செய்திகள் :

BB Tamil 9 Day 34: எவிக்ட் ஆன துஷார்; Prank பஞ்சாயத்தை நீண்ட நேரத்திற்கு இழுத்த விசே - நடந்தது என்ன?

post image

வழக்கமான ‘பிரம்பு வாத்தியார்’ அவதாரத்தோடு விஜய் சேதுபதி இருந்தாலும் இந்த எபிசோடில் அவர் அடித்த நையாண்டியான பன்ச் லைன்கள் அற்புதம். திவாகர், பாரு, கம்ருதீன், திவ்யா என்று பலரையும் நக்கலடித்த விதம் அருமை. 

‘அது Prank இல்ல. உண்மையான சண்டை.  நாசூக்கா மூடி மறைச்சுட்டாங்க” என்று ஜேம்ஸ்பாண்ட்தனமாக திவாகர் கண்டுபிடித்துச் சொன்னதை “ஷோக்காக பண்ணோம்ன்றதை ஷோக்கா கண்டுபிடிச்சிட்டீங்களே.. திவாகர்” என்று ரைமிங்கில் விசே சொன்னதில் ‘கிரேஸி மோகன்’ வாசனை. (ஸ்கிரிப்ட் எழுதியவருக்கு பாராட்டுக்கள்!) 

BB TAMIL 9 DAY 34
BB TAMIL 9 DAY 34

ஆனால் என்னவொன்று, ஒரு டாப்பிக்கை நீண்ட நேரத்திற்கு இழுத்து லைட்மேன், கேமராமேன் என்று எல்லோரிடமும் “நீங்க… உங்க கருத்தைச் சொல்லுங்க” என்று சலிப்பேற்றுவதைத் தவிர்க்கலாம். 

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 34

மேடைக்கு வந்த விசே “இவங்க கருத்துப் பரிமாற்றத்தை கத்தறதுன்னு புரிஞ்சு வெச்சிருக்காங்க. ‘ஆட்டத்தை மாத்துவேன்’னு உள்ளே போனவங்களும் கூட்டத்துல ஒருத்தரா ஆகிட்டாங்க. பினாயில் எடுத்துப்போக மறந்துட்டாங்கபோல” என்று வைல்ட் கார்ட் என்ட்ரிகள் கூட்டத்தில்  சேர்ந்து கோவிந்தா போடுவதைக் கிண்டலடித்தார்.

வீட்டுக்குள் சென்றதும் முதலில் திவாகரைப் பார்க்க அவர் தனது டிரேட் மார்க் (ரொமான்ட்டிக் ஸ்டார்) புன்னகையுடன் எழுந்து நிற்க “இப்பல்லாம் மனசுக்குள்ள பட்டர்பிளை பறக்குது போல” என்று கிண்டலடித்தார். 

அடுத்ததாக ஆரம்பித்தது அந்த விசாரணை. பிரவீன், கம்ருதீன், பிரஜின் இணைந்து நடத்திய prank பற்றியது. எதற்கும் கருத்தே சொல்லாத அரோரா வாயிலிருந்தும் வார்த்தைகளைப் பிடுங்கும் வரை இந்த விசாரணையை இழுத்துச்சென்றார் விசே. 

“ஏன்.. சாண்ட்ரா பயந்தீங்க..?” என்று விசே கேட்க “இந்த ஷோவை எங்க குழந்தைகளும் பார்ப்பாங்க.. அதான் பயமா இருந்தது” என்று பரிதாபமாக சொன்னார் சாண்ட்ரா. “இங்க என்ன சொத்து பிரச்னையா நடக்குது... இது கேம்தானே.. அதனாலதான் கம்ருதீனை ஓரம் கட்டினேன்” என்று வினோத் சொல்ல “அப்ப மத்த ரெண்டு பேரும் எப்படி போனா பரவாயில்லையா.. பிடிச்ச ஆளை மட்டும் பிரச்னைல இருந்து காப்பாத்துவீங்களா?” என்று விசே கேட்க அவசரமாக அமர்ந்தார் வினோத். 

