செய்திகள் :

`யாரை நம்புவது? எங்கே அனுப்புவது?' - பெண் குழந்தையை பெற்ற ஒரு தாயின் பரிதவிப்புகள் | #HerSafety

post image

பிஞ்சுக் குழந்தைகள் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவிகள் முதல் முதியோர் வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். சென்னை, கோவை என ஊர்களின் பெயர் மட்டுமே மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் பிஞ்சு முகங்கள் சிதைக்கப்படும் கொடூர கதைகள் மாறவில்லை. ஒவ்வொரு நாளை கடப்பதற்குள் குறைந்தது இரண்டு வன்கொடுமை சம்பவம் பற்றியாவது கேள்விப்பட்டுவிடுகிறோம்.

செய்திகளில் அல்லது நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களில், என எப்படியாவது காதுகளை வந்து சேர்ந்துவிடுகிறது. ஒரு பெண்ணாக இந்த சமூகத்தில் நடக்கும் கொடூர சம்பவங்களை எப்படி எதிர்கொள்ள போகிறேன் என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே ஒரு பெண் குழந்தையை பெற்ற தாயாக இன்னும் கூடுதலாக என் மனம் பதறுகிறது.

முன்பு போல பெண்கள் மீதான, குழந்தைகள் மீதான வன்கொடுமை செய்திகளை என்னால் அவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. நெஞ்சு பதைபதைக்கிறது, ஆழ்மனதில் ஏதோ ஒரு பயம் தோன்றுகிறது.

என் மகள் நன்றாக சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும்போது, என் மனம் எங்கெங்கோ அலைபாய்கிறது. ஒரு தாயாக என் குழந்தையை என் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆனால் இந்த சமூகம் அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்கிறதா? அவளை எப்படி பள்ளிக்கு அனுப்புவது? எப்படி விளையாட அனுப்புவது? யாரை நம்புவது? என பல்வேறு யோசனைகள் என் மனதிற்கு வந்து செல்கின்றன. இது போன்ற கொடூர சம்பவங்கள் நடக்கையில் என் மனம் அவளை சுற்றி சுற்றி வருகிறது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

யாரை நம்புவது?

அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், ஆசிரியர்கள் என எல்லார் மீதும் ஒரு விதமான சந்தேகப் பார்வை படர்வதை என்னால் தடுக்க முடியவில்லை. இந்த மனநிலை எவ்வளவு கொடுமையானது என்பதை வார்த்தைகளால் என்னால் விவரிக்க முடியவில்லை.. என் மகளுக்கு நல்லதையும், மனிதர்கள் மீதான நம்பிக்கையும் கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் எனக்கு உள்ளது. ஆனால் சமூகத்தில் நடப்பதை பார்த்தால் அவளை ஒரு கூண்டுக்குள் அடைத்து தான் வளர்க்க வேண்டுமோ? என்ற குழப்பமும் எனக்குள் நிலவுகிறது.

”பயப்படாதே தைரியமாக இரு” என்று அவளுக்கு சொல்லிக் கொடுப்பதா அல்லது ”யாரிடமும் பேசாத தனியாக போகாதே” என்று சொல்லி அவளை ஒரு சின்ன உலகத்திற்குள் சுருக்குவதா? இந்த இரட்டை மனநிலையால் ஒவ்வொரு நாளும் நான் தாழ்ந்து போகிறேன்.

"நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்" பற்றி என் மகளுக்கு எப்படிப் புரிய வைப்பது? அவளது சின்னஞ்சிறு உலகில் 'கெட்டது' என்ற ஒன்றை அறிமுகப்படுத்த என் மனம் கூசுகிறது. "யாராவது அப்படித் தொட்டால், சத்தமாக 'வேண்டாம்' என்று கத்திவிட்டு ஓடிவந்துவிட வேண்டும்" என்று நான் சொல்லிக்கொடுக்கும்போது அவளது பிஞ்சுக் கண்களில் தெரியும் குழப்பம்.. என் இதயத்திலிருந்து ரத்தம் வரச்செய்கிறது.

இந்த உலகில் என் தேவதையை எப்படி பத்திரமாக சுதந்திரமாக வளர்ப்பேன். சட்டங்கள் கடமையாக்கப்பட வேண்டும் தண்டனைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்பதெல்லாம் ஒரு பக்கம் கோரிக்கையாக இருந்தாலும், இந்த சமூகத்தின் மனசாட்சி எப்போது விழித்துக் கொள்ளும்? ஒவ்வொருவரின் பார்வையும் எப்போது மாறும்? அடுத்த வீட்டுப் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளாகப் பார்க்கும் பக்குவம் எப்போது வரும்?

அவர்களை எங்கு தான் அனுப்புவது?

உறவுகளை நம்ப கூட பயமாக உள்ளது.. பெரியப்பா, மாமா, தாத்தா ஆறு ஆண்டுகளாக உறவுக்கார பெண் பிள்ளைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள், அக்கம் பக்கத்தினர் இனிப்பு வாங்கி கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகிறார்கள், பள்ளிக்கு செல்லும் இடத்தில் நல்லதை மட்டும் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுகிறார்கள், வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிர் இழக்கிறது.. எனில் எங்கே தான் அனுப்புவது? யாரைத்தான் நம்புவது? இதற்கெல்லாம் மதுவும், போதை பொருளும் தான் காரணம் என்கிறார்கள்.

