Neeya Naana: "குழந்தைகள் அதைப் பார்த்துட்டு டாக்டர் ஆகணும்னு சொல்றாங்க!" - நெகிழ...
``3 வீடுகள்; 3 வேட்டி கொள்ளையர்கள்; அடுத்தடுத்த நாளில் கொள்ளை சம்பவங்கள்” - பீதியில் நெல்லை மக்கள்
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருபாநகரைச் சேர்ந்தவர் மனோ ரஞ்சிதம். இவர், வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்த நேரத்தில், மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதே பாணியில், பக்கத்து வீட்டில் வசித்து வரும் கல்லூரிப் பேராசிரியர் வீட்டிலும், மற்றொரு வீட்டிலும் புகுந்து மொத்தம் ரூ.92 ஆயிரம் மற்றும் 5 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது தினமும் நள்ளிரவு நேரத்தில் 3 பேர் சாலையில் வேட்டியால் தங்கள் முகத்தை மறைத்துக் கொண்டு, நடந்து சென்று வீடுகளை நோட்டமிடுவதும், பூட்டியுள்ள வீடுகளின் சுவர் ஏறிக் குதித்து கொள்ளையடிப்பதும் பின்பு செளவுகரியமாக நடந்து செல்வதுமான காட்சிகள் பதிவாகியுள்ளது. இச்சம்பம் குறித்து அப்பகுதி மக்கள் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து நெல்லை மாவட்ட எஸ்.பி அலுவலகத்திலும் புகார் அளித்தனர். “எங்கள் பகுதியில் 3 வீடுகளில் கொள்ளைச் சம்பவமும், 4 வீடுகளில் கொள்ளை முயற்சியும் நடந்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பும் இதே பாணியில் எங்கள் பகுதியில் கொள்ளை நடந்தது. பெரும்பாலும் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்பவர்களாக உள்ளனர். வீட்டில் வயதானவர்கள் மட்டுமே பகலில் உள்ளனர்.

அட்ரஸ் கேட்பது போலவும், குடிக்க தண்ணீர் கேட்பது போலவும் நடித்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது நள்ளிரவுகளில் பூட்டிய வீடுகளை உடைத்து கொள்ளையடிக்கும் வேட்டி கொள்ளையர்களின் அட்டகாசத்தால் எங்களுக்கு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. போலீஸார் இரவு நேர ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.” என்றனர் அப்பகுதி மக்கள்.



















