"சென்னை, புனே, குஜராத் மூலம் சீனா எங்களை ஏமாற்றுகிறது" - அமெரிக்காவின் குற்றச்சா...
மொழி : மௌனத்தின் இசை! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 15
கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!
ஷீலாவின் திருமணத்துக்கு வரப்போவதில்லை என்று முடிவெடுக்கிறாள் அர்ச்சனா. அது அவளைச் சுற்றியிருக்கும் அத்தனை பேரையும் வருத்தப்படுத்துகிறது. குறிப்பாக தன் பொருட்டே அவள் இதைச் செய்கிறாள் என்பதால் கார்த்திக்கையும் காயப்படுத்துகிறது. கோபத்தோடு அவளைப் பார்க்கப்போகும் அவன், அவள் தனக்கு பரிசாகக் கொடுத்த, சோப்பினால் செய்யப்பட்ட ஒரு சிறிய வயலின் சிற்பத்தைத் திருப்பிக் கொடுக்கிறான்.
“யாருடைய உணர்வுகளையும் புரிந்துகொள்ளாத நீ கொடுத்த இந்த வயலின் இனியும் என்னிடம் இருந்தா அது வயலினில்லை, வெறும் சோப்புதான். உன்னையும் ஏமாற்றிக்கொண்டு, என்னையும் அவமானப்படுத்தி, எதற்காக இந்த நாடகம் ஆடுகிறாய்? வாழணும்ங்கிற தவிப்பு உன் கண்ணுல தெரியுது. ஏன் அதை மறைக்கிற? வாழ்ந்துதான் பாரேன்!”
என்று தன் மொத்த ஆதங்கத்தையும் இறக்கிவைத்துவிடுகிறான்.

அர்ச்சனா, வாய் பேச முடியாத, காது கேளாத ஒரு மாற்றுத்திறனாளி. ஆனால், அதனிடம் தன் வாழ்க்கையை விட்டுக்கொடுத்துவிடாமல், ஓர் ஆசிரியையாக, நுண்கலை ஆர்வலராக தன்னம்பிக்கையோடும், மனவுறுதியோடும் பயணித்துக்கொண்டிருப்பவள். அவளிடமிருக்கும் அந்த ஆளுமைத் திறனால் கவரப்படும் கார்த்திக்குக்கு அவள் மீது காதல் ஏற்படுகிறது. ஆனால், அர்ச்சனா அதை ஏற்கவில்லை.
வெளியே தன்னம்பிக்கையோடு தெரியும் அர்ச்சனா, உள்ளுக்குள் தயக்கம் நிறைந்தவளாக இருக்கிறாள். தனது மாற்றுத்திறனை அறிந்து தன்னைக் கைவிட்டுப் போய்விட்ட தன் தகப்பனை அவளால் மறக்க முடியவில்லை. அவனது அந்தச் செயல் மனிதர்கள் மீதான அவளது நம்பிக்கையை பலவீனமாக்கியிருக்கிறது.
கூடுதலாக, தன் குழந்தைக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுகிறாள். மேலும், கார்த்திக்கிடம் அவளுக்கு ஒரு கூடுதல் சிக்கலும் இருக்கிறது. வெளியே இசை என்பது இன்னொரு மொழி என்று தத்துவம் பேசும் அவளை, கார்த்திக் ஓர் இசைக்கலைஞனாகவும் இருக்கிறான் எனும் உண்மை உறுத்துகிறது. இசையின் நுட்பங்களை அறிந்திராவிட்டால் கூட பரவாயில்லை, ஆனால், இசை எனும் மொழியையே துய்க்க முடியாமலிருப்பது, அவனுக்கு தான் பொருத்தமானவளில்லை எனும் முடிவுக்கு அவளைத் தள்ளுகிறது.
