விமானத்தின் கழிப்பறை தண்ணீரே இல்லாமல் எப்படிச் செயல்படுகிறது தெரியுமா?!
மனதைக் கொள்ளை கொண்ட பாட்ஷா - படம் இமயம் ஏறியது எப்படி?
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
எழுபத்தைந்து வயதை நெருங்கி விட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,170 படங்களுக்கு மேல் நடித்து,பல இளைஞர்களின் மனதில், பாலாபிஷேகம் செய்கின்ற அளவுக்குப் பசுமையாய்த் தங்கி விட்டவர்! தன் ஐம்பது ஆண்டு காலத் திரைப்பட வாழ்வில்,பல சாதனைகளைப் புரிந்து,பல விருதுகளைப் பெற்றவர்!அவரின் பல கதாபாத்திரங்கள் மனதை நிறைத்தாலும்,மேஜிக் காட்டி மனதைக் கொள்ளை கொண்ட பாத்திரம் பாட்ஷாதான்!
“நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி!”என்ற பஞ்ச் வசனம் சிறப்புப் பெறக் காரணமே அதன் பாசிடிவ் அப்ரோச்தான்! நீதிக்காகவும், நியாயத்திற்காகவும் போராட ஆரம்பிக்கும் இரண்டு இளைஞர்களில் ஒருவர் அநியாயமாகக் கொல்லப்பட, உயிர் நண்பர் கொலைக்குப் பழி வாங்கி விட்டு, சமுதாயத்தைச் சீரழிக்கும் வில்லன் கூட்டத்திற்கு வில்லனாக மாறும் பாத்திரந்தான் நாயகன் ரஜினியுடையது.
“உனக்கும் எனக்குந்தான் சண்டை! ஒண்ணு நீ சாகணும்!இல்ல நான் சாகணும்!
உன்னோட ஆட்கள் சாகணும்! இல்ல என்னோட ஆட்கள் சாகணும்! அப்பாவிப் பொது மக்கள் இல்லை ஹெ..ஹெ..ஹெ!”என்ற அந்த வசனமே மேஜிக்காகி, மனதில் நிற்கிறது.
எந்தச் சந்தர்ப்பத்திலும், சம்பந்தமேயில்லாத எந்த ஒருவரும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்ற நல்ல எண்ணமே, படத்தின் அச்சாணி! இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அதைப் படம் முழுவதும் மெயிண்டைன் செய்ததாலேயே படம் இமயம் ஏறியது!

நூறு பேர் எதிர்த்து வந்தாலும்,கதாநாயகன் ஒருவனே தனித்து நின்று அடித்து வெல்வதாக, ரசிகர்கள் காதுகளில் பூ சுற்றி வந்ததற்கு மாறாக, எப்பொழுதும் நான்கைந்து உதவியாளர்களுடன், எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கையில் அவர்களும் இறங்கிச் சண்டை போடுவதாகக் காட்டியது, எதார்த்தத்தை உணர்த்துவதாக இருந்தது. அந்த இயல்பு நிலை, படத்தைச் சற்றே ஆழமாகப் பார்ப்போருக்கு ஆறுதல் தருவதாக அமைந்தது!
‘ஷோலே’ படக் கொள்ளையர்கள் போலல்லாமல், மும்பையின் இயற்கைக்கேற்றவாறு ரகுவரன் க்ரூப் பைக் காட்டுவது படத்தின் மற்றொரு சிறப்பு! அதனாலேயே அது அனைவரின் மனத்திலும் தங்கி விட்டது.

வில்லனின் கையில் சிக்கிக் கொண்ட தன் தந்தையின் இறுதி நேர வேண்டுகோளை ஆணையாக ஏற்று, அவ்வாறே சித்தியின் மூலம் பிறந்த தம்பி,தங்கைகளின் வாழ்க்கை சிறப்புறுவதற்காகத் தன் குழுவைக் கழற்றி விட்டு விட்டு, ஆட்டோ ஓட்டியாக எளிமைக்குத் திரும்பும் நாயகன், அந்த எளிமை காரணமாகவே நம் இதயங்களில் ஊடுருவுகிறார். ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒளியேற்றி, அதனை உணர்த்தும் விதமாக
வீட்டிலும் விளக்கேற்றும் விதம்,இதயத்தில் நிற்கிறது!மூத்த தங்கையின் வாழ்க்கை சிறக்க வேண்டி, அவள் காதலனின் தந்தை காலிலும் விழத் தயாராகும் அண்ணனாக, தங்கைகளின் வாழ்க்கையே லட்சியம் என்பதையும், அதற்காக எவ்வளவு இறங்கிப் போகவும் தயாராக இருப்பதையும் செயலில் காட்டுகையில்,நம் நெஞ்சங்களை நெகிழ்த்தி, அவர் உயரே போய்விடுகிறார்!
தன்னையே நினைந்து உருகும் காதலியைக் கூடத் தள்ளி வைத்தே பார்ப்பதிலிருந்தே, தன் வாழ்க்கை தனக்கானதைக் காட்டிலும், மற்றவர்களுக்கானதே என்று நிரூபிக்கிறார். அதை மேலும் மெய்யாக்கும் வண்ணம், தன் தம்பிக்காக லோகல் ரௌடி எலக்ட்ரிக் போஸ்டில் கட்டி அடித்த போதும், சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொள்ளும் அவர், தங்கையின் உதட்டோரம் அரும்பிய இரத்தத்தைக்கண்டு எரிமலையாக வெடிப்பது,பாசத்தின் உச்சம்!” உள்ள போ” என்று தன் குடும்பத்தைப் பாதுகாப்பாக வைத்து விட்டு,அதன் பிறகு அந்த ஆனந்த ராஜையும் அவர் ஆட்களையும் பிரித்து மேய்வது,நேர்மை தவறுவோர்க்குக் கொடுக்கும் தண்டனை!அதுதான் சூப்பர்!

