திருப்பரங்குன்றம்: ``நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும...
முதுமலை: 20 அடியில் கூண்டு, 24 மணிநேரமும் சுழலும் கேமரா - புலி தாக்கிய சம்பவத்தால் வனத்துறை உஷார்
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளி மண்டலமான மாவனல்லா பகுதியில் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பழங்குடி பெண் நாகியம்மாளை கடந்த 24 - ம் தேதி மதியம் புலி தாக்கியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அந்த புலி வனப்பகுதிக்குள் இழுத்துச் செல்வதைக் கண்ட உள்ளுர் மக்கள் கூச்சலிட்டு விரட்டிச் சென்றுள்ளனர்.

ஆனால், காப்பாற்ற முடியவில்லை. புலியின் தாக்குதலால் உடல் தனியாக தலை தனியாகவே நாகியம்மாளின் சடலம் மீட்கப்பட்டது. இதனை தொடர்ந்து புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கத் தவறிய வனத்துறையைக் கண்டித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அடுத்தடுத்த தாக்குதல் சம்பவங்களைத் தடுக்கும் விதமாக அந்த பகுதியில் குறிப்பிட்ட புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர்.

புலியின் கால்தடங்கள் மற்றும் ரோமங்களை சேகரித்து வரும் நிலையில், தாக்குதல் நடைபெற்ற பகுதியில் 3 புலிகள் நடமாடி வருவதை உறுதி செய்துள்ளனர். அந்த பகுதியில் கூண்டுகள் மற்றும் தானியங்கி கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து முதுமலை புலிகள் காப்பக நிர்வாகத்தினர் , " பழங்குடி பெண்ணை தாக்கியதாக சந்தேகப்படும் குறிப்பிட்ட அந்த புலி நடமாடும் பகுதியில் பிரத்தியேகமான ஐந்து கூண்டுகளை வைத்திருக்கிறோம். 20 அடி நீளம், 10 அடி உயரம், 10 அடி அகலம் கொண்ட கூண்டுக்குள் 360 டிகிரி கோணத்தில், 24 மணி நேரமும் சுழலும் சி.சி.டி.வி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.

வனத்துறையின் 50 பணியாளர்கள் களத்தில் உள்ளனர். அக்கம் பக்கத்தில் உள்ள பள்ளி மாணவர்களை வனத்துறை வாகனம் மூலம் பாதுகாப்பாக அழைத்துச் சென்று வருகிறோம். இந்த பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதையும், இரவு நேரங்களில் மக்கள் வெளியே நடமாடுவதையும் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம் " என தெரிவித்துள்ளனர்.















