தைத் திருநாளை முன்னிட்டு மயிலாப்பூரில் பிரமாண்ட கோலப்போட்டி... | Photo Album
மகப்பேறுக்காக சென்ற பெண் பலி! மேற்கு வங்கத்தைத் தொடரும் மருத்துவத் துறை புகார்கள்!
மேற்கு வங்கத்தில் அரசு நடத்தும் மருத்துவமனையில் மகப்பேறுக்காக சென்ற பெண் உயிரிழந்ததால், சந்தேகமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.
மேற்கு வங்கத்தில் பாஸ்சிம் மெடினிபூர் மாவட்டத்தில் அரசு நடத்தும் மிட்னாபூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் புதன்கிழமை (ஜன. 8) மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்டு, பிரசவத்துக்குப் பின் வெள்ளிக்கிழமை (ஜன. 10) உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண்ணுக்கு காலாவதியான மருந்து அளிக்கப்பட்டதாகவும், மேலும் நால்வருக்கு காலாவதி மருந்து அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பெண்ணின் மரணத்துக்கு மருத்துவர்கள்தான் காரணம் என்று கூறுவதுடன், மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர், தீவிர சிகிச்சையில் உள்ளவர்களின் குடும்பத்தினர் உள்பட பலரும் மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க:பட்டினிச் சாவு இல்லாத மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
மேலும், மாநில அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் காங்கிரஸும் இடதுசாரிக் கட்சிகளும் இணைந்து கொண்டு மாநில அரசுக்கு எதிராக முழக்கமிடுகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, மருத்துவமனை நிர்வாகம் மீது உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க 13 பேர் கொண்ட குழுவை மாநில அரசு நியமித்துள்ளது. மேற்கு வங்க முதல்வராகிய மமதா பானர்ஜிதான், சுகாதாரத் துறையையும் கவனித்து வருகிறார்.
ஆர்.ஜி. கர் மருத்துவமனை பாலியல் வழக்கு, ஹவுரா மாவட்ட மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் எடுக்கச் சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது என மேற்கு வங்கத்தில் கடந்த சில மாதங்களில் மருத்துவமனை மீதான புகார்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.