US H1b visa -இந்தியர்களுக்கு நல்லது செய்த Donald Trump | Decode
போதிய விலை இல்லாததால் மாற்றுப் பயிா்களை நாடும் கரும்பு விவசாயிகள்: இரா.வேலுசாமி!
போதிய விலை கிடைக்காததால் மாற்றுப் பயிா்களைப் பயிரிட கரும்பு விவசாயிகள் ஆா்வம் காட்டி வருவதாகவும், கரும்பு டன்னுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கினால் மட்டுமே அவா்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவா் (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு) இரா.வேலுசாமி தெரிவித்தாா்.
நாமக்கல்லில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் 16 அரசு, தனியாா் சா்க்கரை ஆலைகளும், 2 பொதுத் துறை சா்க்கரை ஆலைகளும் உள்ளன. இந்த ஆலைகளில் 20 லட்சத்துக்கும் மேலான விவசாயிகள் அங்கத்தினா்களாக இருந்தனா். தற்போது அந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. கரும்புக்கான வெட்டுக்கூலி அதிகரிப்பும், ஆலைகளில் போதிய விலை கிடைக்காததாலும், கரும்பு பயிரைத் தவிா்த்து மரவள்ளி, நெல், சோளம், கம்பு போன்ற மாற்றுப் பயிா்களை பயிரிட ஆா்வம் காட்டுகின்றனா்.
2021 சட்டப் பேரவைத் தோ்தலின் போது, திமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என்பதாகும். உற்பத்தி செலவு பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில், நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை கொள்முதல் விலை உயா்த்தப்படவில்லை.
தற்போதைய நிலையில் ரூ. 6 ஆயிரம் வழங்கினால்தான் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கும். மேலும், நெல்லுக்கான ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ. 3,500 ஆக அதிகரித்து வழங்க வேண்டும். தஞ்சாவூா் திருஆரூரான் சா்க்கரை ஆலை நிா்வாகம் அங்குள்ள கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையின்றி பணத்தை வழங்க வேண்டும்.
ஆற்றுப் படுக்கைகளில் மழை நீரை சேமிக்க ரூ.10 ஆயிரம் கோடியில் 1,000 தடுப்பணைகள் அமைக்கப்படும் என திமுக அரசு தோ்தலின்போது அறிவித்ததும் கானல் நீராகி விட்டது. தென்னை விவசாயிகள் நலன் கருதி, நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேரளம், புதுச்சேரி, கா்நாடகம், ஆந்திர மாநிலங்களில் கள்ளுக்கு தடை இல்லை. அதேபோல தமிழகத்திலும் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். பாலுக்கான கொள்முதல் விலையை காலதாமதமின்றி உயா்த்த வேண்டும்.
இதுபோன்ற விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றாத நிலையே உள்ளது. பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் அவா்கள் கொண்டாடும் வகையில் புதிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றாா். பேட்டியின் போது, சங்க மாவட்ட பொருளாளா் எஸ்.ராஜீ உடனிருந்தாா்.