BB TAMIL 9 DAY 34
BB TAMIL 9 DAY 34

அடுத்து எழுந்த திவாகர் நடந்ததை விவரிக்க “அதைத்தான் நாங்க பார்த்துட்டமே.. நீங்க போடற ரீல்ஸ்ல அது என்ன வசனம்.. என்ன காட்சின்னு விவரிச்சிட்டு அப்புறமா போடுவீங்களா?” என்று விசே மடக்க “அது எப்படி சார்.. ரீல் வளவளன்னு ஆயிடுமே?” என்று திவாகர் இளிப்புடன் சொல்ல “அப்ப ஷோ வளவளன்னு ஆனா பரவாயில்லையா?” என்று விசே கேட்டவுடன் டபக்னெ்று அமர்ந்தார் திவாகர். (ரீல்ஸ்ஸூம் வளவளன்னுதான் இருக்கு பாஸ்!)

“பாரு இல்லாம ஒரு சண்டையா?” - கிண்டலடித்த விசே

அடுத்து பாரு எழுந்ததும் ஆடியன்ஸிடமிருந்து சர்காஸ்டிக்கான கைத்தட்டல் கேட்டது. “சண்டை நடந்தப்ப நான் இல்லை. பாத்ரூம்ல இருந்தேன்” என்று பாரு சொல்ல “அதானே.. வீட்ல ஒரு பிரச்னை நடந்தா.. நாம அங்க இருந்தாகணுமே.. நாம இல்லாம ஒரு பிரச்னை நடக்கலாமா.. அந்த ஏக்கம் உங்க கண்ல தெரியுது.. நீங்க இருந்திருந்தா ஒவ்வொருத்தரையும் மூலைக்கு மூலை தூக்கிப் போட்டிருப்பீங்க” என்று சகட்டுமேனிக்கு விசே கிண்டலடிக்க சங்கடமான சிரிப்புடன் அமர்ந்தார் பாரு. 

“நீங்க மூணு பேரும் பண்ண காரியத்திற்கு வீட்டோட ரியாக்ஷன் என்னன்னு உங்களுக்கு தெரியணும். இப்ப நீங்களே விஷயத்தை உடைங்க” என்று பிரேக்கில் சென்றார் விசே. பிராங்க் செய்த மூவரும் மண்டியிட்டு ‘இது சும்மா லுலுவாய்க்கு’ என்று சொல்ல, மக்கள் சிரிப்பார்கள் என்று பார்த்தால் ஏறத்தாழ அனைவரும் கோபம் அடைந்தார்கள். சாண்ட்ராவின் முகத்தில் அப்பட்டமான ஷாக். “நாளைக்கு உண்மையிலேயே சண்டை நடந்தா யாரும் வர மாட்டாங்க” என்று ஆவேசமானார் கெமி.

இந்த விளக்கத்தின் போது வினோத்திற்கும் பிரஜீனுக்கும் இடையில் உண்மையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆக நடந்துமுடிந்த பிராங்க்கே தேவலை என்னும் அளவிற்கு ஒரே கூச்சல் குழப்பம். 

BB TAMIL 9 DAY 34
BB TAMIL 9 DAY 34

Prank பஞ்சாயத்தை நீண்ட நேரத்திற்கு இழுத்த விசே

“ஏம்ப்பா.. விளக்கம் சொல்லுங்கப்பா..ன்னா.. அதை வெச்சே மறுபடியும் சண்டை போட ஆரம்பிச்சிட்டீங்க.. இதை பிக் பாஸ் முடிச்சு வெச்சாரு. அவ்வளவுதான். பிக் பாஸ் உடந்தை கிடையாது” என்று முதலாளியைக் காப்பாற்றினார் விசே. “உங்க பிராங்க் மத்தவங்களை பயமுறுத்தற மாதிரி மோசமா இருந்துச்சு. அது நல்லா இருந்துதுன்னா.. நாங்களே பாராட்டியிருப்போம்” என்றார் விசே. அத்தோடு இந்தப் பஞ்சாயத்தை முடிப்பாரா என்று பார்த்தால்.. இல்லை. “வினோத்.. நீங்க சொல்லுங்க” என்று மறுபடியும் ஆரம்பித்துவிட்டார். 

“இவங்க தூங்கும்போது உருட்டுக்கட்டைல அடிச்சிட்டு பிராங்க்ன்னு சொன்னா ஒத்துக்குவாங்களா?” என்றார் வினோத். அப்படி அவர் அடித்திருந்தால் திவாகரைத்தான் டார்கெட் செய்திருப்பார். இதற்கு பார்வையாளர்கள் சிரிக்க “இதையெல்லாம் சிரிச்சு என்கரேஜ் பண்ணாதீங்க.. இது சினிமா காட்சி கிடையாது. உண்மை.” என்று விசே எரிச்சலுடன் சொல்ல, ஜெர்க் ஆகி அமர்ந்தார் வினோத். 

