AUS v ENG: Ashes-ல் கடந்த 100 ஆண்டுகளில் ஓர் அதிசயம்; முதல் நாளில் மாஸ் காட்டிய ...
`கூட்டத்தினரின் பாதுகாப்புக்கு ஏற்பாட்டாளர்களே முழு பொறுப்பு’ - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு
அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அதில் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு, திட்டமிடுவதற்கு, முறைப்படுத்தவும், கண்காணிக்கவும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசு குறிப்பிட்டுள்ளது.
5 ஆயிரம் பேருக்கு மேல் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கக்கூடிய பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோடு ஷோக்கள், ஆர்ப்பாட்டம், போராட்டம், கலாசார மற்றும் மத நிகழ்வுகளுக்கு இந்த விதிகள் பொருந்தும்.
வழிபாட்டு தலங்களில் நடைபெறும் மத ரீதியான கூட்டங்களுக்கு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தாது.

நடத்தை விதிகள் அமலில் இருக்கும் தேர்தல் நேரங்களில் தேர்தல் ஆணையம் வெளியிடும் விதிகள் மட்டுமே அமலில் இருக்கும். இருப்பினும், கூட்டக் கட்டுப்பாடு, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை வழங்க செய்யும் இந்த விதிகளை அமல்படுத்துவது ஏற்பாட்டாளர்களின் பொறுப்பு.
5 ஆயிரத்திற்கும் குறைவாக மக்கள் திரளும் கூட்டங்களுக்கு இது பொருந்தாது. ஆனால் தற்போதைய நடைமுறைகளை பின்பற்றி அனுமதி பெற வேண்டும் என்ற விதிகள் தொடரும்.
பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோடு ஷோக்கள், ஆர்ப்பாட்டம், போராட்டம் ஆகிவை நடைபெற உள்ள இடங்களை காவல் துறை அதிகாரிகள், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் கலந்தாலோசித்து மாவட்ட ஆட்சியர் முடிவெடுத்து அறிவிப்பார்.
பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோடு ஷோக்கள், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தப்படும்முன் என்ன தேதி, நேரம், எதற்காக நடத்தப்படுகிறது, எவ்வளவு மக்கள் பங்கேற்பார்கள், எத்தனை வாகனங்கள் வரும், பங்கேற்கும் முக்கிய தலைவர்களின் விவரங்களை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
ரோடு ஷோக்களை பொருத்தவரை பங்கேற்கும் முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தை துவங்கும் இடம் மற்றும் முடிக்கும் இடங்களையும், பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களையும் குறிப்பிட்டு தெரிவிக்க வேண்டும்.
தலைமை விருந்தினர்கள் வருகை தரும் நேரம் மற்றும் புறப்படும் நேரத்தையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
இது மாதிரியான நிகழ்வுகளில் மக்கள் எவ்வளவு பேர் பங்கேற்க முடியும் என்பதை பொதுப்பணித்துறை பொறியாளர் சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து சான்றிதழ் அளிக்க வேண்டும். அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொதுப்பணித்துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பொதுக் கூட்டம் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்த சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதியை பெற வேண்டும்.
நிகழ்ச்சிகளுக்கு 10 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
50 ஆயிரம் பேருக்கு மேல் திரள்வார்கள் என எதிர்பார்க்க கூடிய கட்சி மாநாடுகள் போன்ற நிகழ்வுகளுக்கு 30 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
திடீரென ஏற்பாடு செய்யப்பட கூடிய ஆர்ப்பாட்டம், போராட்டங்களை பொருத்தவரை மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியரும், சென்னைக்கு மாநகர காவல் ஆணையரும் முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களில் முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி, உள்ளிட்ட மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்த விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். கூட்டத்தினரின் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே முழு பொறுப்பு. நிகழ்ச்சியின் போது பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே ஏற்க வேண்டும். நிகழ்ச்சி முடிந்த பின் அந்த இடத்தை முழுமையாக தூய்மை செய்து வழங்க வேண்டும்.
கர்பிணி பெண்கள், மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்று திறனாளிகள் நீண்ட நேரத்திற்கு நிற்க வைக்காமல், அவர்களுக்கு பாதுகாப்பாக நிகழ்ச்சியில் பங்கேற்க தேவையான அனைத்து வசதிகளையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் செய்ய வேண்டும்.
நிகழ்ச்சி துவங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


















