Valentino Garavani: ஃபேஷன் உலகமே அஞ்சலி செலுத்தும் ஜாம்பவான் வாலென்டினோ கரவானி -...
ஷிண்டேயுடன் கருத்துவேறுபாடு, உத்தவுடன் பேச்சு? - மும்பை மேயர் பதவியும் சூடுபிடிக்கும் அரசியலும்!
மும்பை மாநகராட்சிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க 89 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. ஆனால் மும்பையில் மேயர் பதவியை பிடிக்க 114 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
பா.ஜ.கவின் கூட்டணி கட்சியான சிவசேனா(ஷிண்டே) 29 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. இரு கட்சிகளும் சேர்ந்து மும்பை மேயர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்த இருக்கின்றன. ஆனால் மேயர் பதவியை தங்களது கட்சியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் பா.ஜ.க மற்றும் சிவசேனா இடையே பேச்சுவார்த்தையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.
அதேசமயம் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 65 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. சிவசேனா (உத்தவ்), காங்கிரஸ், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிகள் ஒன்றாக சேர்ந்தால் மும்பையில் மேயர் பதவியை பிடிக்க மேலும் 4 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவையாக இருக்கிறது. இதனால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கவுன்சிலர்கள் உத்தவ் தாக்கரே கட்சிக்கு சென்றுவிடக்கூடும் என்ற அச்சம் ஏக்நாத் ஷிண்டேயிக்கு ஏற்பட்டு இருக்கிறது.

எனவே தனது கட்சி கவுன்சிலர்கள் அனைவரையும் மும்பையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கடந்த சில நாள்களாக தங்க வைத்து ஏக்நாத் ஷிண்டே பாதுகாத்து வருகிறார். அவர்கள் ஹோட்டலை விட்டு எப்போது வருவார்கள் என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல் கிடைக்கவில்லை.
உத்தவுடன் பட்னாவிஸ் பேச்சுவார்த்தையா?
ஏக்நாத் ஷிண்டே மேயர் பதவியை தங்களது கட்சிக்கு 2.5 ஆண்டுகள் கொடுக்க வேண்டும் என்று கோரி வருகிறார். எனவே முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மேயர் பதவி தொடர்பாக உத்தவ் தாக்கரேயுடன் மொபைல் போன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
இது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் நிருபர்கள் கேட்டதற்கு,
''உத்தவ் தாக்கரேயுடன் நான் போனில் பேசியதாக வந்த செய்தியில் உண்மை இல்லை. அது ஒரு வதந்தி.
அதோடு சிவசேனா(ஷிண்டே) மேயர் பதவியில் 2.5 ஆண்டுகள் கேட்பதாக வந்த செய்தியிலும் உண்மை இல்லை. அதுவும் ஒரு வதந்தியாகும். துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயுடன் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் ஒன்றாக இணைந்தே தேர்தலை சந்தித்தோம். நான் மும்பை திரும்பியவுடன் யார் மேயர் என்பது குறித்து முடிவு செய்யப்படும். மேயர் பதவி அல்லது வேறு எந்த பதவி தொடர்பாகவும் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை. மும்பையில் 3 எஞ்சின் அரசு பதவியேற்க இருக்கிறது. அதற்குத்தான் மக்கள் வாக்களித்துள்ளனர்.
மும்பை, புனேயில் கட்டமைப்பு திட்டங்கள் முழு வேகத்தில் அமல்படுத்தப்படும். அதோடு மும்பை அருகில் 3-வது மும்பை உருவாக்கப்படும்'' என்றும் அவர் குறிப்பிட்டார்.
துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இது குறித்து கூறுகையில், ''மும்பை மேயர் பதவி தொடர்பாக பா.ஜ.க-வுடன் கருத்து வேறுபாடு இல்லை'' என்றார். வரும் 23-ம் தேதிக்கு பிறகு ஏக்நாத் ஷிண்டே டெல்லி செல்கிறார். டெல்லியில் பா.ஜ.க தலைவர்களை சந்தித்து இப்பிரச்னைக்கு தீர்வு காண இருக்கிறார்.

மும்பையில் மேயர் தேர்தல் வரும் 31ம் தேதி நடக்க இருக்கிறது. அதற்கு முன்பு வரும் 22ம் தேதி மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சி மேயர் பதவிக்கான லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. இதில் மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யப்படும்.
மும்பை மேயர் பதவி எஸ்.சி. மற்றும் எஸ்.டி பிரிவுக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில் பா.ஜ.கவில் அந்த பிரிவை சேர்ந்த யாரும் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெறவில்லை. ஏக்நாத் ஷிண்டே கட்சியிலும் யாரும் வெற்றி பெறவில்லை. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இருந்து இரண்டு பேர் வெற்றி பெற்று இருக்கின்றனர். இதனால் மகாராஷ்டிரா களம் தற்போது பரபரப்பாக காணப்படுகிறது.



