அடுத்து எழுந்த கனி “இது தப்புதான். ஆனா பசங்க தெரியாம பண்ணிட்டாங்க” என்பதுபோல் ஆரம்பிக்க “கனி.. முதல்ல இந்த சேஃப் கேம்ல இருந்து வெளியே வாங்க. கருத்துக்களை துணிச்சலா சொல்லுங்க. எப்பவுமே சுகர் கோட்டிங் செஞ்சு பேசாதீங்க.. அதுல சுகர்தான் அதிகமா இருக்கு. மருந்து ஒரு துளிதான் இருக்கு” என்று விசே “அய்யோ.. சார்.. என் நேச்சரே அதுதான். இங்க வந்துதான் மாறிட்டேன்” என்று சிணுங்கினார் கனி.  “அதெல்லாம் உங்க வீட்ல அப்படி இருங்க.. இங்க வந்து நகரவே மாட்டேன்னு அடம்பிடிக்காதீங்க” என்று அட்வைஸ் செய்த விசே.. “பாருவைப் பாருங்க. அவங்களோட பிரெண்ட் ஆகி கத்துக்கங்க” என்று கிண்டலடிக்க சபை கலகலத்தது. 

சுபிக்ஷா வரைக்கும் அனைவரிடம் கருத்துகேட்டு விட்டுத்தான் இந்த விசாரணையை முடித்தார் விசே. “இந்த வீட்டுக்கு உங்க மேல எவ்வளவு அக்கறை இருக்குன்னு பாருங்க.. இனி மேலாவது இந்த மாதிரி மோசமான டிராமா பண்ணாதீங்க” என்று பிரேக்கில் சென்றார் விசே. 

BB TAMIL 9 DAY 34
BB TAMIL 9 DAY 34

சாண்ட்ராவை தெளிவாக குழப்பிய திவாகர் - விசே செய்த கிண்டல்

“ஆக்சுவலி.. பார்த்தீங்கன்னா.. நடந்தது உண்மையான சண்டைதான். ஷோ போ் கெட்டுடடக்கூடாதுன்னு பிராங்க்ன்னு சொல்லி முடிச்சிட்டாங்க.. இப்படி ஒரு பார்வையும் எனக்குத் தோணுது” என்று சாண்ட்ராவை குழப்பி விட்டுக் கொண்டிருந்தார் திவாகர். “அப்படியா… சொல்றீங்க?” என்று தலையைச் சொறிந்தார் சாண்ட்ரா.  

விசே பிரேக் முடிந்து வந்ததும் திவாகரின் முந்திரிக்கொட்டை கண்டுபிடிப்பை ஒரு பிடி பிடிப்பார் என்று அப்போதே தோன்றியது. அதேபோல் நடந்தது. திவாகரை எழுப்பிய விசே “ரொம்ப சாரி சாண்ட்ரா.. திவாகர் கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டாரு.. நாங்கதான் உண்மையை மறைச்சுட்டோம்.. எப்படி திவாகர் இத்தனை புத்திசாலியா இருக்கீங்க.. நாங்க எங்க வயித்துப்பொழப்பிற்கு ஏதோ பண்ணிட்டு இருக்கோம். நீங்க ஸ்மார்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க. ஷோக்காக பண்ணோம்ன்றதை ஷோக்கா பிடிச்சீங்க” என்றெல்லாம் சர்காஸ்டிக்காக பாராட்ட ‘இதையெல்லாம் நம்பலாமா, வேண்டாமா’ என்கிற மாதிரி புன்னகைபுரிந்தார் திவாகர். 

“இந்த அடக்கம்தான் உங்களை எங்கேயோ கொண்டு போகப் போகுது திவாகர்.. சாண்ட்ரா.. இனிமே பிரஜினைக்கூட நம்பாதீங்க. எந்த சந்தேகமா இருந்தாலும் திவாகர்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கங்க..” என்று கிண்டலின் அளவை விசே கூட்டிக் கொண்டேபோக பார்வையாளர்களுக்கு சிரிப்பு தாங்கவில்லை. 

‘ராக்கெட் மாதிரி ஆரம்பிச்சு புஸ்வாணமா போயிட்டாங்க’ - வைல்ட் கார்ட் என்ட்ரிகள்மீது வியானா கிண்டல்

ஒருவழியாக இந்தப் பஞ்சாயத்து முடிந்ததும், அடுத்ததாக வைல்ட் கார்ட் என்ட்ரிகள் மீது அர்ச்சனை ஆரம்பமாயிற்று. “பினாயில் ஊத்தி கழுவுவேன். பெருக்குவேன்... ஆட்டத்தை மாத்துவேன்னு சொல்லிட்டு.. நாலு பேர் வந்தாங்க.. அவங்க ஆடின லட்சணத்தை மத்தவங்க சொல்லுங்க” என்று ஆரம்பித்துவைத்தார் விசே. 

