மகாராஷ்டிரா: "மராத்தியர்கள் விழிப்புடன் இருக்காவிடில், மும்பை நம் கையை விட்டு போ...
`அமைச்சர் தொகுதியில், படம் போட்டு பரிசு பொருள் விநியோகம்’ - கோவி.செழியன் மீது எழுந்த புகார்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று திருவிடைமருதுார் (தனி) தொகுதி. இங்கு தி.மு.க சார்பில் தொடர்ந்து மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற கோவி.செழியன் தற்போது உயர்க்கல்வித்துறை அமைச்சராக இருக்கிறார். வரும் 2026 தேர்தலில் திருவிடைமருதூர் தொகுதியில் வேட்பாளர் கோவி.செழியன் தான் என திமுகவினரால் பரவலாக பேசப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் கோவி.செழியன் தரப்பில் வாக்காளர்களுக்கு வீடு வீடாக எவர் சில்வர் பாத்திரம் மற்றும் புடவை வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

வரும் தேர்தலை கவனத்தில் கொண்டு, வாக்காளர்களை கவரும் வகையில் அமைச்சர் கோவி.செழியன் தரப்பு முன்கூட்டியே திட்டமிட்டு பரிசுப்பொருள்களை வழங்கி வருகின்றனர். பாஜகவின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் சதீஷ்குமார் ஏற்கனவே தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். இதையடுத்து பரிசுப்பொருள் கொடுப்பதை நிறுத்தி வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் டிராக்டரில் பொருள்களை எடுத்து சென்று வழங்கி வருவதாக சொல்லப்படுவது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது குறித்து பா.ஜ.க-வின் தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் தலைவர் சதீஷ்குமாரிடம் பேசினோம், ``உயர்க் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வரும் சட்டமன்ற தேர்தலில் திருவிடைமருதூர் தொகுதியில் நான்காவது முறை போட்டியிட இருப்பதாக திமுகவினர் மத்தியில் உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக பரவலாக பேசப்படுகிறது. இந்நிலையிலையில் வாக்காளர்களை கவர்வதற்காக அமைச்சர் தரப்பு வீடு வீடாக டிராக்டரில் எடுத்து சென்று எவர் சில்வர் பாத்திரம் மற்றும் புடவை வழங்கி வருகின்றனர். இதில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, கோவி.செழியன் படம் அச்சிடப்பட்டுள்ளது. திருவிடைமருதூர் தொகுதியில் சுமார் 2.50 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

கிட்டதட்ட கட்சி பாகுபாடின்றி ரேஷன் கார்டின் படி வீடு தோறும் பரிசுப்பொருள் வழங்கும் பணியில் சில மாதங்களாக ஈடுப்பட்டு வருகின்றனர். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அமைதியாக இருந்தவர்கள் தற்போது மீண்டும் கொடுத்து வருகின்றனர்.
சுமார் ரூ.600 மதிப்புள்ள பொருளை கோவி.செழியன் தரப்பு வழங்குகிறார். அமைச்சர் கோவி.செழியனுக்கு தொகுதிக்குள் பெரிதாக நல்ல பெயர் இல்லை என்பதால் பரிசு பொருள் கொடுத்து அதை சரி செய்து வாக்கை பெறுவதற்கு இதை செய்கின்றனர்.
பெரும்பாலானவர்களுக்கு கொடுத்து விட்ட நிலையில் எதிர்ப்பு கிளம்பியது உள்ளிட்டவையால் பலருக்கு கொடுக்காமல் இருந்தது. இந்நிலையில் விடுப்பட்டவர்களுக்கும் தற்போது கொடுத்து வருகின்றனர். அரசு அதிகாரிகள், காவல்துறை உள்ளிட்ட யாரும் இதை கண்டு கொள்ளவில்லை, தடுக்கவும் இல்லை.
தேர்தல் நேரத்தில் கொடுத்தால் பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடும், தேர்தல் செலவில் கணக்கில் ஏற்றி விடுவார்கள் என்பதற்காக அமைச்சர் திட்டமிட்டு முன்கூட்டியே கொடுக்கிறார். இதற்கு கோடி கணக்கில் செலவு செய்திருக்கிறார். அந்த பணம் எங்கிருந்து வந்தது, யாருடையது என்பது எங்கள் கேள்வி.

தேர்தல் சட்டப்படி இது தவறு. எனவே கோவி.செழியன் மற்றும் பரிசு பொருள் வழங்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன் பொருள் எடுத்துச் செல்வதற்கு பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்ய வேண்டும்” என்றார்.
அமைச்சர் தரப்பில் சிலரிடம் பேசினோம், ``திமுக நிர்வாகிகள் பொங்கல் பண்டிகைக்காக இதனை வழங்கி வருகின்றனர். தேர்தலுக்காக இதை வழங்கவில்லை. அமைச்சர் கோவி.செழியனுக்கு தொகுதியில் செல்வாக்கு இருப்பதால் பரிசு பொருள் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கும் அமைச்சருக்கும் எவ்வித சம்பந்தம் இல்லை” என்றனர்.
