போதையில் இது போன்ற தவறுகளை செய்வதாக அலட்சியமாக கூறுகின்றனர். போதைப் பொருள்கள் எப்படி வருகின்றன? கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கிறது என்று சொன்னால்.. அதையும் மீறி தான் இன்றைய இளைஞர்களிடம் செல்கிறதா? இப்படி பல கேள்விகள் எனக்குள் வருகின்றன. ஏதோ ஒரு இடத்தில் தவறு நடப்பதால் தான் இன்று எத்தனையோ பிஞ்சு முகங்கள் சிதைகின்றன.

ஒட்டுமொத்தமாக ஒழிப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது? நடந்து முடிந்த சம்பவத்திற்கு மேலோட்டமாக ஆறுதலையும் விமர்சனத்தையும் முன் வைக்கிறார்களே தவிர அதற்கான முழுமையான தீர்வை கொடுக்க யாரும் முன் வருவதில்லை.

பாதுகாப்புச் சட்டங்கள், குற்றங்களை குறைக்க வேண்டும், தடுக்க வேண்டும்... ஆனால் இங்கு என்ன நடக்கிறது... குற்றம் செய்பவர்களின் எண்ணங்களே "என்ன செய்து விட முடியும்" என்ற நிலையில்தான் இருக்கிறதோ என மனம் அஞ்சுகிறது. இந்த மனநிலை உருவாக யார் காரணம்? சமூகத்தை, சட்டத்தை குற்றம் சொல்லி எந்தப் பயனும் இல்லை, தனிமனிதர் ஒவ்வொருவரும் இந்தச் சமூகத்தில் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.

இப்படியே சென்று கொண்டிருந்தால் அன்று சுமை என நினைத்துப் பெண் குழந்தைகள் வேண்டாம் என்று கள்ளிப்பால் கொடுத்துக் கொன்றார்கள். சமூகத்தில் இவ்வாறு தொடர்ந்து நடந்தால்... பெண் குழந்தை இந்த உலகத்திற்கு கொண்டுவந்து அவர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டால் என்ன செய்வது என்று பெண் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளப் பெற்றோர்களுக்கே அச்சம் வந்துவிடுமோ என அஞ்சும் நிலைக்குச் சில கொடூரங்கள் பதைபதைக்க வைக்கிறது. ஆனால், உங்கள் அச்சம் புரிகிறது, என் போன்ற தாய்மார்களின் இந்த மனநிலை உலகையே அழித்துவிடும் அல்லவா!

பெண் குழந்தைகள் வளர வளர, இந்த உலகம் அவர்களுக்கு பாதுகாப்பானதாக மாற வேண்டும் என்ற எண்ணங்களைத் தவிர, வேறு ஒன்றுமில்லை!

இப்படிக்கு,

பிரியா ரெத்தினம்

மீண்டும்... மீண்டும்...

கோவை மாவட்டத்தில் நடந்த கல்லூரி மாணவியின் பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் சம்பவம் பெரிய அதிர்ச்சியை கிளப்பியது.

அதன் அதிர்வுகள் முழுமையாக அடங்கும் முன்பே இப்போது ஒரு சம்பவம். இப்போது என்று கூறுவதை விட, தொடர்ந்து என்று கூறுவது சரியாக இருக்கும்.

பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக விகடன் ஒரு முன்னெடுப்பை எடுக்கிறது.

அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு இங்கே ஒரு சர்வே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டு நீங்கள் பகிரும் பதில்கள் மிக முக்கியமானது. உங்களின் தனிப்பட்ட அடையாளம் பாதுகாக்கப்படும்.

'எனக்கு டிரெயின்ல நடந்த 'அந்த' சம்பவத்தை கம்ப்ளெயின்ட் பண்ணியிருக்கலாம்; ஆனா..' | #HerSafety

ரெண்டு, மூணு பசங்க சேர்ந்து இருந்தா... தண்ணீ அடிச்சிருந்தா... பொண்ணுங்க அரைகுறையா டிரஸ் பண்ணியிருந்தா தான் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடக்கும்னு சொல்ல முடியாது. இது எதுவுமே இல்லாத போது தான், எனக்கு... மேலும் பார்க்க

கோவை மாணவியின் கண்ணீரே கடைசியாக இருக்கட்டும்! | #HerSafety

கோவை விமான நிலையம் அருகே கடந்த 2 ஆம் தேதி இரவு 20 வயதான கல்லூரி மாணவியை, 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி பெண்களுக்கு எதிரா... மேலும் பார்க்க

'ரெண்டே ரெண்டு நிமிஷம் பெண்களே! நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?’ | உங்கள் கருத்து? |#HerSafety

மீண்டும்... மீண்டும்...கோவை மாவட்டத்தில் நடந்த கல்லூரி மாணவியின் பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், அண்ணா பல்கலைக்கழக மாணவியின் ப... மேலும் பார்க்க

`இனி அந்த வார்த்தைகள், கெட்ட வார்த்தைகள் ஆகட்டும்’ | கோவை சம்பவம் | #HerSafety

'கல்லு, கண்ணாடி... முள்ளு, சேலை... ஆம்பளைன்னா அப்பிடி இப்பிடித்தான்' என்கிற போன நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள், 'அந்த ராத்திரி நேரத்துல இந்தப் பொண்ணு ஏன் அங்க போகணும்' என்கிற புத்தம் புதிய கருத்தை, சமூக வ... மேலும் பார்க்க