BB TAMIL 9 DAY 34
BB TAMIL 9 DAY 34

ஆரம்ப நாளில் தங்களை பயங்கரமாக வெறுப்பேற்றிய வைல்ட் கார்ட் என்ட்ரிகளை பழிவாங்க நல்லதொரு சந்தர்ப்பம். எனவே மக்கள் விதம் விதமாக சொல்லி தங்களின் கோபத்தைக் காட்டினார்கள். “என்ட்ரி மட்டும்தான் டெரரா இருந்தது.. அப்புறம் எங்களை மாதிரியே மாறிட்டாங்க” என்று ஆரம்பித்த சபரி “அமித் அண்ணன்..’ என்று சொல்ல “இங்க அண்ணன்... தங்கச்சின்னுல்லாம் சொல்லிப் பழகாதீங்க.. அது நல்ல வழக்கம்தான். ஆனா அது சப்கான்ஷியஸா ஆட்டத்தைப் பாதிக்கும். வெளில வெச்சுக்கங்க” என்ற விசே, பிறகு சேஃப்பாக “என்னை அண்ணன்னு கூப்பிடுங்க.. தப்பில்லை. நான் கேமிற்கு வெளிலதான் இருக்கேன்” என்றார். 

“பாரு மேல இவங்களுக்கு என்ன கோபமோ.. தெரியல.. அவங்களை அடிச்சு காலி பண்றதுதான்.. இவங்க வேலையா இருந்தது” என்று திடீர் பாரு ஆதரவாளராக மாறி ஆச்சரியம் தந்தார் விக்ரம். பாருவின் ஸ்கீரின் டைம் ஸ்ட்ராட்டஜி பற்றி சொன்னவரே இவர்தான். அடுத்து எழுந்த வியானா “இவங்க வந்ததுல மாற்றம் தெரியுது. ஆனா தனியா விளையாடலை. க்ரூப்பா ஆயிட்டாங்க. ராக்கெட் மாதிரி ஆரம்பிச்சவங்க. புஸ்வாணம் மாதிரி புஸ்ஸூன்னு ஆயிட்டாங்க” என்று சூப்பராக உதாரணம் சொல்லி அசத்தினார். 

வாயைவிட்டு மாட்டிக்கொண்ட துஷார்

ஆவேசமாக எழுந்த துஷார் “பிரஜினும் சாண்ட்ராவும் அப்பப்ப தனியா போய் ரகசியம் பேசிக்கறாங்க” என்று புகார்சொல்ல “அப்ப நீங்க அராரோகூட பண்ணதுக்கெல்லாம் என்ன பெயர்?” என்பதை மறைமுகமாக கேட்டு விசே அதிரடியாக மடக்க,  இதை எதிர்பார்க்காமல் ஜொ்க் ஆனார் துஷார். அடுத்து திவ்யா மீது ஆவேசமாக புகார் கூற “இத்தனை வாரம் பேசாம இருந்த உங்களை பேச திவ்யாவுக்கு நீங்க நன்றிதான் சொல்லணும்” என்று பங்கம் செய்தார் விசே. 

அடுத்து எழுந்த திவ்யா, துஷார் வைத்த புகாரைப் பற்றி யோசித்துக்கொண்டே விசே கேட்ட கேள்வியைப் புரிந்துகொள்ளாமல் மையமாக பார்க்க “நான் பேசறது கேட்குதா.. இல்லையா?” என்று அவருக்கும் ஊமைக்குத்து குத்தினார் விசே. “நான் மைக் சரியா மாட்டாம இருந்ததே கிடையாது. ஒரு முறைகூட பிக் பாஸ் கிட்ட இருந்து வார்னிங் வாங்கினது கிடையாது” என்று அபாண்டமாக புளுகினார் திவ்யா. பிக் பாஸ் ஒரு முறை எச்சரித்து, அதற்கு பாரு நக்கலாக சிரித்து, இவர் பதிலுக்கு  “மூடிட்டு உக்காரு’ என்பது போல் ஒழுங்கு காட்டிய காட்சி நினைவிற்கு வருகிறது. 

