'டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு'- தொகுதி மறுவரையறை தோல்வி குறித்து ஸ்டாலின்
மேற்கு Vs மத்திய குழு; சிம்பன்சிகளிடையே வெடித்த `சிவில் வார்!' - உகாண்டாவில் அதிர்ச்சி!
சுமார் 25 ஆண்டுகளாக உகாண்டாவின் ங்கோகோ (Ngogo) காடுகளில் உலகின் மிகப்பெரிய சிம்பன்சி சமூகம் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தது.
சுமார் 200 சிம்பன்சிகளைக் கொண்ட இந்த மாபெரும் கூட்டம், ஒரு முன்மாதிரி சமூகமாக அறியப்பட்டது. ஆனால், கடந்த 2015-ம் ஆண்டு முதல் இந்த ஒற்றுமை சிதைந்து, ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்த சிம்பன்சிகள் இரண்டு பகைக் குழுக்களாகப் பிரிந்து தங்களுக்குள்ளேயே ஒரு கொடூரமான போரைத் தொடங்கியுள்ளன.

கூட்டத்தை வழிநடத்திய வலிமையான தலைவர்களின் மரணம் மற்றும் அவர்களுக்குப் பின் யார் அடுத்த தலைவர் என்பதில் ஏற்பட்ட போட்டியே இந்த விரிசலின் தொடக்கம் என நம்பப்படுகிறது.
மேலும், குழுக்களுக்கு இடையே சமாதான பாலமாக இருந்த முதிய சிம்பன்சிகளின் இறப்பும், 2017-ல் பரவிய ஒரு சுவாச நோய்த்தொற்று பல சிம்பன்சிகளைக் கொன்றதும் இந்தச் சமூகக் கட்டமைப்பை முற்றிலுமாகச் சிதைத்துவிட்டது. இதனால் 'மத்திய குழு' மற்றும் 'மேற்கு குழு' எனப் பிரிந்த இவை, அன்று முதல் ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்க்கத் தொடங்கின.
2015 முதல் இன்று வரை சுமார் 24 சிம்பன்சிகள் இந்தக் குழுப் போரில் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளன. இதில் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், கொல்லப்பட்ட17 சிம்பன்சிகள் பச்சிளம் குட்டிகள். மேற்கு குழுவைச் சேர்ந்த சிம்பன்சிகள் திட்டமிட்டு மத்திய குழுவின் எல்லைக்குள் ஊடுருவுகின்றன. ஒருமுறை 13 சிம்பன்சிகள் சேர்ந்து "பேசி" (Basie) என்ற வயதான சிம்பன்சியைத் தாக்கி அழித்த சம்பவம், ஆராய்ச்சியாளர்களை உலுக்கியது.

சிம்பன்சிகளின் இந்த நடத்தை மனித குலத்திற்கு ஒரு எச்சரிக்கையாகவும் பாடமாகவும் பார்க்கப்படுகிறது. சிம்பன்சிகள் மனிதர்களுக்கு 98% மரபணு ரீதியாக நெருக்கமானவை என்பதால், அவற்றின் செயல்பாடுகள் நமது ஆதி வரலாற்றைப் பிரதிபலிக்கின்றன. இயற்கை நமக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டுவது ஒன்றைத்தான்: அது எவ்வளவு பெரிய சமூகமாக இருந்தாலும், எவ்வளவு நெருக்கமான உறவுகளாக இருந்தாலும், அங்கு அன்பும், நம்பிக்கையும் இல்லாதபோது வன்முறை மட்டுமே எஞ்சியிருக்கும்.




