அதனால்தான், யாராலும் உடைக்க முடியாத ஒரு வேலியை அமைத்துக்கொண்டு, பிடிவாதமாக அதற்குள்ளேயே இருந்துகொள்கிறாள். அந்த வேலியைத்தான் கார்த்திக் இப்போது பிடுங்கி எறிந்திருக்கிறான். அவன் போனதும், அதுவரை ஒரு முனகல் சத்தம் கூட வராத அவளது குரல்வளையிலிருந்து, ஒரு பெருவோலம் எழுகிறது. ஓலமிட்டு அழுகிறாள். அதில் அவள் உருவாக்கி வைத்திருந்த தளைகள் அத்தனையும் தகர்கின்றன. கேமரா அதை முழுமையாகக் காண்பிக்காமல், மெல்ல வெளியேறி, ஊசலாடிக்கொண்டே வந்து அவளது பாட்டியின் முகத்தில் வந்து நிற்கிறது.
அந்த அழுகைச் சத்தம் ஏற்படுத்தும் அதிர்ச்சியும், அதைத் தொடர்ந்து அதன் பொருளை உணர்ந்துகொண்ட பெருநிறைவும், சின்னப் புன்னகையும் அந்தப் பாட்டியின் முகத்தில் வெளிப்படுகிறது. அதே மனநிலைதான் நமக்கும். பெருநிறைவு!

சினிமாவில் சிறந்த கதைகள் சொல்லப்படலாம். சினிமா நம்மைப் பிரமிப்பூட்ட வைக்கலாம். ஆனால், நல்ல சினிமாவின் மொழி என்பது இப்படியான காட்சிகளில்தான் ஒளிந்திருக்கின்றன. அர்ச்சனா அழும் இந்த இடம் இந்தப் படத்தின் மிக முக்கியமான காட்சி. அதில் அர்ச்சனாவின் அழுகையை, உணர்வெழுச்சியை மட்டுமே இன்னும் அதிகமாகக் காட்டி பார்வையாளர்களிடம் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கலாம்… அதைச் செய்யாமல் ஏன் கேமரா வெளியே வருகிறது? அதுவும் சட்டென பாட்டியின் முகத்துக்கு வராமல், மென்மையான ஓர் அலைபாய்தலோடு ஏன் அவரைத் தேடி வருகிறது?
இந்தப் படத்தின் ஒளிப்பதிவைச் செய்தவர் கேவி.குகன், பிரபல தமிழ் இயக்குநர் சரணின் சகோதரர். மொழி, வெள்ளித்திரை, பயணம் என தொடர்ந்து ராதாமோகன் இயக்கிய பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பின்னர் தமிழ், தெலுங்கில் ஒரு சில படங்களையும் இயக்கியிருக்கிறார். மொழி படத்தில், மேலே குறிப்பிட்ட இறுதிக் காட்சியும், அதைத் தொடர்ந்து வரக்கூடிய அர்ச்சனா, கார்த்திக்கிடம் காதலைச் சொல்லும் அந்த சர்ச் காட்சியும் இவரது சென்சிபிளான ஒளிப்பதிவுத் திறமைக்குச் சாட்சி.
வயலட் நிறச்சேலையில், முகம் நிறைந்த புன்னகையுடன் ஜோதிகா, சைகை மொழியில் பிருத்வியிடம் தன் காதலைச் சொல்லும் காட்சி படமாக்கப்பட்ட விதம், ஜோதிகாவின் அழகையும், உணர்வுப்பூர்வமான காதலையும் முழுமையாகக் கொண்டு வந்திருந்தது.
அர்ச்சனாவாக ஜோதிகா நடித்திருந்தார். அவரது கேரியரின் சிறந்த படங்களுள் ஒன்றாக அமைந்தது மொழி. ஒரு வார்த்தை வசனமில்லாத கதாபாத்திரம். முகபாவங்களிலேயே அவரது மகிழ்ச்சி, உற்சாகம், நம்பிக்கை, கோபம், பிடிவாதம், அவநம்பிக்கை அத்தனையையும் நமக்குள் கடத்தியிருந்தார். தனக்கொரு குரலைக் கற்பனை செய்துகொண்டு வரும் பிருத்வியினால் சுயமரியாதை காயப்பட்டு, கோபத்தை அவர் வெளிப்படுத்தும் காட்சி ஒரு தேர்ந்த நடிகை மட்டுமே செய்யக்கூடிய சிறப்பான இடம்.