BB TAMIL 9 DAY 34
BB TAMIL 9 DAY 34

“இங்க நம்மளுக்கு எல்லாம் தெரியாத ஒரு போட்டியாளர் இருக்கார். அவரை இப்போ உங்களுக்கு அறிமுகம் செஞ்சு வெக்கறேன். பெயர் அரோரா” என்று விசே நக்கலடிக்க சங்கடமான சிரிப்புடன் எழுந்தார் அரோரா. “காலைல பொங்கல் சாப்பிட்டேன்” என்று அவர் சொல்ல “அதான்.. பிரச்சினை. நீங்க உக்காந்துக்கங்க. வேற ஏதாவது அசௌகரியம் இருந்தா சொல்லுங்க” என்று நையாண்டி செய்தார் விசே. 

ரயில் பூச்சிக்கு பயந்த வீரபாண்டிய கட்டபொம்மன் திவாகர்

கம்ருதீனை கிண்டலடிப்பதென்றால் விசேவிற்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. அடுத்து எழுந்த கம்ருதீன் “பிரஜினோட ஃபோகஸ் ஃபுல்லா பாரு மேலதான் இருந்தது” என்று புகார் சொல்ல “அப்ப உங்க ஃபோகஸ் எங்க இருந்தது” என்பதையே மறைமுகமாக “நீங்க நெருக்கமா உக்காந்து பேசற மாதிரி ரகசியமா பேசாதீங்க. எனக்குப் புரியாது. சத்தமா பேசுங்க” என்று விசே அடித்த அடித்த கவுண்ட்டரைக் கேட்டு கம்முவிற்கே சிரிப்பு வந்துவிட்டது. 

தன்னுடைய பெயரை சொன்னவுடன் திவாகர் பதட்டமாகி பார்க்க “அப்படில்லாம் உடனே எமோஷன் ஆகக்கூடாது. அடுத்த ஆள் என்ன சொல்றான்னு முதல்ல கவனிங்க” என்றார் விசே. “இல்ல.. சார்.. இந்தப் பக்கம் ரயில் பூச்சி ஓடுச்சு.. அதான் கொஞ்சம் ஜெர்க் ஆச்சு” என்று திவாகர் சிரிப்புடன்சொல்ல “அப்ப தள்ளிப் போய் உக்காந்துக்கங்க.. மக்களே.. பாருங்க.. இவருதான் வீரபாண்டிய கட்டபொம்மன் ரூல்ஸ்லாம் போடறாரு. இந்த வீரம் அஞ்சு ரூபாய்க்குக்கூட செல்லுபடியாகாது போல” என்று விசே அடித்த கமெண்ட் ரகளையான காமெடி. 

திவ்யாவைப் பற்றிச் சொல்லப்பட்டபோது “இன்னொரு பாருவைப் பார்த்த மாதிரி இருந்தது” என்கிற கமென்ட்டிற்கு பார்வையாளர்கள் பக்கமிடமிருந்து பலத்த கைத்தட்டல். ‘போதும்.. நிறுத்துங்க’ என்கிற மாதிரி பாரு கை காண்பிக்க “ஹலோ.. அது என்னோட வேலை. என் ஏரியாவிற்குள்ள நீங்க வரக்கூடாது. மக்களே.. நீங்க தட்டுங்க” என்று பாருவிற்கு சரியான நோஸ் கட் தந்தார் விசே. 

“ஆனா ஒரு விஷயத்திற்கு உங்களைப் பாராட்டணும் பாரு.. ‘உங்க வீட்ல பார்த்தா என்ன நினைப்பாங்கன்னு.. உங்களுக்கு அட்வைஸ் வந்தப்ப. அதை நான் பார்த்துக்கறேன்னு சொன்னீங்க.. குட்.. இங்க யாரும் சின்னப் பிள்ளைங்க இல்ல. நீங்க செய்யற காரியத்துக்கு நீங்கதான் பொறுப்பு. இவங்க என்ன சொல்வாங்களோ.. அவங்க என்ன சொல்வாங்களோன்னு உங்களை நீங்களே சப்ரஸ் பண்ணிக்காதீங்க..” என்று பாருவைப் பாராட்டினார் விசே. 

