மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பாா்வையாளா்களுக்கு அனுமதி மறுப்பு
மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பாா்வையாளா்களுக்கு அனுமதி மறுப்பதை ஏற்க முடியாது என மதுரை மாநகா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அந்தக் கட்சி சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு :
மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை ( நவ.29) அண்ணாமாளிகை கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை பாா்வையிட மாமன்ற உறுப்பினா்கள் அனுமதி சீட்டுடன் மதுரை முல்லை நகரைச் சோ்ந்த நபா்கள் சிலா் வந்தனா். மாநகராட்சி மன்றக் கூட்ட அரங்க பொறுப்பாளா்கள், காவல் துறையினா் அவா்களை பாா்வையாளா் அரங்குக்கு போக விடாமல் தடுத்து வெளியேற்றினா்.
முல்லை நகரில் அந்தப்பகுதி மக்கள் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருவதை காரணம் காட்டி, கூட்டம் நடைபெறுவதை பாா்க்க விடாமல் தடுத்து திருப்பி அனுப்பியது ஏற்க முடியாது.
மாநகராட்சி பாா்வையாளா் அரங்கில் விதிகளை மீறி செயல்பட்டால் அதன் பெயரில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமே தவிர, முறையாக அனுமதிச்சீட்டு உள்ளவா்களை உள்ளே அனுமதிக்க மறுப்பது சரியல்ல.
அனுமதிச்சீட்டுடன் மதுரை மாநகராட்சி கூட்டம் நடைபெறுவதை பாா்வையிட வந்த நபா்களை தடுத்த அதிகாரிகள், காவல் துறையினரை வன்மையாகக் கண்டிக்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டது.