கார்த்திக்காக பிருத்விராஜ் நடித்திருந்தார். 2002-ல் அவர் அறிமுகமான காலத்திலிருந்து இன்று வரை மலையாளத்தில் பெரிய ஸ்டாராகவும், பிசியான நடிகராகவும் இருக்கிறார். அத்தோடு தமிழ், தெலுங்கு, இந்தி என்று பன்மொழிகளிலும் தொடர்ந்து நடிக்கிறார். நடிகராக மட்டுமல்லாது, இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகங்களும் இவருக்குண்டு. மொழியில் பிரகாஷ்ராஜ், பிரம்மானந்தம் கூட்டணியில் காமெடிக்காட்சிகளிலும், ஜோதிகாவோடான உணர்வுப் பூர்வமான காட்சிகளிலும் தனித்துவமாக வெளிப்பட்டிருந்தார்.

பிருத்வியின் நண்பன் விஜியாக பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார். வில்லனாகவும், குணச்சித்திரமான கதாபாத்திரங்களிலும் நாம் அதுவரை பார்த்துவந்த பிரகாஷ்ராஜ், பிரம்மானந்தத்தோடு இணைசேர்ந்து காமெடிக் காட்சிகளிலும் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்த படம் இது. அத்தோடு தனது டூயட் மூவிஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்திருந்ததும் பிரகாஷ்ராஜ்தான். அவரது தயாரிப்புகளில் அழகிய தீயே, அபியும் நானும், உன் சமையல் அறையில் போன்ற முக்கியமான படங்களின் வரிசையில் மொழிக்கும் ஒரு தனியிடம் உண்டு. சொர்ணமால்யா, பிரம்மானந்தம், எம்.எஸ்.பாஸ்கர் போன்ற பலரும் நடித்திருந்தனர். மகனை இழந்த துக்கத்தில் நினைவு தப்பிய ஒரு பாத்திரமாக, எம்.எஸ்.பாஸ்கர் ஒரு நகைச்சுவை வேடமேற்று நடித்திருந்தாலும், அதன் பின்கதை வெளிப்படும் காட்சியில் நம்மைக் கலங்கடித்துவிடுவார்.
மொழியின் இசையமைப்பாளர் வித்யாசாகர். 1990களில் தொடங்கி, 2010கள் வரை மூன்று தசாப்தங்களாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளிலும் பெரிய ஹிட் ஆல்பங்களைத் தந்து கோலோச்சிக் கொண்டிருந்தவர் வித்யாசாகர்.
ரன், கில்லி, சந்திரமுகி போன்ற கமர்ஷியல் ஹிட் பாடல்களோடு, அன்பே சிவம், மொழி, அபியும் நானும் போன்ற படங்களின் தன்மைக்கேற்ற மென்மையான பாடல்களையும் கொடுத்து நம் மனங்களில் மாறாத இடம்பிடித்தவர் இவர். இந்தப் படத்தில் எஸ்பிபி பாடிய ’கண்ணால் பேசும் பெண்ணே’, ஸ்ரீனிவாஸ் பாடிய ’மௌனமே உன்னிடம்’ போன்ற பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தாலும், வைரமுத்து எழுதி, பல்ராம் பாடிய ‘காற்றின் மொழி’ எனும் பாடல் இந்தப் படத்தின் மொத்த உணர்வையும் அள்ளிக் கொண்டுவந்து கொடுத்தது.
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்…
மனிதரின் மொழிகள் தேவையில்லை…
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்…
மனிதர்க்கு மொழியே தேவையில்லை…

கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருந்தவர் ராதாமோகன். ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் பேசும்-கேட்கும் திறன்களை இழந்தவர்களும், பேச்சு மட்டும் பாதிக்கப்பட்டவர்களும் இசைத்துறையில் சாதித்திருக்கிறார்கள். ஒருவரின் கேட்கும் திறனில் உள்ள குறைபாடுதான், அவர் இசையைப் புரிந்துகொள்வதற்கும், இசைத்துறைக்குள் செல்வதற்கும் பெரும் சவாலாக இருக்கிறது.
