"திமுக-வினருக்கு தவெக என்றாலே ஒரு உறுத்தலாக இருக்கிறது" - டிடிவி தினகரன்
தர்மேந்திரா காலமானார்; மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து சிகிச்சை எடுத்தபோது உயிர் பிரிந்தது
கடந்த ஒரு மாதமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று மும்பையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 89. டிசம்பர் 8ம் தேதி, அவரது 90வது பிறந்தநாளைக் கொண்டாட ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியிருந்தனர். இந்நிலையில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. அக்டோபர் இறுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அப்போதே அவர் இறந்துவிட்டதாகச் செய்திகள் பரவின. இதையடுத்து அவரின் மனைவி ஹேமாமாலினி தன் கணவர் நலமோடு இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருவதாகவும், மீடியாக்கள் தவறான செய்தியை பரப்புவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

அதோடு கடந்த 12 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு வந்து தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் தர்மேந்திரா வீட்டிற்கு வெளியில் ஆம்புலன்ஸ் வந்து நின்றது. அவரது உடல் நிலை இன்று மோசமடைந்தது. அவர் பிற்பகலில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 1960ம் ஆண்டு தில் பி தேரா ஹம் பி தேரே என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான தர்மேந்திரா பாலிவுட்டில் முடிசூடா மன்னனாக இருந்தார்.
கடைசியாக அவர் தேரி பாடன் மெய்ன் ஐசா உல்ஜா ஜியா என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படம் அடுத்த மாதம் 25ம் தேதிதான் திரைக்கு வருகிறது.
தர்மேந்திராவிற்கு பிரகாஷ் கவுர் மற்றும் ஹேமமாலினி ஆகிய இரு மனைவிகள் மற்றும் நடிகர்கள் சன்னி தியோல், பாபி தியோல், இஷா தியோல் மற்றும் அஹானா தியோல், அஜீதா மற்றும் விஜேதா என மகன், மகள்கள் இருக்கின்றனர்.




