ஆனால் இந்தப் பாராட்டு எபிசோடின் முடிவில் வீணாகப் போயிற்று. காமிரா முன்னால் வந்து நின்ற பாரு “எனக்குப் புடிச்சவங்க கிட்ட மட்டும்தான் பேசுவேன். இங்க நீ பார்க்கறதெல்லாம் உண்மையில்ல. இங்க என்ன நடக்குதுன்னு எனக்குத்தான் தெரியும். நீ எதையும் தப்பா எடுத்து மண்டையைக் குழப்பிக்காத. நான் லிமிட்லதான் பழகறேன்” என்று தன் அம்மாவிற்கு கண்கலங்கிய முகத்துடன் தைரியம் சொன்னார். (இந்தப் பயத்தைத்தானே திவ்யா சொன்னாங்க.. அதுக்கு அப்படி பாய்ஞ்சிட்டு.. !)

BB TAMIL 9 DAY 34
BB TAMIL 9 DAY 34

துஷார் எவிக்ட்டட் - இன்னொரு எவிக்ஷனும் உண்டா?

எவிக்ஷன் நேரம். ‘துஷார்’ என்கிற கார்டை விசே காட்ட, அரோராவிற்கு ஷாக். பிறகு கண்ணீர். ஆறுதல் சொல்ல வந்த கம்ருதீனிடம் “நீதான் போவேன்னு நெனச்சேன். அதனால என் ஃபோகஸ் உன் கிட்ட தான் இருந்தது. துஷார் போவான்னு நான் எதிர்பார்க்கவேயில்ல” என்று கண்கலங்க “அடிப்பாதகத்தி’ என்று கம்முவின் மைண்ட் வாய்ஸ் ஒலித்திருக்கலாம். “நான்தான் போயிருக்கணும்” என்று அராரோ சொன்னது உண்மை. அவர் இந்த ஷோவிற்கு என்ன பங்களிப்பு தந்திருக்கிறார் என்பது இதுவரை பிடிபடவில்லை. 

மேடைக்கு வந்த துஷாரிடம் “இப்பத்தான் பேச ஆரம்பிச்சீங்க. அதுக்குள்ள வெளிய அனுப்பிச்சிட்டாங்க” என்று வருத்தம் தெரிவித்தார் விசே. “சரியான நேரத்துல பேசணும்.. பேசலைன்னா. இதுதான் கதி.. நான்தான் அதற்கு உதாரணம்” என்று கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்த துஷார், கிளம்பும்போது ‘அரோரா என்னோட பெஸ்ட் பிரண்ட். நீங்க நினைக்கற மாதிரி இல்ல” என்று விளக்கம் அளிக்க “வாய்தான் உன் பிரச்சினை. பார்த்து கிளம்பு” என்று வழியனுப்பிய விசே, தானும் விடைபெற்று கிளம்பினார். 

இன்றைய எபிசோடில் இன்னொரு எவிக்ஷனும் இருக்கும் என்று தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். 

BB Tamil 9: "நீங்க தாராளமா வெளிய வந்துரலாம்" - அரோராவிடம் காட்டமான விஜய் சேதுபதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேறிய நிலையில் கடந்த வாரம் புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் ... மேலும் பார்க்க

BB Tamil 9: "நான்தான் அந்த ஐடியாவைக் கொடுத்தேன்; ஆனா" - அமித்தைச் சாடிய FJ

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேறிய நிலையில் கடந்த வாரம் புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் ... மேலும் பார்க்க

BB TAMIL 9 DAY 33: என்னது பாரு Best performer-ஆ? ‘வொர்ஸ்ட் பெர்ஃபார்மராக’ தேர்வான சாண்ட்ரா!

'வாட் எ மெடிக்கல் மிராக்கிள்?!’ என்பது மாதிரி பாருவிற்கு best performer அங்கீகாரம் கிடைத்தது ஆச்சரியம். அப்படியாவது அவர் திருந்துவார் என்று சக போட்டியாளர்கள் நினைத்து வாக்களித்தார்களா, அல்லது உண்மையில... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 9: முதல் டபுள் எவிக்‌ஷன்! வெளியேறிய இருவர் யார்?

விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9-ல் முதல் டபுள் எவிக்ஷன் நிகழ்ந்திருக்கிறது.வி.ஜே. பார்வதி, வாட்டர்மெலன் திவாகர், துஷார், பிரவீன், பிரவீன் காந்தி, உள்ளிட்ட இருபது பேருடன் தொடங்கிய நிகழ்ச்சியில் இ... மேலும் பார்க்க

BB Tamil 9: "Best Performer யார்?" - பிக் பாஸ் கேட்ட கேள்வி; ஹவுஸ்மேட்ஸ் சொன்ன பதில் என்ன?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வைல்டு க... மேலும் பார்க்க