அதையும் மீறி, ஷான் பேட்ரிக் ஃபோர்ப்ஸ் (Sean Patrick Forbes) போன்று பிறவியிலேயே கேட்கும் திறனற்றுப் போயிருந்தாலும், இசைத்துறையில் சாதித்த மிகச்சில இசைக்கலைஞர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். தொடுதல் மூலமாகவே இசையை உணர்ந்து, உள்வாங்கிப் பின்னர் பாடகராகவும் மாறிய, ஹன்னா ஊமா (Hanna Ouma) எனும் கென்யா நாட்டு இசைக்கலைஞர் ஒருவரைப் பற்றி சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அப்படியான ஒரு காட்சி இந்தப் படத்திலும் வருகிறது.
கார்த்திக் இசைக்கும் ஓர் இசைக்கோவையை அர்ச்சனா, அதிரும் ஸ்பீக்கர்களின் மீது கைவைத்தே உணருகிறாள். இசை, புலன்கள் கடந்த ஓர் ஆச்சரியம் என்பதை நிரூபிப்பதாக அமைந்திருந்தது அந்தக்காட்சி. ராதாமோகனால், அப்படி ஒரு காட்சியை சிந்திக்கவும், அதை உணர்வு சிதையாமல் எடுக்கவும் முடிந்திருக்கிறது. அதனால்தான் அபியும் நானும், பயணம் போன்ற நல்ல படங்களை தந்திருந்தாலும், ராதாமோகனின் சினிமா வரிசையில் ‘மொழி’க்கென்று ஒரு தனியிடம் எப்போதுமிருக்கும். சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர் போன்ற பல பிரிவுகளில் இந்த மொழி, தமிழ்நாடு அரசு விருதுகள் மற்றும் ஃபிலிம்பேர் விருதுகளைக் குவித்தது.

இறுதிப் பகுதியில் விஜி, ஷீலாவைக் காதலிக்கும் காட்சிக்கோவையொன்று வருகிறது. தன் காதலை, எப்படி ஷீலாவிடமும், அவரது பெற்றோரிடமும், தன் அம்மாவிடமும் சொல்லி அனுமதி வாங்கினேன் என்று கார்த்திக்கிடம் சொல்லிக்கொண்டிருப்பான் விஜி. அப்போது அதுவரை நாம் திரையில் பார்த்திராத விஜியின் அம்மா கதாபாத்திரம் பற்றிய ஓர் உரையாடல் வருகிறது.
இளம் வயதிலேயே கணவனை இழந்த அந்த அம்மா, தன் மகன் ஓர் இளம் விதவையை மணக்கவிருக்கிறான் எனும் விசயமறிந்து, தன் மகனை உச்சிமுகர்ந்து முத்தமளித்திருக்கிறாள். இப்படிச் சொல்லப்படாத பின்கதைகளையும், காட்டப்படாத கதாபாத்திரங்களையும் பார்வையாளன் உணரும்படியான திரைக்கதைகளே நல்ல சினிமாவுக்கான இலக்கணம்.
இந்த மொழி என்பது பேசும் திறன் குறித்த படம் அல்ல; புரிந்துகொள்ளும் திறன் பற்றிய படம். வார்த்தைகள் இல்லாமல்கூட காதலைப் புரிந்துகொள்ள முடியும். கேட்கும் திறனின்றியும் கூட இசையைப் புரிந்துகொள்ள முடியும். தான் இதுவரை பார்த்திராத ஓர் இளம்பெண்ணின் வலியைக்கூட ஒரு முதுமகள் புரிந்துகொள்ள முடியும்.
வாழ்க்கை தரும் எந்தத் தளைகளையும் மனிதனால் எதிர்கொள்ள முடியும் என்று இவ்வளவு மென்மையாக, இத்தனை அழகாக சொன்ன தமிழ் படங்கள் மிகக் குறைவு. அதனால்தான், இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் 'மொழி' இன்னும் நம்மோடு பேசிக்கொண்டே இருக்கிறது.!
(தொடரும்)



















