டெல்லி: காற்று மாசுக்கு எதிரான போராட்டத்தில் தடியடி; போலீஸ் மீது மிளகாய்ப்பொடி ஸ...
டெல்லி: காற்று மாசுக்கு எதிரான போராட்டத்தில் தடியடி; போலீஸ் மீது மிளகாய்ப்பொடி ஸ்பிரே; என்ன நடந்தது?
டெல்லியில் நாளுக்கு நாள் காற்று அதிக அளவில் மாசுபட்டு வருகிறது.
இதனைக் கட்டுப்படுத்த செயற்கை மழையை வரவைப்பது, தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது போன்ற காரியங்களில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால் காற்று மாசுபடுவதைத் தடுக்க நிரந்தர தீர்வு காணாமல் இது போன்று தற்காலிக நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
அவர்கள் சுத்தமான காற்றை வலியுறுத்தி டெல்லி இந்தியா கேட் பகுதியில் டெல்லி ஒருங்கிணைப்பு கமிட்டி என்ற பெயரில் போராட்டம் நடத்தினர்.

ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ வாகனங்கள் செல்ல இடையூராக இருப்பதாகக் கூறி அவர்களை அங்கிருந்து கலைந்து போகும்படி போலீஸார் கூறினர். அதோடு அவர்கள் சாலைக்கு வராமல் தடுப்புகளையும் அமைத்திருந்தனர்.

போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். திடீரென தடுப்புகளைத் தாண்டி சாலைக்கு வந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகன போக்குவரத்து முடங்கியது. போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.
போராட்டக்காரர்கள் மேல் போலீஸார் தடியடி நடத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் மிளகாய்ப் பொடி மற்றும் மிளகு ஸ்பிரேயரை போலீஸார் மீது பயன்படுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.
மிளகாய்ப் பொடி போட்டதைச் சற்றும் எதிர்பாராத போலீஸார் போராட்டக்காரர்களைக் கையாள மிகவும் சிரமப்பட்டனர். சில போலீஸாருக்கு கண்ணில் மிளகாய்ப் பொடி பட்டது. இதனால் அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசை ஏற்படுத்துவதோடு, மக்களை வெளியேற்றும் வகையிலான மோசமான வளர்ச்சித்திட்டங்களைச் செயல்படுத்துவதால்தான் காற்று மாசுபடுவதாகப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தில் மிளகுப் பொடியைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 9ம் தேதியும் இதே இந்தியா கேட் பகுதியில் சிலர் கூடி சுத்தமான காற்றை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் சிலர் தங்களது குழந்தைகளையும் போராட்டத்திற்கு அழைத்து வந்திருந்தனர்.















