயகர் ஆலயம். கடற்கரையை நோக்கி அமைந்திருக்குமிந்த திருக்கோயிலின் சிறப்புகள் அநேகம். வாருங்கள் அவற்றை அறிந்துகொள்வோம். விநாயகப்பெருமானின் அருளையும் பெறுவோம்.

புதுவையில் 'ஒயிட் டவுன்’ எனப்படும் இந்தப் பகுதியின் அருகில் ஒரு குளம் உண்டு. அதற்கு 'மணற் குளம்’ என்று பெயர். இதன் அருகில் கோயில் கொண்ட விநாயகர் என்பதால் இந்தப் பிள்ளையாருக்கு, 'மணற்குள விநாயகர்’ எனும் திருநாமம் உண்டாயிற்று. இங்கு விநாயகர் கோயில் கொண்ட வரலாறு அற்புதமானது.
புதுச்சேரி முரட்டாண்டி சாவடியில் தொள்ளைக்காது சுவாமிகள் வாழ்ந்துவந்தார். ஒருநாள் இவர் கடலில் நீராடிவிட்டு மணற்குளக் கரையில் இருந்த வில்வ மரத்தடியில் அமர்ந்தபோது, ஓர் அசரீரி கேட்டது. மணற்குளத்தில் இருக்கும் தன்னை எடுத்துப் பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டது.
சுவாமிகளும் அதன்படியே விநாயகர் திருமேனியைக் கண்டு எடுத்து கோயில் அமைத்தார். விநாயகரின் அருளும் கிருபையும் பரிபூரணமாக அவருக்குள் நிரம்பியது. ஒரு நாள் அவர் பூத உடலைத் துறந்து சூட்சும உடலை அடைந்தார். பக்தர்கள் அவருக்குச் சமாதி அமைத்து வழிபட்டனர்.
1688-ம் வருடம் பிரெஞ்சுக்காரர்கள் புதுவைக்கடற்கரையில் ஒரு கோட்டை கட்டத் திட்டமிட்டனர். அந்தக் கோட்டையின் பின்புறம்தான் மணக்குள விநாயகர் ஆலயம் இருந்தது. அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் இந்த விநாயகருக்குத் தினமும் அபிஷேக - ஆராதனைகளுடன் அவ்வப்போது உத்ஸவங்களையும் நடத்தி வந்தனர்.
பிரெஞ்சு ஆட்சியாளர்கள் இதைத் தடுத்தனர். ஈஸ்டர் காலம் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சுவாமிக்கு உற்சவங்கள் நடத்தக்கூடாது என்று தடை போட்டனர். இதனால் கோபம் அடைந்த அந்தப் பகுதியில் வாழ்ந்த தொழிலாளர் குடும்பத்தினர் எவரும் வேலைக்குச் செல்லாமல் இருந்ததுடன், ஊரைவிட்டே வெளியேறவும் முற்பட்டனர்.
அப்படி நிகழ்ந்தால், வேலை செய்ய ஆட்கள் இல்லாது திண்டாட நேரிடுமே என்ற அச்சத்தில், அவர்களின் போராட்டத்துக்குப் பணிந்த கவர்னர் தடை உத்தரவை வாபஸ் பெற்றார்.

