Revolver Rita: ``கடைசியில ராதிகா மேம் வந்து ஸ்கோர் பண்ணிட்டு போயிடுவாங்க'' - கீர...
விருதுநகர்: `கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கும் பணி சரியாக நடைபெறவில்லை' - எழுந்த குற்றச்சாட்டு
விருதுநகர் நகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் ஆர்.மாதவன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் விஜயகுமார், பொறியாளர் எட்வின் பிரைட்ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது நடைபெற்ற விவாதம் பின்வருமாறு:
கூட்டம் தொடங்கியதும் உறுப்பினர் ராஜ்குமார் தனது வார்டில் பல ஆண்டுகளாக பாதாள சாக்கடை பிரச்சனை தீர்க்கப்படவில்லை. எனவே, அதை சரிசெய்ய வேண்டுமென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் உறுதியளித்தார். நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் தோண்டி போடப்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பணிகளைத் துரிதப்படுத்த வேண்டுமென உறுப்பினர் வெங்கேடஷ் தெரிவித்தார். மேலும் அருப்புக்கோட்டை சாலையின் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலையின் குறுக்கே தோண்டப்பட்டுள்ளது. கடந்த கூட்டத்தில் சீரமைப்பதாகத் தெரிவித்தும், ஏன்? சரி செய்யவில்லையென உறுப்பினர்கள் ஜெயக்குமார், மிக்கேல்ராஜ் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
சீரமைக்கும் பணி தொடங்கிய போது மழை வந்துவிட்டதால் தாமதமாகிவிட்டது. நாளை முதல் பணிகள் நடைபெறும் என தலைவர் பதிலளித்தார். அதேபோல் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கவில்லையென உறுப்பினர்கள் கலையரசன், சரவணன் ஆகியோர் புகார் தெரிவித்தனர். ஏற்கெனவே, ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடிதம் அனுப்பியுள்ளோம் எனத் தலைவர் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்கு உள்ளதாக உள் தெருவில் பல ஆண்டுகளாக சாலை அமைக்கவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் வந்துள்ளது. வழக்கு இல்லையென ஆதாரத்துடன் உறுப்பினர் உமாராணி கூறினார். நேரடியாக வந்து விளக்கம் தந்தால் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் பதில் கூறினார்.

கணக்கீட்டுப் படிவங்கள் பற்றி பொது மக்களுக்குச் சரிவர தெரிவிக்கவில்லை. வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் பொது மக்களுக்கு படிவத்தை நிரப்பிட உதவ வேண்டும் என உறுப்பினர் ஆறுமுகம் தெரிவித்தார். தனது வார்டு பகுதி மிகப்பெரியது.

ஆனால், சரிவர படிவங்கள் வழங்கவில்லை. நிரப்பியும் வாங்கவில்லையென உறுப்பினர் முத்துராமன் புகார் தெரிவித்தார். குறைவான கால அவகாசம் உள்ள நிலையில் டிசம்பர் 4க்குள் படிவங்களை எப்படி பதிவேற்றம் செய்ய முடியும். எனவே, படிவங்களை வாக்காளர்களிடம் பெற்று பதிவேற்றம் செய்ய காலநீட்டிப்பு செய்ய வேண்டும் என உறுப்பினர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்தார். 60 ஆயிரம் வாக்காளர்களில் சுமார் 25 ஆயிரம் கணக்கீட்டுப் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏதேனும் குறைகள் இருந்தால் சம்மந்தப்பட்ட மேற்பார்வை அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம் என ஆணையாளர் பதில் கூறினார்.
















