"இன்ஜின் இல்லாத கார் திமுக; அதை கூட்டணி என்ற லாரி இழுக்கிறது" - எடப்பாடி பழனிசாம...
வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம்: ``யாருக்காக இந்த ஆட்சி?" - தவெக தலைவர் விஜய் கேள்வி!
சென்னையிலிருந்து திருத்தணி சென்ற வடமாநில இளைஞர் ஒருவர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சில இளைஞர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரீல்ஸ் எடுக்க அந்த சிறுவர்கள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்ட இளைஞர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவர் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் பல்வேறு கருத்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில், ``சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் இளைஞர்கள் சிலர், நேற்று மற்றொரு இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.
இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை. இளைஞர்கள் எக்கேடும் கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்ற ஆளும் அரசின் அலட்சியத்தையும் பொறுப்பின்மையையுமே இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. தமிழகத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டுசெல்லும் திட்டங்கள் இல்லை. இளைஞர்கள் நல்ல முறையில் கல்வி கற்க, ஏற்ற சூழல் இல்லை. தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் இல்லை. புத்தாக்கம் இல்லை.

புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் இல்லை. இவை எவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்காமல், யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள்? எஞ்சியிருக்கக் கூடிய ஆட்சிக் காலத்திலாவது போதைப் பொருட்கள் புழக்கத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கபட நாடக அரசை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.