தங்கையின் மருத்துவ சீட்டுக்காக,அவளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றவரிடம் தன் கடந்த காலத்தைச் சொல்ல,அவர் வேர்த்து வியர்த்து அடி பணிய,
“எப்படீண்ணா சீட் கெடச்சுது?” என்ற தங்கையிடம்,”உண்மையைச் சொன்னேம்மா!” என்பது நல்ல தருணம்!
மழையில் நக்மா நனைந்தபடியே காத்துக் கிடப்பது, காதலின் ஆழம்! என்றால், தன்னைக் கொல்வதற்காக நக்மா அப்பா விரிக்கும் வலையிலிருந்து தப்பிப்பது தந்திரத்தின் உச்சம்!
இறுதியாக, தனது திட்டமிடப்பட்ட நிகழ்வுகளின் மூலம் வில்லனைச் சிக்க வைத்தாலும், தன் குடும்பத்தாரைப் போராடிக் காப்பாற்றி விடுகிறார் ரஜினி. படம் இனிதே முடிந்தாலும்,கடந்த கால நிகழ்வுகள் கசப்பானவை!ஆனாலும் வீரத்தைக் காட்ட வேண்டிய இடத்தில் விவேகமுடன் அதனைக் காட்டியும்,அடக்கி வாசிக்க வேண்டிய இடங்களில் அமைதி காத்தும்,ஒரு கதாநாயகனாக தன் ரசிகர்களுக்குப் பலவற்றையும் போதித்து விடுகிறார் சூப்பர் ஸ்டார். எனவேதான் எல்லா வயதினரும் பாட்ஷாவின் அதி தீவிர ரசிகர்களாகி விட்டனர்.
என்னைப் பொறுத்தவரை,ஒரு படம் நம் மனதுக்குப் பிடித்துப் போக, மேலும் சில காரணங்களும் உண்டென்றே தோன்றுகிறது.1995 ல் வெளியான இது,ரஜினியின் 94 வது படம் என்றாலும்,அவர் முற்றிய இளமையான 45 வயதில் நடித்த படம் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.பாட்ஷா எனக்கு மேலும் பிடித்துப் போக,அப்பொழுது எனது அகவையும் 42. அத்தோடு,ஒரு மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட திட்டப்பணிகளை நிறைவேற்றும் பொறுப்பில் இருந்த எனக்குக் களப்பணி உதவியாளர்களாக, பட்ட தொழிற்படிப்பு படித்த இளைஞர்கள் அறுவர் உடனிருந்தனர்.

நாங்கள் அனைவரும் ஒன்றாகத் திட்டப்பணி நடைபெறும் இடங்களுக்குச் செல்கையில், அந்த அறுவரும் பின் தொடர, என்னை ரஜினியாக உருவகப் படுத்திக் கொண்டதும் உண்டு. அத்தோடு மனதில்,பாட்ஷாவைப் போலவே நாமும் நம் மக்கள் நலம் பெற உழைக்க வேண்டுமென்ற உத்வேகமும் இருந்தது. இவையெல்லாங்கூட பாட்ஷா மனதைக் கவரக் காரணங்களாக அமைந்திருக்கலாம் என்பது எனது கணிப்பு!
இன்றைக்கும் தொலைக்காட்சிகளில் பாட்ஷா ஒளிபரப்பப் படுகையில், முன்னதான ஒரு மணி நேரத்தை விட்டு விட்டாலுங்கூட, ”உள்ள போ!”வசனத்திலிருந்து பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளேன்.’நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தையும், பாட்ஷாவையும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பதைப் பழக்கமாகக் கொண்டுள்ளேன்!
முன்னது - உண்மைக் காதலுக்காக!
பின்னது- உயர்ந்த சமுதாய நோக்கத்திற்காக!
-ரெ.ஆத்மநாதன்,
கூடுவாஞ்சேரி



















