செய்திகள் :

மதுரை மாவட்டம், திருவாதவூர் திருமறைநாதர் கோயில்: சிலம்பொலி எழுப்பி மாணிக்கவாசகரை ஆட்கொண்ட தலம்!

post image

சைவத்தில் சமயக் குரவர் நால்வர் என்று போற்றப்படுபவர்கள் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர். இவர்களில் காலத்தால் மூத்தவர் மாணிக்கவாசகர் என்பது ஆய்வாளர்களின் கருத்து. திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது மரபு மொழி. மொழிகடந்து உலக மக்கள் அனைவரையும் உருக வைக்கும் பாடல்களைப் பாடிய மாணிக்க வாசகர் அவதரித்த பூமி திருவாதவூர். எனவேதான் அவருக்கு வாதவூரர் என்ற திருநாமமும் ஏற்பட்டது. அவர் அவதரித்த தலத்தில் அமைந்திருக்கும் திருமறைநாதர் கோயில் குறித்தும் அதன் மகிமைகள் குறித்தும் அறிந்துகொள்வோம்.

இத்தலத்தின் தலபுராணம் பல யுகங்களைக் கடந்து சொல்கிறது. வாயுதேவன் ஈசனை வழிபட்ட தலம். அக்னிதேவன், தனது ஆற்றலைத் திரும்பப் பெற்ற தலம். கௌதம முனிவர் ஈசனை வழிபட்ட தலம். கபில முனிவரின் தோஷம் நீங்கிய தலம் எனப் பல்வேறு சிறப்புகளை உடைய இந்தத் தலம் மதுரையிலிருந்து வடக்கே 25 கி.மீ. தூரத்திலும், மேலூரிலிருந்து மேற்கே 8 கி.மீ. தூரத்திலும் உள்ளது. இங்கு ஈசனுக்குத் திருமறைநாதர் என்பது திருநாமம். அன்னைக்கு வேதநாயகி என்பது திருப்பெயர்.

மாணிக்கவாசகர்

இங்கு தல விருட்சம் மகிழ மரம். சிவ தீர்த்தம், வாயு தீர்த்தம், அக்னி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், பைரவ தீர்த்தம், கபில தீர்த்தம் என ஏழு புண்ணிய தீர்த்தங்கள் இங்கு உள்ளன.

ஈசன் தம் பாதச் சிலம்பொலி எழுப்பி, மாணிக்கவாசகரை ஆட்கொண்ட சிலம்பொலி நூற்றுக்கால் மண்டபம் அழகிய சிற்பங்களுடன் இந்த ஆலயத்தில் காணப்படுகிறது. `இது மாணிக்கவாசகர் கட்டியது' என்கிறார்கள். ஆவுடையார்கோயில் சிற்பங்களுக்கு இணையான மண்டபம் இது. அழகிய நுட்பமான கொடுங்கைகள் இங்கு அதிசயமாகப் பார்க்கப்படுகின்றன. ஆலய நுழைவாயிலில் கபிலர் சிலையும், ஆலயத்துள் ஒற்றைக்காலை மடக்கி அமர்ந்தபடி அபூர்வக் கோலத்தில் அருளும் சனீஸ்வரரின் சிலையும் உள்ளன.

சனிபகவானுக்கு வாத நோய் நீங்கிய தலம் இது. எனவே இங்கு வந்து ஈசனையும் சனிபகவானையும் வழிபட்டால் வாதம் முதலிய நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

ஆலயத்தில் சிந்தாமணி விநாயகர், முருகப்பெருமான், காளீஸ்வரர், விஸ்வநாதர், நடராஜர், வியாக்கிரபாதர், பதஞ்சலி, மாணிக்கவாசகர், சுந்தரர் ஆகியோரின் சந்நிதிகளும் சிறப்புற விளங்குகின்றன.

ஐந்து நிலைகள் கொண்ட ராஜ கோபுரத் தைத் தாண்டி உள்ளே சென்றால், கருவறையில் திருமறைநாதர் கிழக்கு நோக்கி, பசுவின் குளம்புகள் பதிந்துள்ள சுயம்புத் திருமேனியுடன் அருள்பாலிக்கிறார்.

