"அண்ணாமலை சொன்னது சரிதானா என்று 4 மாதத்தில் தெரிந்துவிடும்" - அமைச்சர் அன்பில் ம...
"அண்ணாமலை சொன்னது சரிதானா என்று 4 மாதத்தில் தெரிந்துவிடும்" - அமைச்சர் அன்பில் மகேஸ்
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி, ஆற்றுக்குள் மீன் வளத்தைப் பேணி காக்கும் வகையில் மீன் குஞ்சுகளை ஆற்றுக்குள்ளே விட்டுவருகிறோம்.
இயற்கை வளத்தைப் பாதுகாத்து வளப்படுத்துவதற்கான பணிகளில் எங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளோம். நெட் தேர்வில், ஆசிரியர்களின் முதன்மை பாடத்திலிருந்துதான் கேள்விகள் கேட்க வேண்டும் என்பது குறித்து, ஆசிரியர் சங்கத்தைச் சார்ந்தவர்களுடன் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தினோம்.
பலரும் பல்வேறு விதமான கருத்துக்களைக் கூறியுள்ளனர். கூட்டத்திற்குப் பின் அவர்களின் கருத்துக்களை முதல்வரிடம் எடுத்து வைத்தோம். ஒரு பக்கம் சட்ட போராட்டம், மறுபக்கம் நம்முடைய ஆசிரியர்கள் ஒருவரைக் கூட கைவிட்டு விடாமல், அவர்களைப் பாதிப்புக்கு உள்ளாக்காமல், என்ன பணிகளைச் செய்ய முடியுமோ அதைச் செய்துவருகிறோம்.
இந்த விவகாரத்தில், தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே, தமிழக முதல்வர் எடுக்கும் முன்னெடுப்புகள், மிகப்பெரிய நன்மை செய்தியாக அமையும். உதயநிதிக்கு சப்ஜெக்ட் நாலெட்ஜ் இல்லை என அண்ணாமலை விபரம் தெரியாமல் கூறியுள்ளார்.
இன்றைய இளைய சமுதாயத்தினரின் திறன் மேம்பாட்டிற்கு துணை முதலமைச்சர் எடுத்துவரும் முன்னெடுப்புகளைப் பாருங்கள். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என இன்று பலரும் போற்றுகின்றனர்.

படித்த இளைஞர்கள் அடுத்த கட்டமாக வேலைவாய்ப்பு பெற தமிழக அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் துணை புரிகின்றன. ‘நான் முதல்வன் திட்டம்’ சார்ந்த பணிகளைப் பற்றி அண்ணாமலை தெரிந்து கொண்டு பேசவேண்டும். எங்கள் கூட்டணிதான் பலமான கூட்டணி என அண்ணாமலை கூறியுள்ளார். அது சரியா என்பது இன்னும் 4 மாதத்தில் தெரிந்து விடும்.
கடந்த 10 ஆண்டு காலமாக ஒரு வளமான, வலுவான கூட்டணியை தி.மு.க தலைமை தக்கவைத்துக்கொண்டுள்ளது. அதில், ஏதாவது பிளவு வந்துவிடக் கூடாதா எனப் பலரும் ஏங்கி வருகின்றனர். அதற்கு, ஒருகாலத்திலும் தமிழக முதல்வர் வழி விடமாட்டார்" என்றார்.















