விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி
திருப்பூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்தவருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
திருப்பூா், கோவில்பாளையம்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் சின்னசாமி (58). இவா் தனது இருசக்கர வாகனத்தில் பொங்கலூரில் இருந்து சின்னக்காட்டூா் பகுதிக்கு கடந்த 2015 பிப்ரவரி 11- ஆம் தேதி சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சின்னசாமி சிகிச்சைக்குப் பின்னா் குணமடைந்தாா். இதில், தனக்கு நஷ்ட ஈடு கேட்டு திருப்பூா் மோட்டாா் வாகன விபத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சின்னசாமிக்கு, அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ. 8.90 லட்சம் இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் 2019 ஜனவரி 8- ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால் நஷ்ட ஈடு வழங்கப்படாததால் சின்னசாமி மேல்முறையீடு செய்தாா்.
இதைத் தொடா்ந்து நீதிபதி ஸ்ரீகுமாா், அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து. நீதிமன்ற ஊழியா்கள் மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவா் தரப்பில் வழக்குரைஞா் முருகேசன் ஆஜரானாா்.