இங்குள்ள அம்பிகை, பிரம்மன் நடத்திய ஆரண கேத வேள்வியில் நீலத் திருமேனியளாக அவதரித்தாள். அதனால் அம்பிகை இங்கு கிழக்கு நோக்கி ஆரணவல்லி, திருமறைநாயகி, வேதவல்லி என்ற திருநாமங்களோடு அழைக்கப்படுகிறாள்.

திருவாதவூர்

சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, கார்த்திகை, மார்கழி, மாசி ஆகிய ஒன்பது மாதங்களில் இங்கே திருவிழாக்கள் நடைபெறுகின்றன. கார்த்திகை மாதத் திங்கள் கிழமைகளில் 1008 சங்குகளைக் கொண்டு ஈசனுக்கு சங்காபிஷேகம் செய்யப்படுகிறது.

இந்த ஆலயத்தில் காணப்படும், 'புருஷாமிருகம்' (மனிதத்தலையும் மிருக உடம்பும் கொண்டது) பாண்டவர்கள் வழிபட்டது என்கிறார்கள்.

சிவ பக்தரான புருஷாமிருகத்தைக் கண்ணன், திருவாதவூரின் விஷ்ணுதீர்த்தத்தில் காவல் தெய்வமாக நிறுத்தினார் என்கிறது புராணம். இன்றும் இந்தப் புருஷாமிருகத்தை மழை வருவதற்காக வேண்டிக்கொள்கிறார்கள் இந்த ஊரார்.

ஸ்ரீபைரவரின் வாகனமான சுவானத்தை (நாய்) மறைத்துவிட்டார் ஈசன். இதனால் பைரவர், ஈசனிடம் தனது வாகனத்தை மீண்டும் அளிக்கும்படி வேண்டினார். ஈசனும் திருவாதவூர் சென்று வழிபட்டால் தொலைந்த வாகனம் கிடைக்கும் என்று வழிகாட்டினார். அதன்படி திருவாதவூர் வந்த பைரவர் இங்கு பைரவர் தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டாக்கித் திருமறைநாதரை அபிஷேகித்து வணங்கினார்.

அதனால் தனது நாய் வாகனத்தையும் மீட்டார். இதனால் இங்குள்ள பைரவரைத் தொடர்ந்து எட்டு அஷ்டமி நாளில் தீபமேற்றி வணங்கி வந்தால், தொலைந்த வாகனங்கள் மீண்டும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மாண்டவ்ய முனிவரின் சாபம் பெற்ற சனிபகவானின் வாதநோயை ஈசன் இங்கு தீர்த்ததால் இத்தலம் ‘வாதவூர்' எனப் பெயர் பெற்றது. இதனால் இங்கு வந்து திருமறைநாதரை வழிபட்டால் வாதக்கோளாறுகள், கை கால் முடக்கு வாதம், பக்கவாதம் உள்ளிட்ட எல்லா வாதநோய்களும் தீரும் என்று நம்பப்படுகிறது.

மேலும், இத்தலத்தில் உள்ள சனிபகவான், பைரவர் மற்றும் திருமறைநாதரை ஐந்து நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டால் சகலவிதமான பாவங்களும் தோஷங்களும் நீங்கிவிடும் என்பதும் நம்பிக்கை.

