'10 வயதில் சதம்' - அண்ணன் வைபவ் வழியில் மிரட்ட வரும் அடுத்த சூறாவளி ஆசீர்வாத் சூ...
``வாழ்த்து சொல்லி உள்ளே வந்த எஸ்.வி.சேகர் சங்கத்தை கபளீகரம் செய்துட்டார்"- வீதிக்கு வந்த பஞ்சாயத்து
பெப்சிக்குப் போட்டியாக தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்களின் ஆதரவோடு தொடங்கப்பட்ட தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பில் தலைவர் எஸ்.வி.சேகர் - செயலாளர் பாபு ஆகியோருக்கு இடையில் மோதல் உண்டாகி, பிரச்னை தொழிலாளர் ஆணையரகத்துக்கு வந்துள்ளது.
இரண்டு தரப்பும் இன்று விசாரணைக்கு ஆஜரானதாகச் சொல்கிறார்கள்.
என்ன பிரச்னை? பாபுவிடம் பேசினோம்.
''தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பெப்சிக்கும் இடையில் பிரச்னை போயிட்டிருந்த சமயத்துல திரைப்படத்தின் பல்வேறு கிராஃப்ட்களை அடக்கிய ஓர் அமைப்பை நானும் இன்னும் சிலரும் சேர்ந்து உருவாக்கினோம். நான் ஒளிப்பதிவாளர் யூனியனைச் சேர்ந்தவன்.

தமிழ் சினிமாவுல ஒர்க் பண்ண எங்களைக் கூப்பிடுங்கன்னு தயாரிப்பாளர் சங்கத்துக்கு நாங்க வேண்டுகோள் விடுக்க, அவங்கதான் இன்னும் சில சங்கங்களைச் சேர்த்து 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பு'ங்கிற பெயரில் செயல்படுங்கன்னு சொல்லி ஆதரவு தெரிவிச்சாங்க.
அப்படி தொடங்கப்பட்ட சமயத்துல அந்தக் கூட்டமைப்புக்குச் செயலாளரா நான் இருந்தேன். தமிழ்மணி தலைவர். கமலக்கண்ணன் பொருளாளர்.
அமைப்பு தொடங்கப்பட்டதா அறிவிக்கப்பட்ட அன்னைக்கு தமிழ்மணிக்கு வாழ்த்துச் சொல்ல போனில் அழைத்தார் எஸ்.வி.சேகர்.
அப்படி போனில் வந்தவர், பிறகு கூட்டமைப்பு பத்தி கொஞ்சம் கொஞ்சமா விசாரிச்சு மெல்ல மெல்ல கூட்டமைப்புக்கு உள்ளே வந்தார். தன்னுடன் தாசரதியையும் கூட்டி வந்தார்.
வந்த கொஞ்ச நாளிலேயே தயாரிப்பாளர் சங்க தலைவரா இருந்த முரளிகிட்ட என்ன பேசினாரோ தெரியல, அவர் ஆதரவுடனேயே ஏற்கெனவே இருந்த தலைவர் மற்றும் பொருளாளரைத் தூக்கிட்டு, தன்னைத் தலைவராகவும் தனக்கு வேண்டிய ஒருத்தரை பொருளாளராகவும் போட்டுக்கிட்டார்.
சங்கம் பதிவு செய்ததுக்கான சான்றிதழையும் அவரே போய் வாங்கிக்கிட்டார்.
இது பத்தி நான் கேட்டப்ப, பதிவு எண் இருந்த அந்தப் பக்கத்தின் ஜெராக்ஸ் மட்டும் எனக்குத் தந்தார்.
சங்க விதிப்படி பை லா செயலாளர்கிட்ட இருக்கணும்னு சொல்லி நான் கேட்டதுக்கு, 'தர முடியாது, உன்னால என்ன பண்ண முடியும்'னு நாலு பேர் முன்னாடி கொஞ்சம் அசிங்கமாகவே கேட்டார். அது என்னை ரொம்பவே காயப்படுத்திடுச்சு.

அதனாலேயே தொழிலாளர் ஆணையரகத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு போனேன்.
கூட்டமைப்பு செயல்படுதோ இல்லையோ அதன் செயலாளார் நான். ஆனா தலைவரா இருக்கிறவர் தனக்கு மட்டுமே அதிகாரம்னு நினைச்சு செயல்படறதை ஏற்க முடியாது. தவிர பதவி மட்டுமே குறிக்கோள்னு வர்ற இவர் மாதிரியான ஆட்களை தொடர்ந்து அந்த இடத்துல இருக்க அனுமதிச்சா, அது அமைப்புக்கு நல்லதில்லைனுதான் இந்த விவகாரத்துல இருந்து ஒதுங்கக் கூடாதுன்னு நினைச்சிருக்கேன்.
அவரை அமைப்புல இருந்து வெளியேத்துற வரைக்கும் ஓயமாட்டேன" என்கிறார் இவர்.
எஸ்.வி சேகர் தரப்பில் என்ன சொல்கிறார்கள்? அவரால் கூட்டமைப்பின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் தாசரதியிடம் பேசினோம்.

''இது ஓர் அமைப்பின் உள் விவகாரம். இதை எதுக்கு மீடியா முன்னாடி பேசணும்னு தெரியலை. செயலாளர் நேரடியா தொழிலாளர் ஆணையரகத்துக்குப் போயிருக்கார். அங்க எழுப்பின கேள்விகளை அமைப்புக்கு உள்ளேயே எழுப்பி தீர்வு காண முயற்சி செய்திருக்கலாம். ஆனா கூட்டமைப்பு தொடங்கின பிறகு ஒரேயொரு கூட்டத்துக்குதான் அவர் வந்திருக்கார். தொழிலாளர் ஆணையர் எங்களை ஆஜராகச் சொன்னது நிஜம்தான். எஸ்.வி.சேகரும் நானும் அமைப்பின் நிர்வாகிகள்ங்கிற முறையில ஆணையரக விசாரணைக்குப் போயிருந்தோம். அங்க கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லிட்டு வந்திருக்கோம்'' என்கிறார் இவர்.




















