"ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல" - உயர் நீதிமன்ற ம...
விமானத்தின் கழிப்பறை தண்ணீரே இல்லாமல் எப்படிச் செயல்படுகிறது தெரியுமா?!
வீட்டில் நாம் பயன்படுத்தும் டாய்லெட்டில் தண்ணீர் தான் கழிவுகளை அடித்துச் செல்லும். விமானத்தில் தண்ணீர் இல்லை மாறாக காற்று தான் அந்த கழிவுகளை எடுத்துச் செல்கிறது. காற்று எப்படி கழிவுகளை எடுத்துச் செல்லும் என்று தானே யோசிக்கிறீர்கள், இது எப்படிச் செயல்படுகிறது என்பது குறித்தும் விமானக் கழிவுகள் வானத்திலேயே வெளியேற்றப்படுகின்றனவா? என்பது குறித்தும் இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
பலரும் விமானக் கழிவுகள் வானத்தில் பறக்கும்போதே வெளியேற்றப்படுவதாக தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அங்கே நடப்பதே வேறு! விமானத்தில் அதிக அளவு தண்ணீரை எடுத்துச் செல்வது விமானத்தின் எடையை அதிகரித்துவிடும்.
எனவே விமானங்களில் 'வெற்றிடக் கழிவறை' தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. குப்பைகளை உறிஞ்சும் 'வாக்குவம் கிளீனர்' செயல்படும் அதே டெக்னிக் தான் இங்கேயும் உள்ளது.

அதாவது விமானம் சுமார் 30,000 அடி உயரத்தில் பறக்கும்போது, விமானத்திற்கு வெளியே உள்ள காற்றழுத்தம் மிகவும் குறைவாக இருக்கும். ஆனால் பயணிகளின் வசதிக்காக விமானத்திற்கு உள்ளே காற்றழுத்தம் அதிகமாகப் பராமரிக்கப்படும்.
பர்டூ பல்கலைக்கழகத்தின் வானூர்தி மற்றும் வானியல் பள்ளியின் தலைவரான விண்வெளி பொறியாளர் பில் கிராஸ்லி கூற்றுப்படி, பயணிகள் கழிவறையில் 'Flush' பட்டனை அழுத்தும் போது, கழிவுத் தொட்டிக்கும் வெளிப்பக்கத்திற்கும் இடையே ஒரு சிறிய வால்வு திறக்கப்படுகிறது.
அப்போது, விமானத்திற்கு உள்ளே இருக்கும் அதிக அழுத்தக் காற்று வேகமாக கழிவுகளை உறிஞ்சிக்கொண்டு, விமானத்தின் அடியில் உள்ள தொட்டிக்கு தள்ளிவிடுகிறது.
கழிவுகளை உறிஞ்சுவதற்காகவே மோட்டார்கள் (Vacuum Pumps) விமானத்தின் கழிவறையில் பொருத்தப்பட்டிருக்கும். விமானம் குறிப்பிட்ட உயரத்திற்குச் சென்ற பிறகு, இந்த மோட்டார் நின்றுவிடும். அதன்பின் இயற்கையான காற்றழுத்தமே வேலையைத் தொடரும்.
அனைத்து கழிவுகளும் விமானத்தின் அடிப்பகுதியில் உள்ள ஒரு பெரிய சேகரிப்புத் தொட்டியில் சேமிக்கப்படுகின்றன. விமானம் தரையிறங்கிய பிறகே, சிறப்பு வாகனங்கள் மூலம் அந்தத் தொட்டி சுத்தம் செய்யப்படும் என்று பில் கிராஸ்லி கூறியிருக்கிறார்.


