ஆனாலும், மணக்குள விநாயகர் ஆலயத்தை அங்கிருந்து அகற்ற திட்டமிட்டனர் பிரெஞ்சுக்காரர்கள். கோயிலுக்கு அருகில், பிரெஞ்சுக்காரர் 'மொம்பரே’ என்பவரின் பூங்கா இருந்தது. அவருக்கும், விநாயகர் கோயிலுக்கு அதிகமான பக்தர்கள் வந்துசெல்வது பிடிக்கவில்லை. ஒருநாள் எவரும் அறியாத வண்ணம் இரவோடு இரவாக விநாயகர் சிலையை எடுத்துக் கடலில் போடுமாறு தனது ஆட்களை ஏவினார் மொம்பரே.
அவ்வாறே கடலில் போடப்பட்டது விநாயகர் சிலை. ஆனால், மறுநாள் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கோயிலில் எந்த இடத்தில் அந்தச் சிலை வைக்கப்பட்டு இருந்ததோ, அதே இடத்தில் மறுபடியும் இருந்தது. மொம்பரே அதிர்ச்சி அடைந்தார். தான் அனுப்பிய ஆட்கள் மீதே அவருக்குச் சந்தேகம் எழுந்தது. மறுபடியும், விநாயகர் சிலையை கடலில் கொண்டுபோய் போடும்படி உத்தரவிட்டவர், அந்தமுறை தானும் உடன் சென்றார்.
மொம்பரேயின் ஆட்கள் சிலையைப் பெயர்த்தெடுத்துக் கடலில் போட முயன்றபோது, திடீரென கண்பார்வை இழந்தார் மொம்பரே. மணக்குள விநாயகரின் மகிமையை உணர்ந்தார். தனது செயலுக்காக வருந்தியதுடன், தன்னுடைய தவறுக்குப் பரிகாரமாக கோயிலை அபிவிருத்தியும் செய்தார். வெள்ளைக்காரருக்கு மனமாற்றம் தந்ததால் இவரை, 'வெள்ளைக்காரப் பிள்ளையார்’ என்றும் அழைக்கிறார்கள்.
இப்படி வரலாற்றில் தன் பெருமையைப் பதிவு செய்து வைத்துள்ளது மணக்குள விநாயகர் கோயில். இந்த ஆலயத்தில் கிழக்கு நோக்கி அருளும் விநாயகரின் திருமேனியில் பின் இரு கரங்கள் பாசம் அங்குசம் ஏந்தியும், முன் இரு கரங்கள் அபயம் வரதமாகவும் அமைந்துள்ளன.
மணற்குளம் இருந்ததன் அடையாளமாக விநாயகர் பீடத்தின் முன்புறம் உள்ள குழியில் இப்போதும் நீர் சுரந்துகொண்டிருக்கிறது. கோயில் மண்டபத்தைச் சுற்றிலும் விநாயகரின் பல்வேறு வடிவங்களும் அவரது திருவிளையாடல்களும் சுதைச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

பிராகாரத்தில் தென் மேற்கு மூலையில் ஸ்ரீபால விநாயகரும், வடமேற்கில் ஸ்ரீபால சுப்ரமணியரும் அருள்கின்றனர். வடக்குப் புறம் ஸ்ரீசண்டீசர் சந்நிதி உள்ளது. அங்குள்ள உத்ஸவர் மண்டபத்தில் ஸ்ரீநர்த்தன கணபதி, ஸ்ரீஹரித்ரா கணபதி, ஸ்ரீசித்தி புத்தி கணபதி, ஸ்ரீலட்சுமி கணபதி, ஸ்ரீபாலசுப்ர மணியர், வள்ளி-தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமணியர், சண்டீசர், அஸ்திரதேவர் முதலான உத்ஸவ மூர்த்திகளுடன் ஸ்படிக லிங்கமும் உள்ளது.
இந்தக் கோயிலில் விநாயகருக்குப் பள்ளியறை காணப்படுவது சிறப்பு. தங்கத்தேர் உலாவும் உண்டு. அனைத்து மதத்தினரும், வெளிநாட்டுப் பயணிகளும் இவரை வணங்கிச் செல்கிறார்கள்.
'பொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன் மனமே! எனை நீ வாழ்த்திடுவாய்!’ என்ற பாரதியின் கனவுப்படி இந்தக்கோயில் கருவறை விமானம் பொன்னால் வேயப்பட்டுள்ளது. தினமும் நான்கு கால பூஜை, மாதம்தோறும் சங்கடஹர சதுர்த்தி, ஆவணி மாதம் விநாயக சதுர்த்தியையட்டி பிரம்மோத்ஸவம், மாசிமகத் திருவிழா போன்ற திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.
மகான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பண்டித வி.மு. சுப்ரமண்ய ஐயர், கோவை நாகலிங்க சுவாமிகள் போன்ற அருளாளர்கள் மணக்குள விநாயகரைப் போற்றிப் பாடியுள்ளனர்.
மேலும் கடன் பிரச்னை தீரவும் தீராத வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கவும் இந்த விநாயகரை வேண்டிக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் பக்தர்கள்.
வாய்ப்புள்ளவர்கள் ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். வாழ்வில் சகல நலன்களும் உண்டாகும்.





















