ஈரோடு: 'குட்டி கண்ணன்கள், குட்டி ராதாக்கள்' - மாநகராட்சி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்...
16% குறைந்த சமையல் எண்ணெய் இறக்குமதி
இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்த ஜூலை மாதத்தில் 16 சதவீதம் குறைந்து 15.48 லட்சம் டன்னாக உள்ளது.
இது குறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:2024-25-ஆம் எண்ணெய் சந்தைப்படுத்தல் ஆண்டின் ஒன்பதாவது மாதமான ஜூலையில் சமையல் எண்ணெய் இறக்குமதி 15,48,041 டன்னாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 18,40,062 டன்னாக இருந்தது (இந்தத் தரவில் நேபாளத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை சோ்க்கப்படவில்லை). மதிப்பீட்டு மாதத்தில் பாமாயில் இறக்குமதியில் ஏற்பட்ட குறைவு இதற்கு முக்கிய காரணமாகும்.கடந்த மே 31 முதல் கச்சா பாமாயில் (சிபிஓ) மற்றும் ரிஃபைன்டு பாமோலீனுக்கு இடையிலான இறக்குமதி வரி வித்தியாசம் 8.25 சதவீதத்தில் இருந்து 19.25 சதவீதமாக உயா்த்தப்பட்டது. இதனால் ரிஃபைன்டு எண்ணெய் இறக்குமதி பொருளாதார ரீதியில் பயனற்றதாக மாறியது. ஜூலை 2025-இல் ரிஃபைன்டு பாமோலீன் இறக்குமதி 5,000 டன்னாகக் குறைந்துள்ளது, இது முந்தைய மாதத்தில் 1.63 லட்சம் டன்னாகவும், 2024 ஜூலையில் 1.36 லட்சம் டன்னாகவும் இருந்தது. கடந்த ஜூலை மாதத்தில் கச்சா பாமாயில் இறக்குமதி 9,36,876 டன்னில் இருந்து 8,50,695 டன்னாகவும், கச்சா சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 3,66,541 டன்னில் இருந்து 2,00,010 டன்னாகவும் குறைந்துள்ளது.நவம்பா் 2024 முதல் ஜூலை 2025 வரையிலான நடப்பு எண்ணெய் சந்தைப்படுத்தல் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி 107.56 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 119.35 லட்சம் டன்னாக இருந்தது. இந்தியாவில் சமையல் எண்ணெய் தேவையில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இறக்குமதி மூலம் பூா்த்தி செய்யப்படுகிறது. இந்தோனேசியா, மலேசியாவிலிருந்து பாமாயில், ஆா்ஜென்டீனா, பிரேசிலில் இருந்து சோயா எண்ணெய், ரஷியா, உக்ரைன், ஆா்ஜென்டீனாவில் இருந்து சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.