'மிசா வரலாறு' Vijay-க்கு, M.K Stalin பதிலடி & சீமானின் 50 சீட் ஸ்கெட்ச்! | Elang...
வந்தே பாரத் ரயிலில் RSS பாடல்; "இந்துத்துவா அரசியலைப் புகுத்தும் நடவடிக்கை" - பினராயி விஜயன் கண்டனம்
பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் இருந்து வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலம் நாடு முழுவதும் 4 வந்தே பாரத் ரயில் சேவைகளைத் தொடங்கிவைத்தார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் சவுத் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் சேவையை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
எர்ணாகுளத்தில் நடந்த நிகழ்ச்சியில் கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், மத்திய அமைச்சர்கள் சுரேஷ்கோபி, ஜோசப் குரியன், கேரள அமைச்சர் பி.ராஜிவ் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
எர்ணாகுளத்திலிருந்து தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயிலுக்குள் இருந்த மாணவர்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பாடும் 'பரம பவித்ர மதாமி மண்ணில் பாரதாம்பயே பூஜிக்கான்' என்ற மலையாளப் பாடலைப் பாடினார்கள்.
அந்த வீடியோவை தென்னக ரயில்வே தனது எக்ஸ் தளத்தில் பதிவுசெய்தது. அதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு கருத்துகள் எழுந்தன. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அரசு விழாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பாடும் படல் பாடப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தீவிர இந்துத்துவ அரசியலை ரகசியமாகப் புகுத்தும் நடவடிக்கை நடந்துகொண்டிருக்கிறது. மத வெறுப்பு, வகுப்புவாத பிளவு அரசியலைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் ஆர்.எஸ்.எஸ் பாடலை அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ திட்டத்தில் கலந்தது அரசியலமைப்பு கொள்கையை மீறுவதாகும்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயைக் கூட சங்பரிவார் தங்கள் வகுப்புவாத அரசியல் பிரசாரத்திற்காகப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்தப் பாடலை 'ஒரு தேசபக்தி பாடல்' என்ற தலைப்பில் தெற்கு ரயில்வே சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தன்னைத்தானே கேலிக்குள்ளாக்கியதுடன், இந்தியத் தேசியத்தையும் கேலி செய்துள்ளது.

சுதந்திரப் போராட்டத்தின்போது இந்தியாவின் மதச்சார்பற்ற தேசியவாதத்தின் ஆணிவேராகச் செயல்பட்ட ரயில்வே, இப்போது சுதந்திரப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த ஆர்.எஸ்.எஸ்-இன் வகுப்புவாத அஜண்டாவை நிறைவேற்ற குடை பிடிக்கிறது.
வந்தே பாரத் தொடக்க விழாவில் தீவிர இந்துத்துவா அரசியலை மறைமுகமாகப் புகுத்துவதைப் பார்க்க முடிந்தது. மதச்சார்பின்மையை அழிக்கும் குறுகிய அரசியல் மனநிலை இதன் பின்னால் உள்ளது. இதை உணர்ந்துகொண்டு ஒட்டுமொத்த மக்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.