திருவாதவூர்

இங்கு மாணிக்கவாசகர் அவதரித்த இடத்தில் கோயில் உள்ளது. வியாழக்கிழமை மற்றும் மகம் நட்சத்திர நாளில் இங்கே வந்து வழிபடுவது சிறப்பு. படிப்பு வராதவர்கள் மந்தமாக இருப்பவர்கள், பேச்சுத் திறன் குறைந்தவர்கள் இங்கு வந்து மாணிக்கவாசகருக்கு நெய் தீபமேற்றி வழிபட் டால், விரைவில் குணம் பெறலாம் என்பது நம்பிக்கை. இங்கு வந்து திருவாசகம் முற்றோதுதல் செய்தால் எண்ணியது ஈடேறும் என்பதும் நம்பிக்கை. ஆனி மாத மக நட்சத்திர நாளில் இங்கு மாணிக்கவாசகர் குருபூஜை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இழந்த வாகனத்தைத் திரும்பப் பெறவும், வாத நோய்கள் தீரவும், குழந்தை இல்லாதவர்கள் பிள்ளை வரம் வேண்டியும், சகலவிதமான தோஷங்கள் நீங்கவும் பலரும் இங்கு வந்து வேண்டி, பலன் பெற்றுச் செல்வதை இன்றும் கண்கூடாகக் காணமுடிகிறது. வாய்ப்பிருப்பவர்கள் இந்த ஆலயத்துக்கு ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். வாழ்வில் வளமும் நலமும் உண்டாகும்.

மதுரை மடப்புரம் காளியம்மன் : நோய் நீக்கும் தலம்... பொய்சாட்சி சொல்பவர்களை தண்டிக்கும் சத்தியக்கல்!

கலியுகத்தில் பக்தர்களுக்கு அற்புதம் நிகழ்த்தி அருள் செய்யும் அம்மன் தலங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று மதுரை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில். தேவாரத் திருத்தலமாம் திருப்பூவநாதர் கோயிலுக்கு வடகிழக்கில் அ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் மார்கழி மாதப் பிறப்பையொட்டி சிறப்புப் பூஜை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் தனுர் மாதம் எனப்படும் மார்கழி மாதப் பிறப்பு இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றதை முன்னிட்டு, ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்புப் பூஜைகள் நட... மேலும் பார்க்க

கும்பகோணம், இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயில்: அவப்பெயர் நீங்கும்... பிள்ளைகளின் கல்வி சிறக்கும்!

கல்வியே நாம் நம் பிள்ளைகளுக்கு அளிக்கும் மாபெரும் செல்வம். அந்தச் செல்வத்தைக் குறைவின்றிப் பெற்றிட இறையருள் நமக்குத் தேவை. அப்படிப்பட்ட அருளை அள்ளி அள்ளித் தரும் தலம்தான் இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயி... மேலும் பார்க்க

திருச்சி, ஊட்டத்தூர் சுத்தரத்னேஸ்வரர் கோயில்: சிறுநீரகப் பிரச்னைகள் தீர்க்கும் வெட்டிவேர் தீர்த்தம்!

இறைவனைச் சரணடைந்தால் அருளும் முக்தியும் கிடைக்கும் என்பது எவ்வளவு சத்தியமோ அந்த அளவுக்கு இந்த உலகில் வாழத்தேவையான பொருளும் ஆரோக்கியமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப... மேலும் பார்க்க

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில்: பிரம்மஹத்தி தோஷம் தீர்க்கும் திருத்தலம்!

வினைகள் காரணமாகவே ஓர் ஆன்மாவுக்கு மீண்டும் மீண்டும் பிறப்பு நிகழ்கிறது. இந்த வினைகளே துன்பத்துக்கும் காரணமாகின்றன. துன்பங்கள் அதிகரிக்கும்போது வாழ்க்கை நரகமாகிவிடுகிறது. அதிலிருந்து நம்மைக் காத்து வழி... மேலும் பார்க்க

தேனி வரசித்தி விநாயகர் கோயில்: தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு அபிஷேகம் | Photo Album

பஞ்சமியை சிறப்பு அபிஷேகம்பஞ்சமியை சிறப்பு அபிஷேகம்பஞ்சமியை சிறப்பு அபிஷேகம்பஞ்சமியை சிறப்பு அபிஷேகம்பஞ்சமியை சிறப்பு அபிஷேகம்பஞ்சமியை சிறப்பு அபிஷேகம்பஞ்சமியை சிறப்பு அபிஷேகம்பஞ்சமியை சிறப்பு அபிஷேகம்... மேலும் பார்க்க