Kabaddi: மீண்டும் உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் கபடி அணி - குவியும் வாழ்த்து...
60 ஆண்டு கால சகாப்தம்; கிராமத்தில் பிறந்து நடிகர் கனவை நனவாக்கிய தர்மேந்திரா
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று அவரது இல்லத்தில் காலமானார். பாலிவுட்டிற்கு தர்மேந்திரா வந்த பிறகுதான் பாலிவுட்டின் போக்கே மாறியது. அவர் வருவதற்கு முன்பு வரை நடிகர்கள் சோக படங்களிலும், பக்திப் படங்களிலும் நடித்துக்கொண்டிருந்தனர். ஆனால் அவர் வந்த பிறகுதான் காதல் படங்கள் பெரிய அளவில் தலைதூக்க ஆரம்பித்தன. பாலிவுட்டில் 60 ஆண்டுகள் இருந்துள்ள தர்மேந்திரா 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் பாலிவுட்டில் முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து முடித்துள்ளார். நாளை என்ற ஒன்று இல்லை இன்றே வாழ்ந்து முடித்துவிட வேண்டும் என்ற கொள்கையில் வாழ்ந்த தர்மேந்திராவிற்கு இளம் வயதில் மும்பை வந்து நடிகராக மாறவேண்டும் என்பது கனவாக இருந்தது.
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் தர்மேந்திரா கேவல் கிருஷண் தியோல் என்ற பெயரில் பிறந்த தர்மேந்திரா பாலிவுட் நடிகர் திலிப் குமாரை தனது முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டார்.

1948ம் ஆண்டு நடிகர் திலிப் குமார் சாஹித் என்ற படத்தில்தான் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அதோடு தனது கிராமத்தில் ஒட்டப்பட்டுள்ள சினிமா போஸ்டர்களில் தனது புகைப்படம் இருக்கிறதா என்பதை தேடி சைக்கிளில் ஊர் முழுக்க சுற்றும் தர்மேந்திரா எப்போதும் பெரிதாகக் கனவு கண்டார்.
அதுவும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் அந்த கனவுகள் இருக்கும். காலை எழுத்தவுடன் தினமும் கண்ணாடி முன் நின்று தன்னால் திலீப் குமாராக மாற முடியுமா என்று கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 1960க்கு முன்பு படங்களில் நடித்திருந்தாலும் 1960ம் ஆண்டு வெளியான தில் பி தேரா ஹம் பீ தேரே என்ற படம் தான் அவரை முற்றிலும் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியது.
கார் நிறுத்தும் இடத்தில் தங்கிய தர்மேந்திரா
மும்பைக்கு வந்த புதிதில் தர்மேந்திரா மிகவும் சிரமப்பட்டார். அவருக்கு தங்குவதற்கு சரியான இடம் கூட கிடையாது. கார்களை நிறுத்தும் கேரேஜில் தங்கிக்கொண்டார். சரியாக வேலை இல்லாமல் டிரில்லிங் கம்பெனியில் ரூ.200 சம்பளத்திற்கு வேலை செய்தார். அதிலும் கூடுதல் வருவாய் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஓவர் டைம் வேலை செய்ததாக ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
1960களில் சாதாரண நடிகராக அன்பத், பந்தினி, அனுபமா மற்றும் ஆயா சவான் ஜூம் கே போன்ற படங்களில் நடித்தார். அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து தர்மேந்திராவை முன்னிறுத்தக்கூடிய ஷோலே, தரம் வீர், பூல் அவுர் பத்தர், மேரா காவ்ன் மேரா தேஷ் மற்றும் சீதா அவுர் கீதா போன்ற படங்களில் நடித்தார். 1966ம் ஆண்டு அவர் நடித்த ஃபூல் அவுர் பத்தர் என்ற படம் தான் அவரது முதல் பிளாக் பஸ்டராக அமைந்தது. அந்தப் படத்தில் அவர் சட்டை இல்லாமல் நடித்திருப்பார்.
கிரேக்க கடவுளாக சித்தரிக்கப்படுவது குறித்து தர்மேந்திராவிடம் கேட்டதற்கு கிரேக்க கடவுள் என்றால் எனக்கு அர்த்தம் தெரியாது என்று குறிப்பிட்டார். அவர் அளித்திருந்த பேட்டியில்,''நான் திரையில் வரும் ஒவ்வொரு முறையும் எனது இமேஜை உடைத்துவிட்டேன். எனக்கு ஒரு இமேஜ் இருப்பதாக நான் நம்பவில்லை. கிரேக்க கடவுள் என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் மக்கள் என்னை அப்படித்தான் அழைப்பார்கள்.

மக்கள் எனக்கு நிறைய அன்பைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் நான் ஒருபோதும் அதில் உயர்ந்தவனாக இருக்கவில்லை. காதல் எனக்கு ஒரு வலுவான அடித்தளத்தைக் கொடுத்துள்ளது, மேலும் இந்த அன்பைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கிறேன்; அது ஒருபோதும் தேய்ந்து போகாது என்று நம்புகிறேன்," என்று கூறியிருந்தார். பாலிவுட் அவருக்கு கரம் தரம் என்ற புனைப்பெயரை பெற்றுக்கொடுத்தது.
இதையடுத்து கரம் தரம் தாபா என்ற பெயரில் ரெஸ்டாரன்ட்களை தர்மேந்திரா தொடங்கினார். 1970-80களில் மிகவும் பிரபலமாக விளங்கிய தர்மேந்திரா ஷோலே, சீதா அவுர் கீதா மற்றும் ட்ரீம் கேர்ள் போன்ற படங்களில் நடிகை ஹேமமாலினியுடன் இணைந்து நடித்தார். 1980 இல் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே ஹேமாமாலினியை திருமணம் செய்து கொண்டார். 2004ம் ஆண்டு தர்மேந்திரா ராஜஸ்தானில் இருந்து பா.ஜ.க சார்பாக எம்.பியாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
பாலிவுட் நடிகர்கள் பலருக்கும் ரோல் மாடலாக விளங்கிய தர்மேந்திரா தனது 89 வயதில் உயிரிழந்தார்.

















