AUS v ENG: Ashes-ல் கடந்த 100 ஆண்டுகளில் ஓர் அதிசயம்; முதல் நாளில் மாஸ் காட்டிய ...
Yellow Review: பயணத்தின் தேவையை உணர்த்தும் ஃபீல் குட் `எல்லோ'; க்ரீன் சிக்னல் பெறுகிறதா?
தந்தையின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் வீட்டுப் பொறுப்புகள் மகளான ஆதிரையிடம் (பூர்ணிமா ரவி) வந்துவிட, அதனால் அவரது காதலனுடனான உறவு முறிந்துவிடுகிறது.
இந்நிலையில் இயந்திர வாழ்க்கையில் தன்னையே இழந்துவிட்டதாக உணர்கிறார் ஆதி. தந்தை சோமசுந்தரத்தின் (டெல்லி கணேஷ்) ஓர் ஆறுதல் வார்த்தையும், பழைய புகைப்பட ஆல்பத்தில் தட்டுப்படும் ஒரு பழைய நினைவும் அவரைத் திடீரென கேரளாவுக்கு ஒரு தனிப்பயணத்தைத் தொடங்க வைக்கிறது.

தன்னை வளர்த்த பாட்டியையும் பழைய நண்பர்களையும் சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்துக்கு ஏதுவாக, வழியில் சந்திக்கும் சாய் (வைபவ் முருகேசன்) என்ற இளைஞனும் உதவத் தொடங்குகிறார். இருவரின் சாலைப் பயணம் எந்தெந்த பாதைக்கு அவர்களை அழைத்துச் செல்கிறது என்பதே இந்த ‘எல்லோ'.
வைபவ் முருகேசன் ஆரம்பத்தில் சற்றே செயற்கையான உடல்மொழியுடன் தெரிந்தாலும், போகப் போக அதைச் சரிசெய்து இயல்புக்கு வந்துவிடுகிறார். இருவரையும் மையமாகக் கொண்ட கதை என்பதால், அவர்களுக்கிடையிலான உறவின் நுணுக்கங்களையும் உணர்வலைகளையும் இன்னும் கொஞ்சம் ஆழமாகவும் ரசிக்கும்படியும் எழுதியிருக்கலாம்.
ஒரே ஒரு காட்சி என்றாலும் படத்தின் ஆன்மாவையே நடிப்பில் கடத்தி அசத்தியிருக்கிறார் டெல்லி கணேஷ். அனுபவம் பேசியிருக்கிறது!

சிறியதொரு கதாபாத்திரத்தில் நமிதா கிருஷ்ணமூர்த்தியின் நடிப்பில் ஜென் Z வைப்! லீலா சாம்சன் தொடங்கி, பயணங்களில் தட்டுப்படும் அனைத்து கதாபாத்திரங்களும் சற்றே செயற்கைத்தனம் கூடியே வலம் வருகின்றன.
அதிலும் மலையாளமும் தமிழும் கலந்து பேசுவதாக வரும் கதாபாத்திரம் நகைச்சுவை என்கிற பெயரில் நம் பொறுமையை மிகவும் சோதிக்கிறது.
அபி அத்விக்கின் ஒளிப்பதிவு பச்சைப் பசேலென நீளும் சாலைகளையும், கண்ணுக்குக் குளிர்ச்சியான கேரள அழகையும் சிறப்பாகப் படம் பிடித்திருக்கிறது. ஆனால், ஆங்காங்கே சில காட்சிகள் அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆவதைத் தவிர்த்திருக்கலாம்.
ஆனந்த் காஷிநாத்தின் பின்னணி இசை, பெரும்பாலும் ‘ஃபீல் குட்’ உணர்வைத் தக்கவைக்க உதவுகிறது; ஆனால் சில இடங்களில் காட்சிக்கும் இசைக்கும் தொடர்பே இல்லையோ என்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது.

கிளிஃபி கிறிஸ் – ஆனந்த் காஷிநாத் இணைந்து கொடுத்த பாடல்கள் பெரிதாக “அட!” சொல்ல வைக்கவில்லை என்றாலும், “ஐயோ!” என்றும் சொல்ல வைக்கவில்லை.
ஸ்ரீ வாட்சனின் படத்தொகுப்பு கொஞ்சம் இறுக்கமாக இருந்திருந்தால், கேரளாவுக்கே செல்கிற களைப்பு உண்டாக்கியிருக்காது. அதே போல பின்கதையை இங்கும் அங்கும் மாற்றி மாற்றிக் காட்டிய விதமும் சற்றே எமோஷனைச் சிதறவிட்டிருக்கிறது.
தன்னைத் தொலைத்த இடத்திலிருந்து தன்னை மீட்டெடுக்க வேண்டும் என்கிற ஒன்லைனுடன் திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் ஹரி மஹாதேவன். ஒரு ஃபீல் குட் டிராமாவுக்கான செட்டப்புகள் ஓரளவுக்குச் சரியாகச் செய்யப்பட்டு, டெல்லி கணேஷின் வசனங்கள் நம்மை சுவாரஸ்யப்படுத்துகின்றன.
ஆனால் அதன்பிறகு வைக்கப்பட்ட காட்சிகள் சற்றே செயற்கைத்தனமான வசனங்கள், மைண்ட் வாய்ஸ்கள் போன்றவை வந்த ஆர்வத்தை கொண்டை ஊசி வளைவுகளில் ஏற்றிவிடுகின்றன. அதிலும் கிளைக் கதையாக வருகிற ரயில் கதை சிறப்பாக இருந்தாலும் கதையில் வலிந்து திணிக்கப்பட்ட உணர்வையே கொடுக்கிறது.
இரண்டாம் பாதி ஆரம்பிக்க, இரவில் ரவுடிகள் வம்பிழுக்கும் இடம் சற்றே சிறப்பாக ஸ்டேஜிங் செய்யப்பட்டிருக்கிறது.
வாழ்க்கைச் சூறாவளியில் ஒவ்வொருவருக்கும் ஓர் இடைவெளியும், ஒரு துணையும் தேவை என்ற செய்தியை மென்மையாகச் சொல்ல முற்பட்டிருக்கிறார் இயக்குநர். ஆனால் அந்த உணர்வுகளைப் பதிவு செய்யும் அழுத்தமான வசனங்களோ, சுவாரஸ்யமான திரைக்கதையோ இல்லாமல் ஒரு டிராவல் வ்லாக் போலவே காட்சிகள் நகர்வது ஏமாற்றம்!

அதோடு காட்சிக்குக் காட்சி பயணங்களில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் தத்துவங்களை உதிர்த்துக் கொண்டே இருப்பது அயர்ச்சி!
உடைந்த மனது, பயணத்தில் தான் சந்திக்கும் மனிதர்களால் தன்னைத்தானே சரி செய்கிறது என்பதைப் பேசும் இந்த ‘எல்லோ’, திரைக்கதையில் இன்னும் சிரத்தை எடுத்திருந்தால் க்ரீன் சிக்னல் பெற்றிருக்கும்.















