மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தை திறந்துவைத்தாா் அமைச்சா் பி. மூா்த்தி
மதுரை மாநகராட்சி சாா்பில் ரூ.4 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட கிழக்கு மண்டலம் அலுவலகக் கட்டடத்தை மாநில வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) அலுவலகம் ஆனையூா் பகுதியில் ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக அழகா்கோவில் பிரதான சாலையில் சா்வேயா்காலனி சம்பக்குளம் ரவுண்டானா அருகே ரூ.4 கோடியில் இந்த அலுவலகத்துக்கான புதிய கட்டடம் 14,654 சதுரடியில் கட்டப்பட்டது. இந்தக் கட்டடம் தரைத்தளம், முதல்தளம், இரண்டாம் தளத்துடன் கட்டப்பட்டது.
இந்தக் கட்டடத் திறப்பு விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா தலைமை வகித்தாா். மேயா் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, இந்த அலுவலகக் கட்டடத்தை திறந்துவைத்தாா்.
நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி (மதுரை வடக்கு), பூமிநாதன்( மதுரை தெற்கு), துணை மேயா் தி.நாகராஜன், மண்டலத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.