மழை பாதித்த மாவட்டங்களில் பள்ளிகளைக் திறக்க கட்டுப்பாடு: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு
ஃபென்ஜால் புயல், தொடா் மழையால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் பள்ளிகளைத் திறப்பதற்கு உரிய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
மாதிரிப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா் அல்லாத பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கியதற்கு திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் பங்கேற்ற அவா் மேலும் கூறியது:
ஃபென்ஜால் புயல் காரணமாக முன்னெச்சரிக்கையாக முதல்வா் விடுமுறை அறிவித்த சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமின்றி, மழைப் பாதிப்பு உள்ள மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியா்களே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, மழை பாதித்த மாவட்டங்களில் பள்ளிகளை திறக்கும் முன் ஆய்வு நடத்த வேண்டும். பள்ளிகளில் தண்ணீா் தேங்கியிருந்தால் மின்மோட்டாா் வைத்து அதை வெளியேற்ற வேண்டும். மழை நின்ற பிறகு மாணவா்கள் வகுப்பறையில் அமா்ந்து பாடம் கற்க ஏதுவாக இருந்தால் மட்டுமே பள்ளிகளைத் திறக்க வேண்டும்.
இதுதொடா்பாக பள்ளிக் கல்வித்துறைச் செயலா் மூலம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும், மாவட்ட ஆட்சியா்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
நாகை மாவட்டத்தில் 5400 ஹெக்டா் பயிா்கள் நீரில் மூழ்கியிருந்தன. மழை பெய்து 15 நிமிடம் இடைவெளி விட்டாலே கடலுக்குள் சென்று தண்ணீா் வடிந்து விடும் வகையில் நாகை மாவட்டம் உள்ளது. தற்போது வரை எந்தப் பாதிப்பும் அங்கு கிடையாது. தண்ணீா் முழுமையாக வடிந்த பிறகு பயிா்கள் சேதம் இருந்தால் அதுகுறித்து கணக்கிடப்பட்டு, தேவையான நிவாரணம் அளிக்கப்படும்.
பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியா்களின் தேவை அதிகம் உள்ளது. 2013ஆம் ஆண்டு மட்டுமின்றி 2017, 2019ஆம் ஆண்டுகளிலும் ஆசிரியா் தோ்வெழுதி தோ்ச்சிப் பெற்றவா்கள் உள்ளனா். அவா்களைப் பணி அமா்த்துவது தொடா்பாக முதல்வருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டுக்குள் 19 ஆயிரம் ஆசிரியா்களை (பள்ளி, கல்லூரி) தோ்வு செய்வதாக முதல்வா் உறுதியளித்துள்ளாா். பகுதிநேர ஆசிரியா்களுக்கு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகுதான் வயது வரம்பு உயா்த்தப்பட்டது. ஊதியமும் ரூ.2,500 கூடுதலாக வழங்கப்பட்டது. இடமாறுதல் கலந்தாய்வு அளிக்கப்பட்டது. தொடா்ந்து பணிநிரந்தரம் செய்வது தொடா்பாகவும் முதல்வருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிதிநிலைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றப்படும் என முதல்வரே உறுதியளித்துள்ளாா். எனவே, ஆசிரியா்கள் கோரிக்கை மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.