"மெட்ரோவுக்கு இங்கு போராடி என்ன பயன்? நாடாளுமன்றத்தை முடக்குங்கள்" - திமுகவுக்கு...
ராஜஸ்தான்: சித்ரவதை செய்த மாணவர்கள்; கண்டுகொள்ளாத ஆசிரியர்; 4ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நீர்ஜா மோடி பள்ளியில் 4வது வகுப்பு படித்து வந்த 9 வயது மாணவி அமைரா குமார் மீனா, பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
காலை 11 மணிக்கு பள்ளி வகுப்பில் இருந்த மாணவர்கள் சிலர் மீனாவிற்கு எதிராக டிஜிட்டல் சிலேடில் ஏதோ எழுதியதாகத் தெரிகிறது. அதனைப் பார்த்தவுடன் மீனா அதிருப்தியுடன் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதனை அழிக்கும்படி மாணவர்களிடம் மீனா தெரிவித்துள்ளார். அதோடு இது போன்று எழுதுவதைத் தவிர்க்கும்படியும் கேட்டுக்கொண்டார். மீனாவும் ஏதோ டிஜிட்டல் ஸ்லேடில் எழுதியதாகத் தெரிகிறது. அதன் பிறகு திடீரென மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் இது குறித்து விசாரிக்க சி.பி.எஸ்.சி. போர்டு இரு நபர் கமிட்டி ஒன்றை அமைத்திருந்தது. அக்கமிட்டியின் விசாரணையில் சம்பவம் நடந்த அன்று வகுப்பில் மாணவர்களிடையே ஏதோ கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது.

இதனால் மாணவி மிகவும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். சில மாணவர்கள் டிஜிட்டல் போர்டில் மாணவி குறித்து எழுதியுள்ளனர். அதனாலும் மாணவி மன அழுத்தத்தில் இருந்ததாகத் தெரிய வந்துள்ளது என்று விசாரணை அறிக்கை கூறுகிறது.
இது குறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில், ''கடந்த 18 மாதங்களாக எங்களது மகளை சக மாணவர்கள் துன்புறுத்தி வந்தனர். ஆனால், அது குறித்து வகுப்பு ஆசிரியர் புனிதாவிடம் தெரிவித்தபோது அவர் அப்புகார் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புகார் செய்த போது தவறு செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் எங்களது மகளிடம் ஆசிரியர் புனிதா கடுமையாகக் கத்தி இருக்கிறார்.
பாலியல் ரீதியாகவும் மாணவர்கள் சித்திரவதை செய்துள்ளனர். மோசமான வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளனர். ஆசிரியையிடம் 5 முறை புகார் செய்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மாணவர்கள் மத்தியில் கத்தி ஆசிரியை அவமானப்படுத்தியதால்தான் எங்களது மகள் தற்கொலை செய்துள்ளார்'' என்று தெரிவித்தனர்.
மாணவி மீனா தன்னிடம் புகார் செய்ததை ஆசிரியை புனிதா ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் டெல்லியில் ஆசிரியர்கள் துன்புறுத்துவதாகக் கூறி டெல்லியில் 10வது வகுப்பு படிக்கும் மாணவர் மெட்ரோ ரயில்நிலையத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.


















