மகாராஷ்டிரா: "மராத்தியர்கள் விழிப்புடன் இருக்காவிடில், மும்பை நம் கையை விட்டு போ...
மகாராஷ்டிரா: "மராத்தியர்கள் விழிப்புடன் இருக்காவிடில், மும்பை நம் கையை விட்டு போகும்" - ராஜ் தாக்கரே
மகாராஷ்டிராவில் மும்பை மாநகராட்சி உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஜனவரி மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
இத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகா விகாஷ் அகாடியில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவைச் சேர்க்க வேண்டும் என்பதில் உத்தவ் தாக்கரே உறுதியாக இருக்கிறார். ஆனால் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவை இக்கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதோடு தாங்கள் மும்பை மாநகராட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
ராஜ் தாக்கரே தனது கட்சியின் கொங்கன் திருவிழாவைத் தொடங்கி வைத்து பேசுகையில், பா.ஜ.கவைக் கடுமையாக விமர்சித்தார். அவர் தனது உரையில், ''மராத்தி பேசாத மக்களால் மும்பை மாநகராட்சித் தேர்தலின் அரசியல் சூழல் மேலும் மேலும் பதட்டமடைந்து வருகிறது.

எனவே மராத்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மும்பையில் வசிக்கும் மராத்தியர்களுக்கு இது மிகவும் முக்கியமான கடைசி தேர்தலாக இருக்கும். நாம் கவனக்குறைவாக இருந்தால் மும்பை நம் கையை விட்டு சென்றுவிடும். அப்படி நடந்தால் அது மராத்தி மக்களுக்குப் பேரழிவாக அமையும். வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் அதிகமாக இருப்பது கவலையளிக்கிறது.
எனவே வாக்காளர்கள் உண்மையானவர்களா அல்லது போலியா என்பதை மக்கள் கவனத்தில் கொள்வது அவசியம். மக்கள் இதில் கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டார்.
ராஜ் தாக்கரே கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். ஆனால் தேர்தலில் போட்டியிடவில்லை. கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தன் கட்சியை பா.ஜ.க அதன் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளும் என்று ராஜ் தாக்கரே எதிர்பார்த்தார். ஆனால் ராஜ் தாக்கரே கட்சியை பா.ஜ.க கழற்றிவிட்டது. இதனால் தனித்து போட்டியிட்டு அனைத்து தொகுதியிலும் தோல்வியைத் தழுவியது.
இப்போது உத்தவ் தாக்கரேயுடன் ராஜ் தாக்கரே கைகோர்த்து இருக்கிறார். ராஜ் தாக்கரேயை எதிர்க்கட்சிக் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதில் சரத்பவார் ஆதரவாகவே இருக்கிறார். ஆனால் இது தொடர்பாக சரத்பவார் தனது முடிவை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
மும்பையில் கான் யாரையும் மேயராக்க விடமாட்டோம் என்றும், இந்து ஒருவர்தான் மும்பைக்கு மேயராவார் என்றும் மும்பை பா.ஜ.க தலைவர் அமீத் சாத்தம் சமீபத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
















