தேமுதிக: "எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் மாறலாம்" - கூட்டணி குறித்து பிரேமல...
மும்பை கட்டடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்? - பாலிவுட் நடிகர் கமால் கானிடம் போலீஸார் விசாரணை!
பாலிவுட் நடிகர் கமால் கான் மும்பை லோகண்ட்வாலா பகுதியில் வசித்து வருகிறார். அவர் வசித்து வந்த பங்களாவிற்கு அருகில் உள்ள நாலந்தா கட்டடத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. உடனே அப்பகுதியை சேர்ந்த இரண்டு பேர் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். கட்டடத்தில் இரண்டாவது மற்றும் 4வது மாடியில் துப்பாக்கியால் சுட்டு சுவர் சேதம் அடைந்திருந்தது. ஒரு வீடு இயக்குனருக்கு சொந்தமானது. மற்றொரு வீடு மாடல் அழகிக்கு சொந்தமானது. அங்கிருந்த மரப்பெட்டி ஒன்றும் சேதம் அடைந்திருந்தது.

உடனே போலீஸார் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர். இதில் இரண்டு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. துப்பாக்கியால் சுடப்பட்டதா அல்லது ஏர் கன் மூலம் சுடப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். அக்கட்டடத்தில் வசித்தவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அக்கட்டிடத்தில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
தீவிர விசாரணையில் அக்கட்டிடத்திற்கு அருகில் உள்ள பங்களாவில் வசித்து வந்த வந்த கமால் கானிடம் விசாரித்தபோது அவர்தான் துப்பாக்கியால் சுட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரது துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அவர் என்ன காரணத்திற்காக துப்பாக்கியால் சுட்டார் என்பது குறித்து போலீஸார் அவரிடம் விசாரித்து வருகின்றனர். கமால் கான் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

















