Suriya: `ரசிகர்களிடம் கொடுத்த வாக்கு' 2026-ல் சூர்யாவின் டார்க்கெட் இதுதான்
மகாராஷ்டிரா: சட்டமன்றம் செல்ல ரயில், காரில் பயணம்; இண்டிகோ விமானம் ரத்தால் அமைச்சர்கள் திண்டாட்டம்
நாட்டில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், எம்.பி.க்களும் தப்பவில்லை.
மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தின் எல்லையில் இருக்கும் நாக்பூரில் நடைபெறுவது வழக்கம்.
இதற்காக வழக்கமாக எம்.எல்.ஏ.க்கள் விமானத்தில் பயணம் செய்வது வழக்கம். ஆனால் இப்போது இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பையிலிருந்து ரயில் அல்லது கார் மூலம் நாக்பூர் செல்வதாக இருந்தால் 12 மணி நேரம் பிடிக்கும். எம்.எல்.ஏ.க்கள் இன்று தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க இண்டிகோ விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து வைத்திருந்தனர். ஆனால் அதில் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
இதனால் வேறு வழியில்லாமல் எம்.எல்.ஏ.க்கள் கார் மூலமும் ரயில் மூலமும் நாக்பூர் சென்றனர்.
சிவசேனா (உத்தவ்) எம்.எல்.ஏ. அனில் பரப் ரயில் மூலம் நாக்பூர் சென்றதாக தெரிவித்துள்ளார். புனேயில் இருந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுனில் காம்ப்ளே 12 மணி நேரம் காரில் பயணம் செய்து நாக்பூர் சென்றதாக தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் ஒரு படி மேலே சென்று தனி விமானத்தை ஏற்பாடு செய்து நாக்பூருக்கு சென்றுள்ளார். அவருடன் 3 எம்.எல்.ஏ.க்களும் சேர்ந்துள்ளனர்.
மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் ரூ.35 ஆயிரம் கொடுத்து நாக்பூருக்கு வேறு விமானத்தில் சென்றதாக தெரிவித்தனர். கடைசி நேரத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டதால் ரயிலில் செல்லலாம் என்று டிக்கெட் கேட்க சென்றபோது, அங்கேயும் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்திருந்தன.

இதனால் வேறு வழியில்லாமல் சில எம்.எல்.ஏ.க்கள் தங்களது காரில் நாக்பூருக்கு புறப்பட்டுச் சென்றனர். ஏற்கெனவே நாக்பூரில் இருந்து மும்பைக்கு புதிதாக போடப்பட்டுள்ள நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.
இதனால் எம்.எல்.ஏ.க்கள் பயந்துகொண்டே காரில் பயணம் செய்தனர். விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் சட்டமன்ற கூட்டத்திற்கு முன்பாக வழக்கமாக நடைபெறும் தேனீர் விருந்தில் அதிகமான எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள முடியவில்லை.
சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு வரும் 14, 15-ம் தேதிகளில் நாக்பூரில் இருந்து மும்பைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று சட்டமேலவை தலைவர் ராம் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
















